ஏன்? எதற்கு? எப்படி?
கேள்வி - இது நம் அனைவருக்கும் கை வந்த கலை; இயற்கையாகவே அமைந்த வரம் - பேச ஆரம்பித்த மழலை மொழி நாட்கள் முதல்..
அது எப்படி? இது எதற்கு? அது எப்படி? இது எப்படி?...என்று எண்ணற்ற வினாக்கள்..குழந்தைப் பருவம் முதல்..
ஏனோ அடுக்கடுக்கான கேள்விக்கணைகளுக்கு விளக்கம் தர - சிலருக்கு மனமில்லை, பலருக்கு தெளிவில்லை, பெரும்பாலோருக்கு நேரமில்லை!
சரமாரியான சரவெடி வினாக்களுக்கு - விடையளிக்க வழியில்லை, பதிலும் தெரியவில்லை; அதனால் இயலவில்லை!
இந்த பல "லை"களுக்கு ஈடுகட்ட, வந்து விழுந்தன - பல "தே"க்கள்!
இதை செய்யாதே! அதை கேட்காதே! அங்கே போகாதே! இப்படி பார்க்காதே! அப்படி சிந்திக்காதே..பயம் காட்ட இருக்கவே இருக்கிறது அற்புத ஆயுதம் மனிதன் மிரட்ட சா-சம்-சா!
அபத்தமோ, அற்பமோ அந்த கேள்விகளுக்கு பகுத்து ஆராய்ந்து, பதில் சொல்ல, ஏனோ கற்க,கற்பிக்க தோன்றவில்லை நமக்கு!
ஏதோ பதில், எதுவோ நடக்கும் என்று குத்து மதிப்பாக ஒரு புரிதலுடன்..எதற்கு வம்பு என்று கேள்வி மனதுக்குள் எழுப்பி ஒரு மேதாவித்தனத்துடன்..
கேள்விகளை கடந்து விடுகிறோம்; வினாக்களை விழுங்கி விடுகிறோம்; ஆர்வத்தின் ஆரவாரத்தை அடக்கி விடுகிறோம்;மதியை மழுங்க விட்டுவிடுகிறோம்!
சொல்வதை அப்படியே கேட்டு, சொல்லித் தருவதை ஒப்புவித்து, சமர்த்தென பேர் சம்பாதித்து, இதுவே சாமர்த்தியமென எண்ணி,அதுவே சாதனையென வீர நடை போடுகிறோம்!
அது வெற்று நடையென மானுடம் என்று உணருமோ?
தேடல் என்று தொடங்குமோ?
அகக்கண் என்று திறக்குமோ?
மந்தை சிந்தை மடியுமோ?...என ஏங்குகிறது நெஞ்சம்!
அது வரை..
காத்திருக்கும் நம் கேள்விகள்..உள்ளேயே!!
சின்னஞ் சிறு கண்மணிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
(முடிந்தால், சரியென்று தோன்றினால் செய்யவும்)
இன்று தேவை கேள்வி!!
கேட்டால் தான் தெளிவு பிறக்கும்; காரணம் மலரும்; காரியம் புரியும்;
கண்மூடி, வாய் மூடி அப்படியே நம்பாமல், சிந்தித்து, ஆராய்ந்து பதில் பிறக்கும்!!
அது அறிவுப் பசி!அதற்கு வாசி, பலருடன் அலசி, கடைசியாக சுயமாக சிந்தித்து, கூட்டி, கழித்துப் பார் பதில் புரியும்; அறிவியல் தெரியும்!
- அன்புடன் அகிலா💜

அர்த்தமுள்ள கோர்வையான படைப்பு அகிலா அருமை.கண்டிப்பாக நீங்கள் சொன்ன மாதிரி கேள்விகளை தடை செய்யாமல் வரவேற்று.அர்த்தமற்ற மூடநம்பிக்கையை இனியாவது வளர்க்காமல் மனதிற்கு சரியென்று படுவதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒழிய இதை தடுக்க முடியாது.
ReplyDeleteஅருமை அகிலா. தேவையுள்ள "லை" க்கள், "தே "க்கள் "சி "க்கள். அறிவுபூர்வமானதோ இல்லையோ அறிவை பெருக்க தேவை கேள்விகள். அருமையான பதிவு அகிலா.
ReplyDeleteமுக மிக அருமை மா..கேள்விகளை விழுங்கி கொண்டே ,வாழ ,கடக்க பழகி கொண்டோம்,பல தருணங்களில்..!!..விடை கிடைக்குமோ இல்லையோ ,இங்கே கேள்வி கேட்டால் , எங்கே விலகல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுவதை மறுக்க முடியவில்லை.
ReplyDelete