Tuesday, April 18, 2023

நட்பின் அடையாளம் எது? by Veena Shankar



 நட்பின் அடையாளம்.எது? 



                              வனிதாவுக்கும் விவேக்கிற்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் வேலை நிமித்தமாக வனிதா காலையில் சென்று மாலை வர, மாலை முதல் காலை வரை விவேக்கிற்கு வேலை. ஒருவர் வீட்டிற்கு வந்தவுடன் மற்றொருவர் வேலைக்கு மாறி மாறி செல்ல அவர்கள் வாழ்க்கை புளித்துப் போனது. எந்த ஒரு விஷயத்தையும் பேசி முடிக்க முடியவில்லை அவர்களால். கிடைக்கும் ஒரு நாள் வார விடுமுறையும் இருவரிடையே புரிந்து கொள்வதை விட அவசரத்திலேயே சென்றது. 


                           மேலும் அன்றைய வாரத்திற்கான பொருட்களை வாங்குவதிலும் என்ன வேலை விடுபட்டு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதை செய்யவும் சரியாகி போகும் வார விடுமுறை. அப்படியே நாட்கள் செல்ல உறவினர்களின் நச்சரிப்பும் ஆரம்பமானது. குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி வனிதாவை சுப காரியங்களில் விலக்கி வைத்தனர். ஆனால் இந்த விஷயத்தில் விவேக்கும் வனிதாவும் சரியான பாதையிலே பயணித்தனர். எல்லாம் இன்னும் மூன்று மாதத்திற்கு தானே என்று தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். 


                                  எப்போதும் விவேக் வீடு திரும்பியவுடன் பணிக்கு செல்வாள் வனிதா. அன்று காலையில் சற்று முன்கூட்டியே வேலைக்கு வனிதா கிளம்பி விட்டதால், வீட்டின் தரையில் டெலிபோன், ஈபி பில் கட்ட வேண்டும், வாடகை பணத்தை பேங்கில் கட்ட வேண்டும் என்ற பல விஷயங்களையும் எழுதி வைத்து, கடைசியில் மாவு புளித்து விடப் போகிறது, அதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்றும் விவேக் காண்பதற்காக எழுதி வைத்திருந்தாள். ஆனால் அன்றைய தினம் விவேக்கின் நண்பன் வீட்டிற்கு வர கீழே எழுதி வைத்ததை பார்த்து அவனை கிண்டல் செய்தான். உங்கள் குடும்பம் இப்படித்தான் நடத்துகிறதா? என்று அவனை கலாய்த்ததோடு மட்டுமல்லாமல் மனத்தையும் புண்படுத்தி பேசி விட்டான்.


                            அன்றைய தினமே விவேக், இனிமேல் வனிதாவை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டான். இதனால் வீட்டில் பெரும் பிரளயம் ஏற்பட்டதே தவிர எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. நண்பன் ஒருவன் அடுத்தவருக்கு நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர அவனைக் கிண்டல் செய்து அவன் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர காரணமாக இருக்கக் கூடாது.


         நல்ல நண்பனே நட்பின் அடையாளம் நல்ல நட்பின் அடையாளம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...