முகமறிய ஆவல்
அனைத்து பாலரும் படிக்கும் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக சேர்ந்தாள் ஆனந்தி. எப்போதும் அவள் பர்தா போட்ட உடையிலேயே வருவது வழக்கம். அதனால் அவளுடைய கண்கள் மட்டுமே அறிவர் எவரும். அவள் உடைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் பலரும் அவள் உண்மை முகம் காண ஆவலாய் இருந்தனர்.
இதைப்பற்றி அவளிடம் கேட்டாலும் சிரிப்பை உதிர்த்து சென்று விடுவது அவள் வழக்கம். இதனால் அவள் முகம் காண ஆசைப்பட்ட ஒரு மாணவன் சக மாணவர்களோடு ஆனந்திக்கு தெரியாமல் அவளுடைய அலைபேசியை எடுத்து அதில் அவள் முகத்தை காண, அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆம். அவள் எடுத்திருந்த புகைப்படத்தில் அவளுடைய ஒரு கண் அல்லாது மற்றவை ஏதாவது ஒன்றால் மறைக்கப்பட, ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் மேலும் அவள் முகம் காண ஆவல் அவர்களிடையே அதிகமாகியது. ஆனந்தியை பற்றி தங்களுடைய வேறு பேராசிரியர்களிடம் கேட்க, அவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தாலும் இவர்களை திட்டியது தான் மிச்சம். ஆனால் அதில் ஒருவர் மட்டும் ஆனந்திக்கு அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உள்ளது என்று நாசூக்காக சொல்ல, நேரம் கிடைக்கும் போது அவளை கண்காணித்து வந்தனர் மாணவர் கூட்டம்.
இதற்கிடையே மாணவர்களோடு சுற்றுலா செல்ல ஆனந்தியும் சேர்க்கப்பட்டிருந்தாள். இம்முறை வாய்ப்பை தவற விட கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாய் இருந்தனர்.
அவர்கள் நினைத்தது போலவே முகம் கழுவ தன் முக உடையை ஆனந்தி விலக்க, கேமரா கையுமாக அலைந்த மாணவன் ஒருவன் அவளை படம் பிடிக்க, ஆனந்தியின் உண்மை முகம் கண்டு முகம் வெளிர்ந்தான். சொல்ல முடியாத அளவிற்கு அவள் முகம் சிதைந்திருந்தது. புகைப்படம் எடுத்த போது வந்த வெளிச்சம் ஆனந்திக்கு தெரிய, அவள் திரும்பியதும் அவள் முகம் தெள்ளத்தெளிவாக மாணவர்களுக்கு பதிவாகியது. பிறகென்ன வேறு வழியில்லாமல் அவளுடைய ஃபிளாஷ் பேக் மாணவர்களிடையே ஓடியது .
ஆனந்தி பார்ப்பதற்கு மிகவும் அழகு. நாகரீமான உடையாகட்டும், புடவையாகட்டும் இரண்டிற்கும் பொருத்தமானவள் தான். அவள் பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் படித்து வந்தாலும் அவளை பார்க்கும் மாணவிகளும் அவளின் அழகில் மயங்கி தானும் ஆணாக இருந்திருந்தால் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பர் என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அளவிற்கு
அவளுடைய மிடுக்கான நடையும் குதிரை வால் போட்ட முடியும் மாம்பழ நிற மேனியும் இதழ் விரிய சிரிக்கும் சிரிப்பும் நெற்றியில் சிறிய சிவப்பு நிற பொட்டும் ஹை ஹீல்ஸ் போட்ட செருப்பும் காதிலும் கழுத்திலும் ஆடம்பரமில்லா நகையும். ஒரு கையில் வளைகள் இல்லா கரமும் மறு கையில் கைக்கடிகாரமும் அழகே! இவளை கவி மட்டுமே வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண பிறவிக்கும் சாத்தியமே!
இவ்வாறு வீட்டில் தேவதையாகவும் வெளியில் பதுமையாகவும் வலம் வந்தாள் ஆனந்தி.
அப்போது தான் அந்த கோர சம்பவம் நடந்தது. ஆனந்தி கல்லூரியில் இறுதியாண்டு படித்த சமயம் , சுற்றாலாவில் கலந்து கொண்ட போது, மலையை ரசித்தபடி அவள் நின்றிருக்க, அவளுடைய தோழி ஒருத்தி அவளை திடீரென்று பயமுறுத்த, தன் கட்டுப்பாட்டை இழந்து அவள் மலையிலிருந்து உருண்டு விழ, உயிர் மட்டுமே மிஞ்சியது சிதைந்த முகத்தோடு. அவளின் அருவெறுப்பான முகத்தால் அவள் நிராகரிக்கப்பட்டாலும் அதற்கு கலங்காத அவள், மேற்படிப்பு படித்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறாள்.
இவ்வாறே தான் எழுதி வந்த தொடர்கதையை முடித்தார் எழுத்தாளர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணவேணி , தன் நிஜ முகமூடியையும் கழற்றி விட்டு. இன்றுவரை யாருக்கும் தெரியாத அவருடைய நிஜக் கதை அடுத்த வார இதழில் வெளியாகும் என்றும் கதை படித்தவர்கள் யாரும் தனக்காக ஆதங்கப்பட வேண்டாம் என்றும் முடித்திருந்தார்.
அவர் உயிர் பிரிய காத்திருக்கும் வேளையில் தான் தன் உண்மை கதையை மற்றவரிடம் பகிர்ந்தார்.
அவருடைய நிஜக் கதையும் நிஜப் பெயரும், முகமறிய ஆவல் கொண்ட நெஞ்சங்களின் முகத்தை கண்ணீரில் நினைத்தது.

No comments:
Post a Comment