மறந்தே போய் விட்ட கிராம விளையாட்டுக்கள்
விளையாட்டு என்பது ஒருவித உடற்பயிற்சி தான். விளையாட்டுக்களை இரு விதமாக பிரிக்கலாம். ஒன்று வீட்டில் அமர்ந்து கொண்டு விளையாடுவது மற்றொன்று வெளியில் விளையாடுவது. கிராம விளையாட்டுக்கு எப்போதும் தனி மவசு உண்டு. இருந்தாலும் அவை சர்வதேச போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்பது தான் உண்மை.
கிராமங்களில் அந்த காலத்திலேயே டயர் வைத்து விளையாடுவதும், கிட்டி புல், பச்சை குதிரை, பாண்டி விளையாடுதல், பல்லாங்குழி விளையாடுதல், பரமபதம் என்று பல விளையாட்டுகள் இருந்த போதும் அதை இன்று விளையாடுபவர்கள் இல்லை. கையில் அலைபேசி வைத்துக் கொண்டு விளையாடுவதையே மதிப்பாக எண்ணுகிறார்கள்.
அன்று மின்சார விளக்குகள் இல்லாத நேரத்திலும் அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்திலும் தெருவில் இருக்கும் அத்துனை குழந்தைகளும் ஒன்றுசேர கத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடுவது என்பதை இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
பல்லாங்குழி விளையாடுவது என்பது நம்முடைய விரல்களுக்கு ஒரு உடற்பயிற்சி. பாண்டி விளையாடுதல் நான்கு கட்டத்துக்குள் நம்முடைய திறமையை ஒற்றைக்காலுடன் நின்று காட்டுவதாகும். அதேபோல பச்சை குதிரை என்பது நம்முடைய தாண்டும் உயரத்தை கணக்கிடக் கூடியதாகும். பரமபத விளையாட்டும் முக்கியமானது தான். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதனை சூசகமாக தெரிவித்த ஒரு விளையாட்டாகவே நான் அதை நினைக்கிறேன்.
மேலும் கண்ணாமூச்சி விளையாடுவது என்பது மறந்தே போய்விட்டது. இந்த மாதிரி கிராமத்து விளையாட்டுகளை அந்த காலத்தில் நகரத்திலும் விளையாடிய பிள்ளைகளும் உண்டு. ஆனால் அதை தற்போது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. ஏனென்றால் கையடக்க அலைபேசியிலேயே எல்லாவித விளையாட்டுக்களும் வருகிறது. அது நம் விரல்களுக்கும் கைகளுக்கும் உடற்பயிற்சி அல்லாது வலியை தான் ஏற்படுத்துகிறது என்பதை யாரும் உணர்வதில்லை.
தற்போது கூட நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், கல்லாங்காய் என்ற ஒரு விளையாட்டு. அதில் யார் முதலில் பழம் எடுப்பது என்பதே சிறப்பு. அது அல்லாது வரிசையாக வளையல்களை அடுக்கி, அதனை தரையில் போட்டு எந்த வளையலும் அசையாமல் அதனை பிரித்து தனியே எடுத்து விலக்கி வைத்து விளையாட வேண்டும்.
கோலி விளையாட்டும் மிகவும் சுவாரஸ்யமானது. அன்றைய ஆண் குழந்தைகளால் பெரும்பாலும் விளையாடப்பட்ட விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. மேலும் பம்பரத்தை சுழல விடுவதும் அந்த பம்பரத்தை லாவகமாக கையில் எடுத்து உள்ளங்கையின் மத்தியில் வைத்து தங்கள் வீரத்தை விளையாட்டாய் காட்டுவதும் இன்றைய சிறுவர்களுக்கு கிடையாது.
இன்றளவும் ஒரு சில கிராமங்களில் இப்படிப்பட்ட விளையாட்டுகளை நாம் என்றாவது காணலாம்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் விளையாட்டை போராடி மீட்டிருக்கிறோம். ஒரு சில இடங்களில் சேவல் சண்டைகளையும் காண முடியும். இவ்வாறு பழமை வாய்ந்த விளையாட்டுக்கள் நம் கண் முன்னே அடுத்த தலைமுறை விளையாடுவதை காண முடிவதில்லை. எனவே இந்த வீர விளையாட்டுகளையும் ஒவ்வொரு விழாக்கள் நடைபெறும் போது போட்டி வைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கொண்டு செல்ல வேண்டும்.
இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டான கிரிக்கெட் தான் இன்று உலக அளவிலும் பேசப்பட்டு வருகிறது. அதைப் போல நம்முடைய கிராம விளையாட்டுக்களையும் நகரத்திற்கு கொண்டு செல்வதும் நகரத்திலிருந்து நாட்டிற்கு கொண்டு செல்வதும் நாட்டிலிருந்து சர்வதேச விளையாட்டு போட்டியாகவும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த வாய்ப்பு கிடைக்கும் எனில் அதை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கான ஆயத்த முயற்சியில் இறங்கி, நம் பிள்ளைகளுக்கு இந்த மாதிரியான விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு ஊக்கமும் தந்து அவர்களை கலந்து கொள்ள வைப்பது இந்த தலைமுறையில் வாழும் நம் பொறுப்பு என்பது என் கருத்து.

No comments:
Post a Comment