அலைபேசியில் யாரோ?
நான் தனியாக இருப்பதால் வேலையை விட்டு வீடு திரும்பியதும் காலையில் போட்டது போட்டபடி இருக்கும் அரைகுறை வேலைகளை முதலில் முடித்து விடுவது தான் என் வழக்கம். அம்மாவுடன் சமைத்து பழகியதால் எனக்கு நானே சமைப்பேன். வெளியில் விற்கப்படும் உணவும் அவ்வளவாக பிடிப்பதில்லை. ஒற்றை ஆளாக இருந்தாலும் வேலைக்கு குறைச்சல் இல்லை என்று நினைத்துக் கொண்டே இரவிற்கு மூன்று தோசையை வார்த்து, சமையலறையை சுத்தம் செய்து, தனியே ஓடிக்கொண்டிருந்த டிவியின் முன் அமர்ந்தேன்.
அந்நேரம் என் அலைபேசி சிணுங்க, நான் யாரென்று பார்க்க, இன்னொரு முனையில் அழகின் திருவுருவம் ஸ்ரீதேவியின் முகம் தெரிந்தது. "ஹலோ!" என்று நான் சொல்ல, மறுமுனையில் அவளும் "ஹலோ!" என்று பேச்சை தொடர, அவள் பேசுவதை கவனித்தேனோ இல்லையோ அவளுடைய ரம்யமான குரல் என்னை குலைய வைத்தது. அவளது குரலோடு அவளை நேரில் கண்டபோது ரசித்த அவள் முக பாவனைகளும் என் கண்களுக்குள் காட்சியாகியது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அவளை பார்த்து மயங்கினர். மலையின் பசுமையும் அவள் முகத்தில் அருவியாய் தெரியும் திலகமும் மேடு பள்ளங்களும் திருத்தமாய் அமையப் பெற்ற அவள் தேகமும், இப்போதும் அதை பராமரிக்கும் விதமும் என்னையே கவர்கிறது.
"என்னடா! ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? என்று அவள் கேட்டதும் "ஆ! ஆ! " என்று அவளுடைய பேச்சுக்கு காற்புள்ளி வைத்தேன். என்னுடைய பார்ட்னரையும் விசாரித்தாள் ஸ்ரீதேவி. என் பார்ட்னரையும் அவளையும் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
பல கதைகள் அவள் பேசிய பின்னாலும் என்னிடமிருந்து ஒரு சில வார்த்தைகளே பதிலாய் வர, மணி பதினொன்றை தொட்டது. பள்ளியில் பேச்சு போட்டியிலும் வென்றவள் ஆயிற்றே! அப்போதிலிருந்தே நானும் ஊமையானேன் அவளிடம் மட்டும்.
"நாளைக்கு லீவு தானடா? " என்று அவள் கேட்க, ஆமாம் என்று சொல்லவும் "உன் பார்ட்னரும் வீட்டிலில்லை தானே? நானே நாளைக்கு உன் வீட்டிற்கு வருகிறேன் " என்று என் பதிலை கூட எதிர்பார்க்காமலே அவளே முடிவு செய்தாள். பிறகு பார்க்கலாம் என்று ஒத்திவைத்த சில வேலைகளை நாளை முடிக்க நினைத்திருந்தேன். இருந்தாலும் அவளுடைய மனதை புண்படுத்த எனக்கு விருப்பமில்லை.
இத்தோடு பேச்சு முடிந்ததா? அதுதான் இல்லை . அழகன் படத்தில் வரும் மம்முட்டி - பானுப்ரியா பேச்சு போல் தொடரத்தான் செய்தது .
"நாளைக்கு வர இல்ல, மிச்ச மீதியை நேரில் பேசலாம்" என என் பேச்சுக்கு விடுப்பு கொடுத்து அலைபேசியை துண்டித்த அடுத்த வினாடியில், என்னுடைய பார்ட்னரிடமிருந்து அழைப்பு வந்தது.
" எவ்வளவு நேரம்? யாரிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாய்? உன் குரலுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது ? குட் நைட் என்று சொல்லி தூங்குவோம் என்று நினைத்தேன். நான் இல்லையேன்றாலும் யாரிடமாவது பேசிக் கொண்டே இருக்கிறாயே? என்று கண்டபடி கத்திய பார்ட்னரிடம்
" ஸ்ரீதேவி " என்று நான் சொன்னதும் எதிர்முனையில் அடங்கிப் போனது என் பார்ட்னரின் குரல்.
பள்ளித் தோழிகளான நான் , ஸ்ரீதேவி இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் வேலை பார்க்க இடையில் வந்தவர் தான் என் பார்ட்னர். நானும் என் பாட்னரும் காதலிப்பது தெரியாமல் ஸ்ரீதேவியும் என்னவரை ஒருதலையாக காதலித்தவள். பின், தன் காதலை மறக்க முடியாமல் வேறு ஐடி கம்பெனியில் அவள் சேர , எங்களின் நட்பு மட்டும் இன்றளவும் தொடர்கிறது.
இருந்தாலும் என்னவர் இருக்கும் நேரத்தில் தான் வருவதையும் பேசுவதையும் தவிர்த்தே வந்தாள் ஸ்ரீதேவி.
" ஸ்ரீதேவின்னு சொன்னதும் என்ன சத்தத்தை காணோம்? நாளைக்கு அவ இங்க வராலாம். " என்று நான் சொன்னதும் "ஓ! அப்ப நானே அங்கே வருகிறேன்." என்று மும்பையில் இருக்கும் என்னவர் என்னிடம் நக்கலடிக்க , "போதும். வழியுது. கொஞ்சம் துடைங்க! போய் ஒரு மாசம் கூட முடியல. எப்படி ஆறு மாசம் ஓட்ட போறீங்க? " என்று நானும் பதிலுக்கு கேட்க, "என்ன செய்வது ஸ்வீட்டி " என்று கம்பெனியை நொந்தபடியே வாட்ஸ்அப் காலில் என் விழிகளை சூறையாடினான், என்னவன்.

No comments:
Post a Comment