Wednesday, August 9, 2023

என்றும் இனியவள் by Veena Shankar



 என்றும் இனியவள் 


"சுமி! மணி ஆறாச்சி " என்று சுமியை தட்டி எழுப்ப , அவள் எழுந்து படுக்கையை மடிப்பதற்குள் " ஏதோ வெட்டி முறிக்கிற வேலையை செய்த மாதிரி இப்படியே உட்கார்ந்திருக்கியே?" என்று சொல்லிக் கொண்டே மறுபிரவேசம் செய்தாள், சுமியின் அம்மா ஷாலினி. சுமி பல் தேய்த்து வருவதற்குள் "முன்னாடி இருக்கிற பால் பாக்கெட் கொண்டு வா" என்று சொல்லிக் கொண்டே திருமாப்படிக்குள் (சமையலறை) சென்றாள். அங்கேயும் ஷாலினியின் வாய் அடக்கமாய் இருப்பதில்லை. "நானே எல்லா வேலையும் செய்யணும். இவ்வளவு வளர்ந்து இருக்கிற, ஒரு கறிகாய் நறுக்கி தரலாம், இல்ல அப்பாவுக்கு காபி கலந்து தரலாம் தானே?" என அர்ச்சனை செய்து கொண்டே ஒரு பக்க அடிப்பில் பாலையும் மறுபக்கத்தில் குக்கரையும் மூடி கறிகாய் நறுக்க தயாரானாள். அப்பொழுது தான் புத்தகத்தை திறந்து படிப்போம் என்று உட்கார்ந்த சுமிக்கு அம்மா இப்படி சொல்லவும் மிகுந்த எரிச்சல் வந்தது. அம்மாவின் அடுத்த அர்ச்சனைக்கு காத்திராமல் கறிகாய் நறுக்க சென்றாள் சுமி. இதை அறிந்த சுமியின் அப்பா கார்த்தியோ "படிக்கிற பொண்ணை ஏண்டி வேலை செய்ய கூப்பிடற" என்று சத்தம் போட்டதும் " ஆமா! உங்க வேலையெல்லாம் செய்ய நான் இருக்கேன் . ஆனால் நானும் வீட்டு வேலை அத்தனையும் செஞ்சு முடிச்சிட்டு ஆபீஸ்ல போயும் வேலை செய்யணும். நீங்க யாரும் ஓத்தாசைக்கு வரமாட்டேங்குறீங்க" என்று ஷாலினி சலித்து கொண்டாள். இதைக்கேட்ட கார்த்தி "அதற்கு தான் உன்னை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன், கேக்குறியா ? என் சம்பாத்தியத்தில குடும்பத்தை ஓட்டினால் போதும் . இருக்கிற நகையை வைத்து சுமி கல்யாணத்தை முடித்து விடலாம் . ஆபீஸ்ல லோன் போட்டு " என்று அடுக்கிக் கொண்டே போக, கடுப்பாகினர் சுமியும் ஷாலினியும். " எனக்கு கல்யாணத்திற்கு என்ன அவசரம் ? என்று சுமி கொதிக்க , " எப்ப பார்த்தாலும் இதே பேச்சா? சொல்லுங்க! நாளைக்கு நமக்குன்னு கையில காசு வேண்டாமா ? என்றாள் ஷாலினி . பெண்கள் கூட்டணியின் மத்தியில் அவன் வாய் திறக்க முடியாமல் இடத்தை மட்டும் காலி செய்தான். கொஞ்சம் நேரம் செல்ல "சுமி ! வாஷிங்மெஷின்ல துணி போட்டு இருக்கேன். அதை மட்டும் காய போட்டுடு" என்று மறுபடியும் ஷாலினி சுமியிடம் சொல்ல, அம்மாவை மனதினில் கடிந்தவாரே சென்றாள். " சுமி ! டிபன் சாப்பிட்டு முடித்ததும் கையோடு நம்ம மூணு பேரோட டிபன் பாக்ஸுக்கும் சாதம் குழம்பு எல்லாம் பேக் பண்ணிடு " என்று சொல்லிக் கொண்டே நைட்டியில் இருந்து புடவைக்கு மாறினாள் அம்மா . எல்லா வேலையையும் சுமி பகிர்ந்து கொள்கிறாள். ஆனாலும் இந்த ஷாலினி, தான் ஒருத்தி மட்டுமே எல்லா வேலைகளையும் செய்வதாக சொல்வது கொஞ்சம் அதிகம் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கார்த்தி தன் அடுத்த வேளை சாப்பாட்டை நினைத்து. வீட்டின் காலை பரபரப்பும ஓய்ந்தது. வீட்டை பூட்டி திசைக்கு ஒருவராக அவரவர் பணி நிமித்தமாக பிரிந்து சென்றனர்.    


" தினமும் இப்படியே என்கிட்ட வேலை சொல்லிக்கிட்டே இருக்க . நானும் முன்ன பின்ன பார்த்து அதை செய்து முடிக்கிறேன். நான் செய்து முடிக்கறதுக்குள்ள முன்னூறு தடவை சொல்றே. அதனால உனக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி அப்புறம் படுக்கையில் விழுந்தா , அப்பவும் நான் தான் உன்னை பார்த்துக்கணும். அதனால நீ எனக்கு சொல்ற வேலை, நீ செய்யற அர்ச்சனை எல்லாம் இந்தா இதுல ரெக்கார்ட் பண்ணி வச்சுட்டேன். நீ காலையில எழுந்ததும் அதை ஆன் மட்டும் பண்ணி விட்டுடு. அது பாட்டுக்கு என்னை திட்டிக்கிட்டே இருக்கும். உன்னை போலவே கத்த ஆரம்பிச்சுடும்" என்று ஒரு நாள் தன் அம்மா ஷாலினியிடம் சலிப்பாக சொன்னதை நினைத்த சுமி, இப்போது ஆதங்கப்பட்டாள். அவள் அம்மாவின் குரலையோ அர்ச்சனையோ கேட்க முடியாத இடத்திற்கு ஷாலினி சென்று விட்டாள்.  


அன்று சுமி பதிந்த அம்மாவின் குரலை, இன்று தனிமையில் சமைத்து கொண்டே பேச விட்டிருந்தாள் சுமி. அம்மா தவறி ஒரு வருடம் ஆன நிலையிலும் தன் அம்மாவின் நினைவிலிருந்து மீளாதவனாய் தவித்தாள். 


நிழலின் அருமை வெயிலில் தெரியும்


 அம்மாவின் அருமை இழப்பில் தெரியும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...