Monday, August 14, 2023

பழியும் பலியும் by Veena Shankar

 


பழியும் பலியும் 


"ஏங்க! இந்த வீட்டுக்கு நாம குடி வந்து பதினைந்து வருஷம் ஆச்சு. என்ன தான் இந்த மாமியும் மாமாவும் நமக்கு ஒத்தாசையாக இருந்தாலும் இன்னும் இப்படியே இருக்கிறது அவ்வளவு நல்லா இல்லைங்க. அவங்க வாடகையை உசத்தி கேட்டா கூட கொடுத்திடலாம். ஆனா அவங்க இவ்வளவு பெரிய வீட்டுக்கு வெறும் நாலாயிரம் மட்டும் வாங்குறது எனக்கென்னமோ ஒரு மாதிரியாக இருக்குதுங்க" என்று தன் சொந்த வீட்டு கனவிற்கு அடித்தளமிட்டாள் கனகா . " ஏண்டி! உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்த இடத்தில ஸ்கூல், ஆஸ்பத்திரி, ரேஷன் கடை எல்லாம் பக்கத்திலேயே இருக்கு. முக்கியமா இந்த சென்னையில தண்ணி கஷ்டம் இல்லாத ஒரு இடம் ன்னா அது இது தான். இந்த இடத்தை விட்டு வேற எங்க போக முடியும். அதுவும் நம்ம சுமதி திரள்ட்ற வயசுல இருக்கா? ஒரு அம்மாவா இது கூட உனக்கு தெரியமாட் டேங்குறதே!" என்று கனகாவை திட்டி கொண்டே ஷேவிங் செய்ய போனான் விசு. 


இனி பேசினால் வம்பு என்று தன் பேச்சை ஆறப்போட்டாள். தன் சம்பாத்தியத்தில் மூன்று காலி இடத்தை வாங்கி போட்டுள்ளான் விசு. ஒரு இடத்திலாவது வீடு கட்டி குடியேற வேண்டுமென்பது கனகாவின் கனவு.


இவர்களுக்கு சுமதி ஒரே பெண் குழந்தை. எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் படு சுட்டி, படிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலும். அதனால் வீட்டின் ஓனர் தம்பதியருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுடைய இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் வேலை செய்வதால் பேரன் பேத்திகள் இருந்தும் காணாமல் தவித்தனர். 


மழை சாரல் போல நாட்கள் நகர, அன்று அடை மழை பெய்ய தொடங்கியது வீட்டினுள், அதுவும் கனகாவால். விசு வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் ஒரு தம்பளர் காபியை கலந்து கொடுக்க, " இந்த வீடு வேண்டாம்ங்க. வேற வீட்டுக்கு போவோம்" என்று அமைதியாய் கனகா ஆரம்பித்த பேச்சிற்கு, " அதெல்லாம் முடியாது " என்ற பதில் விசுவிடமிருந்து வரவும் , "அதான் இடம் வைத்திருக்கிறோம் இல்ல. அதில் நமக்கான ஒரு இடத்தில் வீடு கட்டி போவோம்ங்க " என்று மீண்டும் சொன்னாள் கனகா. " அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்தான் விசு. 


விசுவின் பெற்றோர் சிறுவயதிலேயே இறந்து விட, அவன் தன் தாத்தா பாட்டியின் வீட்டில் வளர்ந்ததால், தன் மகளுக்கும் அந்த பந்தம் விட்டு போய் விடக்கூடாது என்று நினைத்தே மறுத்தான் விசு. கனகாவின் பெற்றோரும் அவள் தம்பியிடம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் 


"சரிங்க! இனி உங்க இஷ்டம். ஆனால் நான் இப்போ சொல்றேன் பாருங்க. அதையாவது கேளுங்க. வேறு வீட்டுக்கு போவோம் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கு. நம்ம கீழ் வீட்டு தாத்தா நம் சுமதியிடம் என்னன்னவோ அசிங்கமா பேசி கேட்டிருக்கிறார் . வேணும்னா நீங்க சுமதியிடம் கேட்டு பாருங்க. " என்றதும் அவனுக்கு வந்த கோபத்தில் வீடு ரணகளப்பட, கனகா அவரை பற்றி தவறாக பேசுவதாகவும், இதைப்பற்றி அவரிடமும் சுமதியிடமும் தான் கேட்க போவதில்லை என்றும் சொல்லி கத்தினான்.


 "உங்களோடு பேசினால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் " என்று கனகா இடத்தை காலி செய்ய, படுக்கையில் புரண்டு படுத்தவனுக்கு பலதும் தோன்றியது. ஒருவேளை கனகா சொல்வது உண்மையாக இருந்தால் என்றும் தன் அப்பா ஸ்தானத்தில் அவரை வைத்து பார்த்தவனுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.


ஆடி காற்றுக்கு அம்மியும் நகரும் என்பது போல ஆனது. ஆம் ! விசுவின் மனம் மாறி கனகா விரும்பிய இடத்தில் வீடு கட்டும் பணி விரைவாய் நடந்து முடிந்து குடியேறியும் விட்டது விசுவின் குடும்பம்.


தான் கண்ட கனவு பலித்து விட்டதாக கனகா நினைத்தாலும் , சொந்த வீடு கட்டினால் தான், தனக்கு நல்ல தூக்கம் வரும் என்று நினைத்தது மட்டும் தவிடு பொடியானது. 


ஆம்! குடியேறி பல மாதங்கள் ஆனாலும் ஏதோ ஒன்று அவளை துரத்தியது. வீட்டை அப்படி பராமரிப்பேன் என்று சொன்ன கனகா, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காதது கண்டு விசுவும் ஆச்சரியப்பட்டான்.


ஒரு நாள் விசுவும், சுமதியும் இல்லாத சமயம் அந்த பழைய வீட்டு தாத்தாவுடன் போனில் பேசிய கனகா, கண்ணீர் விட்டு அழ, அவளை தேற்றினார் தாத்தா.   


தான் பொய் சொன்னதால் தான் தூக்கம் வரவில்லை என்றும் தான் விசுவிடம் உண்மையை சொன்னால் மட்டுமே நிம்மதியாய் இருக்க முடியும் என்று தாத்தாவிடம் கனகா சொல்ல, தாத்தா அவளை கடிந்து கொண்டார் . "பைத்தியம் மாதிரி பேசாதே. நீ சொந்த வீடு கட்டனும்ன்னு எவ்வளவு ஆசைப்பட்ட,? என் பொண்ணுக்காக நான் இந்த உதவி கூட செய்யமாட்டேனா? " என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார் தாத்தா.


இருவருக்குள்ளும் ஏன் இந்த உரையாடல்? கனகாவின் புது வீட்டு கனவுக்காக தாத்தா பழியேற்று இருக்கிறார் என்பதே உண்மை. தாத்தா மீது பழி போட்டு தான் புது வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று கனகா சொன்னதற்கு அவளை சமாதானப்படுத்தி ஏற்க வைத்துள்ளார் தாத்தா. இதைப்பற்றி விசு தன்னிடம் கேட்க மாட்டான் என்றும் அவர் மனைவியிடம் இதை சொல்லவேண்டாம் என்றும் கனகாவின் கேட்டு கொண்டார்.


இருந்தாலும்

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் தானே?

தான் போட்ட பழிக்கு தானே பலியாகி விட்டாள் கனகா மனதால். அடுத்து கனகாவின் முடிவு என்ன? காத்திருந்தது காலம்


நிம்மதி மனதால் அடையக் கூடியது. பிறரின் தியாகத்தால் கிடைத்தாலும் அது நிலைக்காது.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...