வினையும் விளைவும்
வகுப்பாசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவர்களுக்கு இராமாயண கதையை வாரம் ஒரு நாள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அன்றோடு இராமாயண கதை முடிவடைய இருப்பதாகவும் அதனால் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக வகுப்பிற்கு வர வேண்டுமென்றும் முதல் வார வகுப்பிலேயே சொல்லியிருந்தார். தவறாமல் வகுப்பிற்கு வந்தால் , வரும் அனைவருக்கும் சிறப்பு பரிசு தருவதாகவும் சொல்ல, அன்றைய தின வகுப்பிற்கு மாணவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருந்தனர்.
ஆசிரியரின் பேச்சை மாணவர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆசிரியர் வகுப்பு முடியும் வேளையில் தன்னிடம் ராமர் சிலையும் ராவணன் சிலையும் இருப்பதாகவும் அதில் அவரவருக்கு எந்த சிலை வேண்டுமோ அதை தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கு தனித் தனி வரிசையில் அமைதியாக நிற்குமாறும் மாணவர்களை அறிவுறுத்தினார். மேலும் அந்த சிலையினை அவரவர் வீட்டிற்கே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் சொன்னார்.
அவர் அப்படி சொன்னதும் மாணவர்கள் கூட்டம் தங்களுக்கு விருப்பமான சிலைக்காக வரிசையில் அமைதியாக நின்றனர்.
பலரும் ராமனின் சிலைக்காக வரிசையில் நிற்க, ராவணனின் சிலைக்கு வரிசையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்தே அதை கவனித்த ஆசிரியர், அந்த ராவணனின் சிலைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவனை அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அதற்கான காரணத்தை கேட்டார்.
"எல்லோரும் ராமன் சிலைக்காக வரிசையில் நிற்கிறார்கள். நீ மட்டும் ஏன் ராவணன் சிலைக்காக நின்றாய்?" என்றதும் " அதற்கு ராமனைபற்றி எல்லோரும் நன்கு அறிவர். ராவணனை பற்றியும் அறிந்திருப்பார்கள். ஆனால் தெய்வீக ராமனை எதிர்க்க ராவணன் எவ்வளவு போராடியிருப்பான்? வாழ்க்கையில் போராடுவது முக்கியம். அதில் கிடைக்கும் வெற்றியோ தோல்வியோ அது அவரவர் முன் வினையை பொறுத்தது. போராடும் எண்ணம் மிகச் சிறந்தது தானே?
இராவணனுடைய எண்ணம் தவறாக இருந்ததினால் தான் இராமனால் அழிக்கப்பட்டான். அவனுடைய சிலையை தினமும் நான் பார்க்கும் போது அவன் செய்த செயல்கள் என் நினைவுக்கு வந்து அதனால் விளையும் அழிவுகளையும் எனக்கு நினைவு படுத்தும்.
இன்றைய சூழலில் என்னால் ராமனாக வாழ முடியாது. இருந்தாலும் இராவணனாக நான் மாறி விடக் கூடாது என்பதற்காகவே பலரும் விரும்பாத இராவணனின் சிலைக்காக நின்றேன். மேலும் எல்லோரும் ராமன் சிலையை தான் விரும்புவர் என்று எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஒருவேளை சிலை கிடைக்காமலும் போகலாம். நம் இதிகாசத்தில் இடம் பெற்றிருந்த ஒருவரின் சிலையை நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன். அது ராமனோ? ராவணனோ? இந்த விசயம் எனக்கு தவறாக தோன்றவில்லை. " என்று அந்த மாணவன் பதில் சொன்னதும் ஆசிரியருகக்கே அவன் சொன்ன விடை புதிய கோணத்தில் இருந்தாலும் அவனுடைய எண்ணம் தெளிவாக இருந்த காரணத்தினால் முதலில் ராமனின் சிலையை கொடுப்பதற்கு முன் ராவணனின் சிலையை அம்மாணவனுக்கு கொடுத்து அனுப்பினார்.
போராட்டம் இல்லாத வாழ்க்கையும் ஓட்டம் இல்லாத உடம்பும் வீண் தானே?

ஆக அருமை வித்தியாசமான கதை நன்று வீணா
ReplyDeleteநன்றி தோழரே
Delete