Wednesday, November 1, 2023

பேருந்தினுள் by Veena Shankar

 


பேருந்தினுள் 


பேருந்து நிலையத்தில் மாணவர்கள், வேலையை விட்டு வீடு திரும்பும் ஆண், பெண்களின் கூட்டம் என களைகட்டியிருந்தது. ஒரு கதாநாயகன் போலே உள்ளே பேருந்து வர, கூட்டத்தில் ஒரு பகுதி அவனை ஆக்கிரமிக்க, அந்த பேருந்தில் போக முடியாது என நினைத்து , அடுத்த பேருந்திற்கு நானும், என் கணவரும் காத்திருக்க, அடுத்த கதாநாயகனும் உள்ளே வர, ஓடி போய் ஏறி முன்பக்க இருக்கையில் அமர்ந்தேன் , கல்லூரி பருவத்தில் கிடைத்த அனுபவத்தை கொண்டு.  


சில பெண்கள் இடமிருந்தும் ஓட்டுநரின் பக்கவாட்டு இடத்தில் அமர, எதற்காக இப்படி என்று நினைத்த வேளையில் பாட்டியம்மா ஒருவர் , பெரிய கூடையோடு வந்து என் துண்டு எங்கே ? என்று என்னிடம் கேட்க, எனக்கு தெரியாது என்று சொல்லியும் இல்லை இங்கே தான் என் துண்டை போட்டு இடம் பிடித்தேன் என்று சொல்ல, இருட்டில் துண்டின் மீது தான் நான் அமர்ந்திருக்கிறேன் என்று தெரியாமல் அவரின் பச்சை துண்டை எடுத்து அவரிடம் நீட்டினேன். நல்லவேளையாக என்னை எழுப்பவில்லை என்றும், சில பெண்கள் இருக்கையில் அமராததற்கான காரணத்தையும் அப்போது தெரிந்து கொண்டேன்.


பேருந்து புறப்பட்டு சில மணித்துளிகளில் என் பக்கத்திலிருந்த பாட்டி தன் கருப்பட்டியை வியாபாரம் செய்ய முயல, என்னிடம் பணமில்லை என்றும் வேறு வேலையாக செல்வதால் வாங்க இயலாது என்று சொல்லவும் என்னை விட்டு அடுத்தவரிடம் வியாபாரம் செய்தாள்.


இதற்கிடையே கூட்டத்தில் யாருக்கோ கைபேசியில் அழைப்பு வர எடுத்து பேசியவர், "ஹலோ ! என்ன! இந்த செல்வி இப்படி சட்டை தைத்திருக்கிறா? போடவே முடியல. ஒரு கை டைட்டா இருக்கு, மறு கை லூசா இருக்கு. கழுத்து ஏறி கிடக்கு. கிராஸ் எங்கேயோ இருக்கு. பட்டி மேலே ஏறி கிடக்கு. கையை தூக்கினா சட்டை மேலே ஏறுது. உயரம் குறைவா வச்சிட்டா போல. கழுத்துக்கு உள்ளாரா இருக்குற துணி வெளியே தெரியுது. டைட்டா இருக்குற சட்டையை இழுத்து புடிச்சி போடும் போது கொக்கி தனியா வந்துடுச்சி. " என புகார் சொல்ல, அடுத்த முனை ஏதோ பதில் சொல்ல, " நான் இன்னும் விவரத்தை நேரே வந்து சொல்றேன். சட்டை நல்லா இல்லைன்னா துட்டு தரமாட்டேன்" என்று சட்டை சரியில்லாததை முழுவதுமாக சொன்னாள். 


ஆனால் எனக்கு மட்டும் ஒரு சந்தேகம். சட்டையை பற்றி எல்லாமும் சொன்ன பிறகும் மீதியை நேரே வந்து சொல்வதாக சொன்னாலே என்னவாக இருக்கும் என்று. அவள் கொடுத்தது அவளுடைய அளவு சட்டையா? இல்லை கல்யாணத்திற்கு முன் பயன்படுத்திய சட்டையை, அளவு சட்டையாக கொடுத்தாளா? தெரிந்தவர்கள் விளக்க முடியுமா? அந்த பேச்சு என் காதை விட்டு விலகும் முன்.


பாட்டு, சினிமா என்று போடாததால் அரங்கேறிய மினி நாடகத்தை புன்னகைத்தவாறே ரசித்து கொண்டு வந்தேன் போக வேண்டிய ஊர் வரை.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...