Wednesday, October 18, 2023

யாருக்கு யார் by Veena Shankar

 




யாருக்கு யார் 


காலிங் பெல் சத்தம் கேட்டதும் தான் கொறித்துக் கொண்டிருந்த தின்பண்டத்தை மேஜையில் வைத்து யாராக இருக்கும் என நினைத்தபடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் சுகுணா.  ஐம்பது  வயது மதிக்கத்தக்க பெண்மணியோடு அழகிய தோற்றமுடைய ஒரு வாலிபனும் நிற்க கதவை திறந்து விசாரித்தாள்.  பெண் அமைதி காக்க  வாலிபம் பேசியது.  விசயத்தை தெரிந்து கொண்டவள்,  அவர்களை உள்ளே அழைத்து அமரச் செய்தாள்.  ஒரு நிமிடம் என்று சொல்லி உள்ளே சென்றவள்,  தன் அப்பாவிடம் புரோக்கர் சொன்னதாக சொல்லி இருவர்  வந்திருக்கிறார்கள் என்ற விவரத்தை சொல்ல, அப்பா வருவதற்குள் வந்தவர்களுக்கு  பருக நீர் மோர் கொடுத்தாள்.  அந்த பெண்மணியை ஒரு தடவை ஏற இறங்க பார்த்து தனக்கே உண்டான பாணியில் சிரித்தாள்.  


"வாங்க ! வாங்க ! " என்று உபசரித்த சுகுணாவின் அப்பா கதிரும் அவர்கள் கையில் டம்ளர் இருப்பதை பார்த்து தன் மகளை புன்னகையோடு  அவளை உள்ளே போகச் சொன்னார் . "அப்பா! எதற்கு?"  என்று சுகுணா கேட்கவும் " போ!"  என்றார்.  


சுகுணா சென்ற பின் தன் பேச்சை ஆரம்பித்தார் கதிர் . "நீங்க என்ன பண்றீங்க?" என்று இளைஞன் ரவியை பார்த்து கேட்க,  "சார்!  நான் பிரைவேட் கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கிறேன்.  என்னுடைய சம்பளம் இருபத்தைந்தாயிரம்.  என் சின்ன வயசுலையே அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு தனித்தனியாக பிரிஞ்சிட்டாங்க . என் நிலைமையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தான் என்னை காப்பகத்தில் சேர்த்தார். கஷ்டப்பட்டு படிச்சி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மாசத்துல பிரமோஷன் கிடைக்கும்.  இதனால் வரைக்கும் நான் எப்படி இருக்கிறேன் என்று கூட என்னை பெத்தவங்களுக்கு தெரியாது"  என்று தன் சோகக் கதையை சுருக்கமாக சொல்லி முடித்தான். 


 "அப்படியானால் இவங்க உங்க அம்மா இல்லையா?"  என்று அந்த பெண்மணியை சுட்டிக்காட்டி கதிர் கேட்க,  "இல்ல சார்.  இவங்களும் என்னை மாதிரி தான் ஒரு ஆக்சிடென்ட்ல இவங்களோட கணவர் இறந்துட்டாங்க.  பிள்ளைகள் இல்லாததால அவங்க வந்து எங்க காப்பகத்தில் பத்து வருஷத்துக்கு முன்னாடியே  சேர்ந்தாங்க.  என்ன பந்தம் எங்களுக்குள்ளே ன்னு எனக்கு தெரியாது.  நான் அவங்களை அம்மா என்று  கூப்பிட்டதும் சந்தோஷப்பட்டாங்க. அதனாலே இவங்க தான் எனக்கு அம்மா"  என்று சொல்லி கதிரின் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொன்னான் ரவி.


 அந்த நேரம் பார்த்து மறுபடியும் ஹாலுக்கு  சுகுணா வர , "அம்மா சுகுணா ! போய் சேலையை கட்டிக்கிட்டு வா.  மறக்காமல் சாமிக்கு முன்னாடி இருக்கிற மல்லிகை பூவை தலையில் வைத்துக் கொண்டு வா!"  என்று அப்பா சொன்னதும்


 "ஏம்ப்பா?" என்று கேட்டாள் சுகுணா. "


 இவங்க உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க"  என்று சொல்ல, இம்முறை  "இல்லை ! இல்லை!"  என்று  சுகுணா சொன்னதும் "என்னம்மா!  வந்தவங்க முன்னாடி இப்படி என் மானத்தை வாங்கற ?" என்று அப்பா  சொன்னதும்  அவள் சந்தேகத்தோடு அப்பாவை பார்க்க,  "பரவாயில்லைங்க! அவங்க இருக்கிறபடியே இருக்கட்டும்.  நாங்க தான் முதலிலேயே பார்த்துட்டோமே! வந்தவுடன் எங்களுக்கு குடிக்க  நீர் மோர் கொடுத்ததும் இந்த பெண்ணுக்கு  என்னை பிடிக்கணும் ன்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேங்க"  என்று பவ்யமாக சொன்னான் ரவி. 


" அப்பா! என்ன நடக்குது இங்க?"  என்ன புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க?  அவர் என்னை பொண்ணு பார்க்க வரலை.  எனக்கு அம்மாவா வரப்போறவங்க கூட வந்திருக்காங்க. " என்று சுகுணா சொல்ல ஒரே குழப்பம் கதிருக்கு. 


 "என்னம்மா ! என்ன சொல்ற ? " என்று விழித்தார். " அப்பா! எனக்கு நீங்க மாப்பிள்ளை பார்க்கிறது தெரிஞ்ச பிறகு  நான் உங்களுக்கு நல்ல ஒரு துணையை தேடிட்டு இருந்தேன்.  வரன் பாக்குற புரோக்கர்  கிட்ட இதைப் பற்றி சொல்லவும் அவங்க தான் இந்த அம்மாவை இங்கே அனுப்பி இருக்காங்க.  இவங்க வரதுக்கு முன்னாடியே தனக்கு வேற வேலை இருப்பதால் கூட அவங்க பையனை அனுப்பிறதா சொன்னாரு " என்று சுகுணா சொல்லி முடிக்க, கதிரின்  குழப்பத்தை தீர்க்க ரவி முடிவு செய்து


 "ஆமாங்க மேடம்!  நீங்க சொல்றது சரிதான் . நீங்க உங்க அப்பாவுக்கு துணை தேடினீங்க.  உங்க அப்பா உங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க அதே புரோக்கரிடம் சொல்லியிருக்கிறார்.  என்னை  பற்றி தெரிந்த அவர் உங்க அப்பாகிட்ட என்னை பற்றி சொல்லியிருக்கார். அதனாலே என்கிட்ட உங்கள பெண் பார்க்க அப்பா வர சொல்லி இருந்தாங்க."  என்று சொல்லவும் மாறி மாறி அப்பாவும் பெண்ணும் ஒரே புரோக்கரிடம் அடுத்தவருக்காக துணை பார்க்க சொன்னது  அம்பலமானது. 


"இதை ஏன் நீங்கள் முதலில் சொல்லவில்லை ?"  என்று சுகுணா ரவியிடம் கேட்க,  " நீங்கள் இருவரும் அடுத்தவருக்காக வரன் பார்ப்பது தெரிய வேண்டாம்"  என புரோக்கர் தன்னிடம்  சொன்னதாக அவன் சொன்னான்.


 "நாங்களும் இப்படி ஒரே இடத்திற்கு வருவோம் என்று தெரியாமல் தான் இருந்தோம். ஆனால் இருவருக்கும் போக வேண்டிய இடத்திற்கான  விலாசம் பார்த்த போது தான் எங்களுக்கு ஆச்சரியம்" என்று குழப்பத்தை முற்றிலும் தீர்த்தான் ரவி.


 இத்தனையும்  அரங்கேற மௌனமாய் சுகுணாவின் கையை பற்றினாள் அவளுடைய வருங்கால அம்மா.  சுகுணாவோ அந்த அம்மாவின் கையை தன் அப்பாவின் கையில் ஒப்படைத்து, அவரின் எதிர்காலத்திற்கு நல்ல துணை இவள் தான் என நினைத்தபடியே ரவியை வெட்கமாக பார்க்க,  சுகுணாவின் முடிவு தெரிந்ததும் சாமிக்கு நன்றி சொல்வதற்கு முன் ரவியின் கையில் சுகுணவை ஒப்படைத்தார் கதிர்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...