Saturday, August 5, 2023

அனுமானம் by Veena Shankar

 


அனுமானம்


" ஹலோ அண்ணே! எல்லாம் ரெடியா?

மாப்பிளை வீட்லேர்ந்து வர்றதுக்குள்ள கொஞ்சம் ரெடி பண்ணி வெச்சுடுங்க. சரியா ஐந்து மணிக்கு வந்துடுவாங்க " என்று பிரேம் சொல்ல, சரிங்க என்று எதிர்முனையில் இருப்பவர் பதிலளித்து, மறுபடியும் ஏதோ சந்தேகம் கேட்க அதற்கும் விளக்கம் கொடுத்தான்.   


மீண்டும் பிரேம் , " பெரிய இடத்துலேர்ந்து வர்றதால நாமளும் அதற்கு ஏற்றார் போல் கரக்டா இருக்கணும். அவங்க குடும்பம் பெருசுன்றதால இன்னும் நிறைய கல்யாணம் கூட நடக்கும். ஸ்ப்ரே போட்டு எல்லாம் அழகா தெரியணும். பூ போட்டு அலங்காரமும் கலையாம பார்த்திகிடனும். நிறைய மாலைகள் போட்டு சிறப்பா காமிக்கணும். அவங்க வந்து பார்த்தா நம்ம ரதி நிஜ ரதியா? என்று மலைச்சு போகனும். அழகுல மின்னி முதல் தடவை பார்க்கும் போதே அவங்களுக்கு பிடிச்சி போய் ஓகே சொல்லனும். மறக்காம நம்ம இடத்தையும் முழுசா சுத்தி காமிக்கணும். நம்மகிட்ட இருக்குற வசதியையும் கெத்தையும் காட்டணும். அவங்களும் விசாரிச்சு தான் வந்திருப்பாங்க. எல்லாம் சரியா பண்ணிடுவ இல்ல?


" இந்த நேரம் பார்த்து நான் வெளியூர்ல மாட்டிக்கிட்டென். நீ தான் நல்லா பேசணும் . என்கிட்ட எதிர்த்து பேசுற மாதிரி அவங்க கிட்ட பேசாதே. அப்புறம் வேண்டாம் ன்னு சொல்லிட்டாங்க ன்னா அப்புறம் நான் சிக்கல்ல மாட்டிப்பேன். அதானால கொஞ்சம் அனுசரணையாக.." என்று இழுக்கவும், "ஓகே. நீங்க கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க இல்லாத குறை மட்டும் தான். நான் ஜமாய்ச்சுடறேன். " என்று எதிர்முனையிலிருந்து பதில் வரவும் " சரி" என்று தலையசைத்து போனை கட் பண்ணினான் பிரேம்.


 ரொம்பவே நேரமாகவே போனில் பில்டப் கொடுக்க பக்கத்திலிருந்த அவன் நண்பன் ஹரி, வியந்து பிரேமை பார்த்தான்.

என்னடா நடக்குது இங்க என்பது போல். அதற்கு பிரேம் அவனிடம், "இல்லைடா ஹரி! இன்னிக்கு எங்க மண்டபத்தை பார்க்க நம்ம எம் எல் ஏ வோட தங்கச்சி வர்றாங்க. அதான் மண்டபத்தை நீட்டா வைக்க சொன்னேன். எப்பவும் நீட்டாத்தான் இருக்கும். ஆனாலும்..." என்று சொல்லி முடிக்க, போடா போ நானும், உன் தங்கச்சி ரதியை பார்க்க மாப்பிளை வீட்டுக்காரங்க வர்றாங்க ன்னு நினைச்சேன். என்று சொல்லி பிரேமை பார்த்து முறைத்தான்.


சிலநேரம் பிறர் மீதான நம்முடைய அனுமானம் கூட தவறலாம். அதற்கு சூழ்நிலை காரணமாவதும் உண்டு. அனுமானம் தவறினாலும் அணுகுமுறை தவறக் கூடாது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...