கணக்கும் சரியே!
"எப்ப பார்த்தாலும் டிவி வீடியோ தான். படிப்பதே கிடையாது" என தன் ஐந்து வயது மகன் விகாஷை திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள் பத்மா . எப்போதும் தன் அம்மா வரும் சத்தம் கேட்டதும் டிவியை அணைத்து விடும் அவன் அன்று என்னவோ சுவாரசியமான நிகழ்ச்சியில் மூழ்கி இருந்தான். அவளின் வரவை கவனிக்கவில்லை. "வந்ததும் வராததுமாய் பிள்ளையை திட்டாதே!" என அவள் மாமியார் சொல்ல, "ஆமா ! எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான் . இன்னிக்கு ரிப்போர்ட் கார்டு வாங்க அவன் ஸ்கூலுக்கு போனப்போ அவனோட கிளாஸ் மிஸ் இவன் கணக்கு சரியா போட மாட்டேங்குறான். தமிழ், இங்கிலீஷ் எழுத்து கூட்டி படிக்கவும் தெரிய மாட்டேங்குது. அது படித்தால் தான் மற்ற சப்ஜெக்ட் எல்லாத்தையும் ஈசியா படிக்க முடியும். கொஞ்சம் வீட்டில் அவனை கவனிங்க. வேலை வேலைன்னு நீங்க அலஞ்சி பிள்ளைங்க வீட்ல என்ன செய்றாங்க என்று கவனிப்பதே கிடையாது என முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டார். இதனால் எனக்கு ஆபீஸ்ல வேலையே ஓடல . ஸ்கூல் விட்டு வந்ததும் அவனை ஹோம் ஒர்க் எழுத சொல்லுங்க அத்தை! " என தன் மாமியாரையும் விரட்ட, அவளுடைய டென்ஷனை புரிந்து கொண்டவளாய் மாமியார் அமைதி காத்தாள்.
தன் வேலையை முடித்து வந்தாலும் விகாஷ் டிவி பார்ப்பதை கண்டு கோபமடைந்த பத்மா, சைல்டு லாக் போட்டு விட்டாள். மேலும் டைமரில் ஒன்றை செட் செய்து தினமும் நீ அரை மணி நேரம் மட்டும் தான் டிவி பார்க்க முடியும். எந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள். அன்றைய நாளுக்கான அரை மணி நேரம் ஆனதும் டிவி தானாக ஆப் ஆகிவிடும்." என்று எச்சரித்து சென்றாள்.
இனியும் அம்மா தன்னை டிவி பார்க்க விடமாட்டாள் என எண்ணிய விகாஷ் மெதுவாக தன் பாட புத்தகத்தை திறந்து அம்மாவின் வரவிற்காக காத்திருந்தான்.
சரியாக ஒரு மாதம் கழித்து மறுபடியும் அந்த மாதத்திற்கான ரிப்போர்ட் கார்டை வாங்க வருமாறு டீச்சர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய, மறுநாள் பத்மா ஸ்கூலில் ஆஜர் ஆனாள், இன்று அந்த டீச்சர் என்ன சொல்ல போகிறாள் என்ற பதட்டத்தோடு. ஆனால் அவரிடம் ரிப்போர்ட் கார்டை வாங்கி பார்க்க ஆச்சரியமடைந்தாள் பத்மா. சிவப்பு கோடுகள் மறைந்து எல்லாம் நீல வண்ண எழுத்துக்களாய் விகாஷின் மதிப்பெண்கள் காட்டப்பட்டதை உணர்ந்தாள். இம்முறை வாயை திறக்க மறந்தார் டீச்சர்.
அன்று வீட்டிற்கு வந்ததும் " பார் நீ டிவி பார்க்காததால் தான் நிறைய மார்க் வாங்கி இருக்கிறாய் " என்று பத்மா சொன்னதும் ஓடிப்போய் ஏதோ நோட்டை கொண்டு வந்து தன் அம்மாவிடம் விகாஷ் காட்ட, "இது என்னடா? என பத்மா திறந்து பார்க்க அதில் ஏதோ ஒரு கணக்கு, தமிழ் , ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டிருந்தது. பத்மாவின் கேள்விக்கு விகாஷே பதில் சொல்ல ஆரம்பித்தான். "ஆமாம்மா! நீ அரை மணி நேரம் மட்டும்தான் டிவி பார்க்கணும் என்று சொல்லிவிட்டாய். நான் தினமும் டிவி பார்க்கும் நேரத்தை அரை மணி நேரத்திலிருந்து கழித்து ஒவ்வொரு நாளும் கூட்டி, கழித்து போட, அதுவே எனக்கு கணக்கில் நல்ல மார்க் வாங்க வச்சுது . எனக்கு புரிய வேண்டுமென்பதற்காக சில தமிழ் , இங்கிலீஷ் வார்த்தைகளை எழுத்து கூட்டி எழுதி வைத்தேன். அதுவுமில்லாம சண்டே லீவு என்பதால் எனக்கு பிடிச்ச சிங்க் சான் நல்லா என்ஜாய் பண்ணி பார்த்தேன்" என்று மழலை மொழியில் சொன்னதும் அவளுக்கு தன் கணவன் வீட்டு கணக்கை எழுதும் ஞாபகம் வந்தது. மாத சம்பளம் வாங்கியவுடன் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் கணக்கு போட்டு விகாஷின் படிப்பிற்காக சுமார் இரண்டு லட்சம் வரை சேர்த்து வைத்திருந்தான்.
வீட்டு வரவு செலவு கணக்கையும் விகாஷிடமே எழுத சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சின்ன சின்ன மனக் கணக்குகளை செய்வதன் மூலம் மூளை வேகமாக செயல் படுவதால், பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என்று நினைத்துக் கொண்டாள் பத்மா. தான் அத்தகைய பயிற்சி அவனுக்கு கொடுக்காவிட்டாலும் ஏதோ மனதில் பட்டதை எழுதி வைத்து அவனுக்கு அவனே பயிற்சி கொண்டதை எண்ணி பெருமிதப்பட்டாள்.
இந்த வேளையில் தன் கணவனின் பிரிவை உணர்ந்தவாரே விகாஷை கட்டி அணைத்துக் கொண்டாள்.
எதிவும் பயிற்சியின் மூலம் சிறப்பாகும்

No comments:
Post a Comment