Saturday, October 21, 2023

இன்றைய கேள்வி - கல்வி என்னவெல்லாம் செய்யும் மக்களே? by Akhila



இன்றைய கேள்வி:

கல்வி என்னவெல்லாம் செய்யும் மக்களே?


அது ஒன்று மட்டும் இருந்தால்செல்வம், வீரம், அறிவு, உயர்வு,பணம், பதவி, புகழ்...இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!  

குறிப்பாக, நம் தமிழ் மண்ணில், பகுத்தறிவுப் பகலவன் மற்றும் கல்வி தந்தை காமராஜர் பிறந்து, கல்விக்கான அனைத்து கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும், அனைவருக்கும் திறந்து வைத்து, விடிவெள்ளியாக பலர் வாழ்வில் அர்த்தமும், மலர்ச்சியும் தந்தது நாம் அறிந்ததே!


இரு தினங்களுக்கு முன், ஆஃப்ரிக்க மண்ணில், டான்சானியாவின் நாட்ரான் ஏரியில், இந்த கேள்விக்கு புதுப் பரிணாமம் தந்தவன்டாண்டே! 

5 நாட்களும், எங்கள் வழிகாட்டி மற்றும் வாகன ஓட்டியாகவும் இருந்த மிகச் சிறப்பாகப் பணி செய்த மாக்லானின் வழிகாட்டும் பொறுப்பு கடைசி நாள் அந்த ஊரின் சட்டப்படி, உள்ளூர் வழிகாட்டியாக 23 வயது டாண்டேவிடம்!


ஒல்லியான தேகமும், கண்களில் தெளிவும், நுனி நாக்கில் சிறப்பான ஆங்கிலமும், நீலமும் கருப்பும் கலந்த மாசாய் இன பாரம்பரிய உடையும் மட்டும் எங்களை அசத்தவில்லை! அவன் ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது, நடந்த உரையாடலில் கூறிய கல்வியின் பெருமிதம், என்னையும், என் கணவரையும் அசத்தியது...





டாண்டே - அவன் குடும்பத்தின் முதல் பள்ளிக்கு சென்ற மாணவன்;

முதல் முதலாக உயர்நிலை பள்ளி வரை முடித்தவன்‍ - அவன் அப்பாவின் தடையை மீறி! 

"துவக்கப் பள்ளியுடன் நின்று விடு..உன் அண்ணனைப் போல், எனக்கு ஆடு மாடு மேய்க்க உதவு" என்று எவ்வளவோ சொல்லியும், 

"உயர்நிலையில் தான் ஆங்கிலம் படிக்க முடியும்.. நான் பள்ளிக்குத் தான் செல்வேன்" என்று அடம் பிடித்ததாக கூறியது முதல் ஆச்சரியம்


அடுத்த ஆச்சரியம்அவன் இப்போது கற்ற ஆங்கிலம் மூலம், தந்தை, தாய், அண்ணன், தங்கைகள் அனைவருக்கும் பணம் அளிப்பதால் அனைவருக்கும் ஆனந்தம்..அப்பாவிற்கும் ஆனந்தம்( நாங்கள் பெற்றோர் மற்றும் ஒரு தங்கையும் சந்தித்தோம்!அவர் கண்களில் ஆனந்தத்தினை கண்கூடாகப் பார்த்தோம்).

"பள்ளிப் படிப்பு இலவசம்..அது படிக்கவே பெரும்பாடாகி விட்டது! நான் சுயமாக சம்பாதித்து, பணம் சேர்த்து, கல்லூரிக்குச் சீக்கிரம் செல்வேன்!" என தீர்க்கமாகக் கூறினான்!


இவை அனைத்தையும் விட பெரிய ஆச்சரியம் ..கடைசியில் அவன் சொன்ன சேதி‍ அது அவன் பிம்பத்தை மேலும் உயர்த்தியது!

அவன் தங்கைகள்(தற்போது 12 வயது மற்றும் 15 வயது)பள்ளிக்கு செல்லச் சொல்லி தந்தையிடம் போராடி அனுப்புகிறான்! அவர்கள் சமூகத்தில், பெண்கள் படிப்பதில்லை..ஆடு மாடு மட்டுமே மேய்ப்பர் எனவும், சில வருடங்களில், திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் கூறினான்!


"என்னையும், என் தன்னம்பிக்கையயும் உதாரணம் காட்டி, என் தங்கைகளை படிக்க அனுப்பச் சொல்லி கேட்டென்" என அழகு ஆங்கிலத்தில் அழுத்தம், திருத்தமாக, நிதானமாகக் கூறினான்!




டாண்டே என் கண் முன், கரண்டிக்கு பதில் புத்தகம் கொடுக்கச் சொன்ன ஈரோடு தந்தையை கொண்டு வந்தான்!


அவன் இந்த விஷயத்தை கூறி முடித்த சில மணித்துளிகளில் நாங்கள் சீறிப் பாய்ந்த ஆற்றினைக் கடந்து, நீர்வீழ்ச்சியைக் காண, மூன்றாவது முறை மலையேறும் போது...

ஆங்கிலேயர்கள் புடை சூழ, ஒரு அழகிய மாசாய் பெண்மணி, ஆங்கிலத்தில் அந்தக் குழுவிற்கு வழிகாட்டியாக, எங்கள் எதிரில் இறங்கினார். 

அவர் "ஜம்பொ"(ஹலோ என்று அர்த்தம்) என புன்னகைத்தபடி சென்றாள். 


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன், சிங்கப்பெண் நானும் தான் என்று கூறுவது போல், கடந்து சென்றாள்! என் மனதுக்குள் அவளுக்கு வீர வணக்கம் செலுத்தி, "நீ நதி போல ஓடிக் கொண்டிரு" என்று வாழ்த்தி

என் கையகல வழுக்குப் பாதையில், கவனத்துடன், என் பயணத்தை தொடர்ந்தேன்‍ ‍ - கல்வி என்னவெல்லாம் செய்கிறது என்று அசை போட்டுக் கொண்டே!


இப்பொது என் முதல் வரியை திரும்பப் படித்து, விடையை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் மக்க‌ளே!

- அன்புடன் அகிலா💜

    

2 comments:

  1. அருமையான பதிவு. அதுவும் நேரலையில் கண்டதால் அதை பகிர நினைத்த அகிலாவுக்கு நன்றிகள் பல. கல்வி என்றும் சிறப்பே

    ReplyDelete
  2. அருமையான கேள்வியும் பதிலும் அகிலா.அதன் உண்மையான உணர்வை உங்கள் வரிகள் காட்டியது.கல்வி பலருக்கு அவ்வளவு கடினம் ஆனால் அதை பெற்ற பலரும் சரியாக பயன்படுத்தினால் பல புது சமூகத்தை பல டாண்டேவை உருவாக்க முடியும்.அதற்கும் நீங்களே முன்மாதிரி எங்களுக்கு🙏🙏

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...