ஓர் நாள் காலை
"அம்மா! " என்று அழைத்ததும் ரூபினிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. "முன்பெல்லாம் ஆறு மணிக்கு வந்து கத்தி கொண்டு இருந்தா? இப்போ கொஞ்சம் லேட்டா வந்து என் உயிர வாங்குறா!"
அந்த சத்தம் கொடுக்கும் பெண் ஆறு மணிக்கு வந்த போதும் இதே புலம்பல் தான் இருந்தது ரூபினியிடம். "காலையில் விடிந்ததும் விடியாததுமாய் வர்ரா? என்ன செய்யுறது? எல்லா பாடையும் நான் தான் பார்க்க வேண்டியிருக்கு" என்றாள்.
"ஆளுக்கு ஒரு வேலையை எடுத்து செஞ்சா எல்லாரும் சீக்கிரம் கிளம்பிடலாம்" என்று தன் அவசரத்தை சொல்லிக்கொண்டே குக்கரின் விசிலை தலையில் அடைத்தாள். அதன் ஆவியும் அடங்கியது அவள் பேச்சில்.
"என்னங்க! என்ன செய்றீங்க? " என்று கேட்டாலும் அவள் கணவனிடமிருந்து பதில் வரவில்லை. "என்னதான் அங்கே இருக்கோ? எத்தனை தடவை சொல்லியிருக்கேன். போனோமா வந்தோமோ என்று இருக்க வேண்டுமென்று. சொல்றதுக்கு சின்ன குழந்தையா? " என பொருமினாள்.
காலை வேளையில் இவள் எங்கே போனாள்? என்று தன் மகளை தேட , தான் மாடி அறையில் படித்து கொண்டிருப்பதாக பதில் வர, வேறு வழியில்லாமல் குப்பை கூடையை கையிலெடுத்து வர மறுபடியும் குப்பை வாங்க வரும் பெண்ணிடமிருந்து விசில் சத்தம் வர, "இரும்மா! வரென்," என்று சொல்லிக்கொண்டே முன் அறைக்கு வந்தவளிடம் "குடும்மா! நான் குப்பையை கொட்டிட்டுட்டு வரேன்" என்று அவள் மாமியார் கேட்க, "வேண்டம்மா! இதை நீங்க தொட வேண்டாம்" என்று சொல்ல, " நீ வேற வேலை இருந்தா பாரு. தொட்டா என்ன குத்தமாகி போயிடுமா? எல்லா வேலையையும் நானும் பார்த்தவள் தான் " என்று பாந்தமாக மாமியார் கேட்க, வழியில்லாமல் குப்பையை அவளிடம் ஒப்படைத்தாள். கூடவே மறு கையில் இருபது ரூபாயை அந்த குப்பையை வாங்கவரும் பெண்ணிடம் கொடுக்குமாறு சொல்லி ரூபாயை நீட்டினாள். அதை வாங்கி அப்பெண்ணிடம் கொடுத்தவள், " மகராசி. நல்ல இருக்கணும்" என்ற வாழ்த்து ரூபினிக்கு கேட்டதும் புத்துணர்வு பெற்றது போல உணர்ந்தாள். ஆம் நேரம் இருக்கும் போது அவளிடம் பேச்சு கொடுப்பாள் ரூபிணி. அவள் தன் கஷ்டங்களை பகிர ஆள் தேடி ரூபிணியிடம் மட்டுமே சொல்லுவாள். அவ்வப்போது பணம் கொடுத்து உதவினாலும் இந்த இருபது ரூபாய் தனி கணக்கு. பல நாட்கள் ரூபிணி சொல்லும் வேலைகளையும் செய்வாள் அந்த பெண்.
ஈரமுள்ள நெஞ்சும் எப்போதும் படபடக்கும்.

No comments:
Post a Comment