Saturday, August 5, 2023

" டை " எழுத்திற்கு ஓர் கதை by Veena Shankar

 


" டை " எழுத்திற்கு ஓர் கதை



எடைக்கு காடையை விற்ற காசு, கிடையில் ஒளித்து வைத்தது நினைவுக்கு வர, காசை சுருக்குப் பையில் போட்டுக் கொண்டு கடை பக்கம் போன முதியவளுக்கு கண்ணில் பட்டது வடை. நாவிற்கு தடை ஏதும் சொல்லாமல் தான் வைத்திருந்த காசில் வடையை வாங்கி புத்தகத்தின் ஏடை கிழித்து , அதில் வடையை மடித்து கூடையில் வைத்தாள்.


 அப்போது கோடை மழையின் பலனாய் லேசான தூறல் விழ, அடை மழை வருமோ என்று சந்தேகப்பட்ட கிழவி ,குடை இல்லாமல் தவிக்க, இடையில் சொருகியிருந்த தன் ஆடையின் நுனியை பிடித்து தலை மேல் போர்த்திக் கொண்டு ஓடை ஓரம் நடந்து செல்கையில் , இரட்டை சடை போட்ட பெண்ணை பார்ப்பது போல அவளை சாடை மாடையாக பார்த்தான் கிழவன் ஒருவன் தன் வாயில் சீடையை அடைத்தவாறே .


 கிழவியும் தன் உடையை சரி செய்தவாறே அவனிடம் சோடை போய் விடுவோமோ என்ற பயத்தில் தவித்து, தாடையை வெட்டி திரும்பினாள், வந்த உமிழ்நீரை துடை என்று கிழவனிடம் சொல்லியவாறே.  


கிழவனோ, அவள் முன்னே தொடை தெரிய வேட்டியை உருவி, ஒரு பக்க வாயை துடைக்க, தன்னை அறியாமலே தோடை பதம் பார்த்தது அவன் கரங்கள். 


" ஆ" வென்ற சத்தம் கேட்டு தன் நடை திருப்பிய கிழவி, பாடையில் போகும் வயதில் இது தேவை தானா? என வசவு கிழிக்க, தனக்கு கிழவியிடமிருந்து விடை கிடைத்ததை எண்ணி சிரித்து கொண்டே குடிமக்கள் புடை சூழவும் படையோடு வரும் அரசன் போல் கிழவன் நின்றான் மேடையில். 


மடை திறந்த வெள்ளமாய் கிழவன் கிழவியை பார்த்து காதல் பேச்சு பேச, வாடை காற்றின் வசந்தத்தை , தன் பேச்சை கேட்பவர் மனதிலும் புகுத்தினான் கிழவன்.  


மேலும் "மூடையுள் என்ன பீடையோ? " என்று தன் பேச்சை மாற்றி, கிழவியை அவள் நிலையிலிருந்து திசை திருப்ப முயல, ஊர் பெரியவர்களின் கொடையால் அரங்கேறிய நாடகத்தில் இடைவேளை வந்தது. மீண்டும் தொடர்ந்த நாடகம் சில நிமிடங்களில் முடிய , கூட்டமும் கலைந்தது.


 கிழவனுக்கும் கிழவிக்கும் பாராட்டு குவிந்தது , எதார்த்த நடிப்பை வெளிக்காட்டியதால். 


வாழ்க்கையில் 

எப்படியோ அப்படியே நடிப்பிலும் என நாடகக் குழுவினர் அவர்களை கண்டு ஆச்சரியமடைந்தனர்.


பயன்படுத்திய "டை" சொற்கள்


அடை , ஆடை , இடை, உடை , எடை , ஏடை , ஓடை , கடை , காடை , கிடை , குடை, கூடை , கொடை , கோடை , சடை , சாடை , சீடை, சோடை , தடை , தாடை, துடை , தொடை , தோடை , நடை , படை , பாடை , பீடை , புடை , மடை, மாடை , மூடை , மேடை, வடை , வாடை , விடை

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...