Monday, October 23, 2023

கேள்வி by Veena Shankar

 


ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு விடை எல்லா சமயத்திலும் ஒன்றாக இருப்பதில்லை. இடம், பொருள் தக்கவாறு மாறுபடும். 


சமீபத்தில் என் தாய் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டிருந்த தால் ஒரு சில நாட்கள் அவருடனேயே தங்க நேர்ந்தது. அங்கே பல விதமான எண்ணங்களை கொண்ட பெண்மணிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் மட்டுமே இருந்ததால் சங்கோஜம் இல்லாமல் பழகினேன். சென்னை பாஷையில் அவர்கள் பேச, நானும் அவர்களுடைய பாஷையில் பேச ஆரம்பித்தேன். 


முதல் கேள்வி நான் ஏன் அவ்வாறு பேசினேன்? என்ற கேள்வி ஊருக்கு வந்த பின் உணர்ந்தேன். எளிதாக பழக என்னை நான் மாற்றிக் கொண்டேனோ? தெரியவில்லை.


மேலும் அவர்கள் கூறிய கதைகள் என்னை நிஜமாகவே பாதித்தது. 


ஒரு பெண் ஆடம்பர வீடு ஒன்றை கட்டி, கடன் அடைக்க முடியாமல் திண்டாடுவதும், வளர்ந்த பிள்ளைகள் இப்போது தான் வேலைக்கு செல்வதாகவும் , தானும் தன் கணவரும் சேர்ந்து கடனை சீக்கிரம் அடைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை அவருள்ளே பிறந்தாலும் அவருடைய நோய் எனக்கு புதிதாகவே இருந்தது. விரலுக்கேத்த வீக்கம் இருந்திருந்தால் இந்த கடன் தேவையில்லாதது என்று நான் புரிந்து கொண்டேன். அப்பெண்மணியைய் பார்த்துக்கொள்ள அம்மாவும் மாமியாரும் இருந்தது பெரும் அதிசயம்.


மற்றொருவரின் கதையும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய மகள் வயிற்று பேத்தியை பார்த்துக்கொள்ள வேண்டி அவருடைய இரு மகன்களின் சிறு பிள்ளைகளையும் காலை முதல் இரவு வரை ஓய்வில்லாமல் தான் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாக சொன்னார். மேலும் மருமகள்கள் வேலைக்கு செல்வதால் வீட்டில் வேலை பார்ப்பதும் இல்லை என்றார். இதனால் பலமுறை சக்கரை நோயின் அளவு கூடுவதாகவும் சொன்னார்.


இங்கே பெண்ணுக்கு பெண்ணே எதிரியோ? மகள் மற்றும் மருமகள்கள் ரூபத்தில் என்பது கேள்வியானது என் மனதில்.


மற்றொருவரின் கதையும் பேச்சும் சற்று வித்தியாசமாக தோன்றியது. தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்ததலிருந்து பேச்சு வார்த்தை கிடையாது என்றும், கணவர் இறந்த பின் தன்னுடைய மகன் வேறு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பெண்ணின் அம்மா வீட்டின் ஒரு சிறு பகுதியில் தாங்கள் வசிப்பதால் பெண்ணின் அம்மா சொல்படிதான் எல்லாம் நடக்கிறது என்று புகார் சொன்னார் . 


ஆனால் எனக்கு தெரிந்தவரையில் மகனும் மருமகளும் நன்றாக பார்த்து கொள்வது போல் தோன்றினாலும் திரைக்கு பின்னால் நடப்பதை என்னால் யூகிக்க முடிந்தது அந்த பெண்மணி சொன்ன பேச்சால். 


ஆம். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்த கையோடு பெற்றோரை சுட்டு தள்ளும் சட்டம் ஒன்று நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் தான் கோரிக்கை வைக்க போவதாக அவர் சொல்ல , முதலில் எனக்கு சிரிப்பு வந்தாலும் அவருடைய ஆதங்கம் புரிந்தது. இருந்தாலும் அப்படியென்றால் முதலில் முதல்வரை தான் சுட வேண்டியிருக்கும் என்று நான் நகைச்சுவைக்கு சொன்னாலும் ஏதோ ஒன்று என்னை நெருட செய்தது. எவ்வளவு வேதனை இருந்தால் இந்த மாதிரியான பேச்சு அந்த பெண்மணியிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தேனே தவிர தீர்வு சொல்ல தெரியாமல் முழித்தேன். அப்போதே அவரிடம் நான் இதை பற்றி குரூப்பில் எழுத போவதாக சொல்ல அவரிடமிருந்து புன்னகை மட்டும் உதிர்ந்தது.


இது ஏன் என்று தோன்றியது?


 விடையறியா கேள்விகள் பல, விடைகள் நம்மிடம் புதைந்திருந்தாலும்.

2 comments:

  1. ஆம் உண்மை.அதை பற்றி நினைக்கவே முடியவில்லை.கண் எதிரே இருதரப்பிலும் பல கொடுமைகளை பார்க்க முடியவில்லை.தனிப்பட்ட கருத்து அது மாதிரியான தருணத்தில் சுயநலமாக இருப்பதில் தவறில்லை.
    இது தான் ஞாபகம் வருது பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான பழமொழி இன்றளவும் எழுதுவதும் ஏன் என்ற வினாவோடு

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...