புதிய முகம்
காலை ஆறு மணிக்கு அலைபேசி அழைக்க, அதை தூங்க வைத்து எழுந்தாள் தேன்மொழி. காலை கோலம் போடுவது முதல் இன்னபிற கடன்களை முடித்து கையில் காபி கோப்பையுடன் முற்றத்தில் வழக்கம்போல அமர்ந்தாள். தனிமை இனிமை என்று சொன்னால் அது தேன்மொழியிடம் எடுபடாது . ஏனென்றால் தனிமை கொடுமை என்று சொல்லி அனுபவித்து வருகிறாள் அவள். ஆவி பறக்க காபியை குடித்து முடித்ததும் அன்றைய செய்தித்தாளை நோட்டமிட்டாள்.
காலை அவளுக்கு பரபரப்பானது அல்ல . வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதாலும் மெதுவாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வீட்டு வேலைகளை செய்வாள். இப்படியே மணி ஒன்பதாக தனக்கான காலை சிற்றுண்டியை தயாரிக்க இருந்த வேளையில் அவள் வீட்டின் எதிரில் உள்ள வீட்டில் ஆட்களின் பேச்சு குரல் கேட்க, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். எதிர் வீட்டிற்கு யாரோ புதிதாய் குடி வருகிறார்கள் போல சாமான்களை லாரியில் இருந்து இறக்கும் சப்தமும் கேட்கிறது என்று நினைத்துக் கொண்டாள். தனக்கான நான்கு தோசைகளை வார்த்து கொண்டு மிளகாய் பொடி எண்ணெய் சகிதமாய் மறுபடியும் வீட்டின் முற்றத்தில் வந்து சாப்பிட தொடங்கினாள். பல வருடங்களாக இந்த முற்றம்தான் அவளுக்கு சொர்க்கமாக மாறிப் போயிருந்தது.
இத்தனை நாள் ஆள் அரவமற்ற வீட்டில் இனி ஆட்கள் வந்து போவார்கள் என நிம்மதி பெருமூச்சு விட்டாள். வந்திருப்பவர்களின் முகத்தை காண எத்தனித்த தேன்மொழிக்கு அது முடியாமல் போனது. தனக்கு ஒரு புதிய முகம் அறிமுகமாகமாகப் போகிறது . அது ஆணா? பெண்ணா? என்ற சிந்தனையில் தூங்கி போனாள்.
முந்தைய நாள் போலவே மறுநாளும் விடிந்தது. தன்னுடைய காபி கோப்பையுடன் முற்றத்தில் வந்தவளுக்கு எதிர் வீட்டுக்காரரோடு பால்காரன் பேசும் சப்தம் கேட்க சற்று முன்னே வந்து எட்டிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஒரே ஒரு ஆண் மட்டும் தானா? என்று மறுபடியும் அவன் முகம் காண விடையும் கிடைத்தது. அவனுடைய பேச்சிலும், அழகிலும் மயங்கினாள் தேன்மொழி. தொலைவிலிருந்தே அவனை ரசித்தாள். பட்டுப்போன மரம் அன்று முதல் சோலை வனமாக மாற முயற்சித்தது.
ஆம் ! தேன்மொழி வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்து கோலம் போடுவதும் எதிர் வீட்டுக்காரன் வேலைக்கு போகும் போது அவன் கண்ணில் படும் படி நிற்பதும் மாலையில் தோட்டத்திற்கு பாய்ச்சும் நீரை காலையிலேயே விடுவதும் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதும் வேலையாகவே இருந்தது தேன்மொழிக்கு. ஒரு நாள் நேருக்கு நேர் பார்த்தாலும் தேன்மொழியைப் பார்த்து புன்னகை செய்யக்கூட மறுத்து விட்டான் அவன். வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் அவனிடம் நேரடியாக கேட்டு இருப்பாள்.
அன்று அவனை பார்த்தது முதல் மேலும் தேன்மொழியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் என்ற மனத்துடன் அவள் காத்திருக்க, அதற்கான சமயமும் வந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவன் வீட்டில் ரிலாக்ஸாக இருப்பான் நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொண்டு அவனிடம் பேசி விட வேண்டும் என்ற முடிவுடன் நேராக எதிர் வீட்டிற்கு நடந்தாள். ஆனால் இவள் வீட்டிலிருந்து எதிர் வீட்டிற்கு கடக்கும் சமயம் ஒரு கார் எதிர் வீட்டு வாசலின் முன் வந்து நிற்க, தன் நடையை அமைதிப்படுத்தி நின்றாள். அதற்குள் எதிர் வீட்டிலிருந்தவரும் சந்தோஷத்தோடு வெளியே வர, காரிலிருந்து பளிச்சென்ற முகத்துடன் மிகவும் நாகரிகமான உடையுடன் வந்திறங்கினாள் ஒரு பெண் தன் கைக்குழந்தையோடு. அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, தாங்கள் வெளியில் தான் நின்று இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அவர்களின் முத்தங்கள் பரிமாறப்பட்டன. இதை பார்த்த தேன்மொழி வெட்கப்பட்டாலும் உள்ளூர வருத்தமடைந்தாள். கண்களில் நீர் கோர்க்க தன் வீட்டினுள்ளே வந்தாள்.
கலங்கிய கண்ணீரோடு கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்தாள் தேன்மொழி. அவளுடைய விகாரமான முகத்தை அவளாலேயே ரசிக்க முடியவில்லை. பின் எப்படி அவ்வளவு அழகான ரவி அதாவது எதிர் வீட்டுக்காரர் ரசிப்பான் என்று அவள் மனம் கேட்டது. கனத்த மனத்தோடு முற்றத்தில் அமர்ந்தவள் ரவியை பார்த்து "நான் தான் உன் தேன்மொழி" என்று அவனிடம் உண்மையை சொல்ல நினைத்தே அவன் வீட்டிற்கு இன்று சென்றாள். அவனுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அவனிடமிருந்து விலக நிற்கவே முடிவு செய்தாள்.
ஆம் ரவியும் தேன்மொழியும் முன்னாள் கல்லூரி காதலர்களாக வலம் வந்தவர்கள் தான். கல்லூரி முடிந்தாலும் அவர்கள் காதல் திருமணம் வரை சென்றது. ஆனால் காலத்தின் கொடுமையால் ரயிலில் பயணிக்காத போதும் அவ்வழியாக சாலையில் காரில் சென்ற தேன்மொழி மீது மலையில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு, பல பெட்டிகள் உருண்டு விழ , உயிருக்கு சேதமில்லாமல் அவளுடைய அழகிய முகம் மட்டும் விகாரமானது. முயற்சியின் பலனாய் பெண் என்ற முகமே அவளுக்கு மிஞ்சியது. அவளை நினைத்தே பெற்றோர் தவறினர். அவர்களுடைய சொத்துக்களுக்கு எல்லாம் தேன்மொழி ஒருவளே வாரிசு என்பதால் அவற்றை விற்று இந்த சிறிய ஊருக்கு வந்து விட்டாள் அவள். யாருடைய நட்பையும் புதுப்பித்து கொள்ள விரும்பவில்லை. தனிமையே போதுமென்ற முடிவிலிருந்தாள்.
அவளை தேடி பல முறை அவள் வீட்டிற்கு ரவி சென்ற போதும் அவள் இறந்து விட்டதாக சொல்லப்பட்டது. அப்படி சொல்ல சொன்னதும் தேன்மொழி தான். தன்னுடைய அழகிய முகத்தை ரசித்த ரவிக்கு இந்த புதிய முகத்தை ஏற்றுக் கொள்ளும் படி அவனிடம் நிர்பந்திக்க முடியாது என்பதே காரணம்.
தற்போது தனிமை வெறுத்து போக எதிர்வீட்டில் ரவியை பார்த்ததும் மாண்ட காதல் மீண்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணினாள்.
ரவியும் தேன்மொழியை நினைத்து பல காலம் தனிமரமாக இருந்தான். அவனுடைய காதலுக்கு எதிர்ப்பு சொல்லாத பெற்றோரும் அவன் வாழ்க்கையில் ஓர் பிடிப்பு வேண்டுமென்பதற்காக தேன்மொழியின் இடத்தை நிரப்ப அவளைப் போலவே ஒரு அழகியை அவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். தோற்றத்திலும் அவளைப் போலவே இருந்தாள் ரவியின் மனைவி.
இது தெரியாத தேன்மொழி, ரவியிடம் தான் தான் அவன் காதலி என்று சொல்லி காதலை புதுப்பிக்க நினைக்கையில் தான் அவன் மனைவியும் குழந்தையும் வந்திறங்கினர்.
முக அழகை விட மன அழகையே ரவி விரும்புவான் என்றுஅவளுக்கும் தெரியும். இருந்தாலும் தன் பழைய முகத்தை மறைத்து புதிய முகத்துடன் புதைத்தாள் தேன்மொழி.
புதிய முகத்திற்கு மாறினாலும் நினைவுகள் பழையது தானே?

No comments:
Post a Comment