வீட்டின் பசுமை
அகிலத்தை ஆள்வான் என்று அவன் பெற்றோர் பெயர் சூட்டினாரோ என்னமோ, தனக்கென ஒரு வீட்டை இப்போதுதான் அகிலனால் கட்ட முடிந்தது. சாமான் செட்டுகளை எல்லாம் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு தூக்குவதிலிருந்து விடுதலை என்றும் தன்னை இழிவு படுத்திய சொந்த பந்தங்களுக்கு தான் யார் என்பதை நிரூபித்து விட்டதாக நினைத்தான் அகிலன். அளவான, தேவையான வசதி கொண்ட வீடாக தன் கனவு இல்லத்தை கட்டினான். ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து கட்டியதால் அதை வெறும் வீடாக நினைக்காமல் கோயிலாக எண்ணினான். இரு அறைகள் கொண்ட வீட்டில் அகிலனுக்கும் அவன் மகனுக்குமாக அறைகள் ஒதுக்கப்பட்டன.
புது வீட்டின் ராசியால் தன் பெண்ணுக்கும் அடுத்ததாக தன் பையனுக்கும் திருமணத்தை முடித்தான். இதற்கிடையே தனியார் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அகிலன், தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ நினைத்தும், குடும்பத்திற்காக தான் இழந்த தன் வாழ்வை எண்ணி, இனி வரப்போகும் இளமையான - இனிமையான நாட்களை தன் மனைவியோடு பேசி மகிழ்ந்திருக்க நினைத்து, அவன் தன் அறையை அழகுப்படுத்தி வைத்துக் கொண்டான். இதைப் பார்த்த அவன் மனைவி “இந்த வயதிலும் என்ன ஒரு அற்ப சந்தோஷம்” என கேட்டாலும் “ஐம்பதிலும் ஆசை வரும்…” என்ற பாட்டை பாடியவாறு நகர்ந்தான். “வீட்டிற்கு மருமகள் வந்தாச்சு இன்னும் என்ன தனிமை வேண்டி கிடக்கு” என்று சொன்னபடியே அகிலனை கடிந்து நகர்ந்தாள்.
புது மருமகளுக்கு ஒன்று இரண்டாக எல்லா வேலைகளையும் நேர்த்தியாக செய்ய கற்றுக் கொடுத்தாள் அகிலனின் மனைவி. அதை கற்பூரம் போல பற்றி கொண்டாள் மருமகளும். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயங்களையும் மாமியார் மருமகளுக்கு கற்றுத்தர அதுவே அகிலனுக்கு உலை வைத்தது. எப்போதும் மனைவியை தன் பக்கத்தில் இருக்க சொல்லும் தன் மாமனாரின் நடவடிக்கை மருமகளுக்கு பிடிக்காத காரணத்தினால் மாமனார் - மருமகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. அகிலனின் பேச்சையும் செயலையும் தன் கணவனிடம் எதிர்மறையாக அவள் சொல்லிக் கொடுக்க, அகிலனின் நிம்மதி குலைந்தது. அது வரை தன் வீட்டின் எல்லா அறைகளையும் ஆக்கிரமித்து வந்தவன், தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தான். என்ன செய்தால் இவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நினைவில் அவன் இருக்க, மனைவியும் தனக்கு ஆறுதல் அளிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் பேசுவதாகவும் தான் தன்னந்தனியாக விடப்பட்டதாகவும் உணர்ந்தான். “இத்தனை வயசு ஆச்சு இன்னும் சினிமா, பாட்டு, டான்ஸ் எல்லாம் பார்க்க வேண்டுமா?” என்று கேட்கும் மனைவி மட்டும் சீரியல் பார்க்க தவறுவதில்லை என நினைத்தான்.
அவனுக்கு வீட்டில் கால் பட்ட இடங்கள் எல்லாம் நெருப்பாய் சுட்டன. தன் நினைவுகளை பகிர ஆளில்லாமல் தனி அறையில் தவித்தான். தனக்காக தான் கட்டிய அறையே தனக்கு சமாதியாக மாறிவிடுமோ? என்று அச்சப்பட்டான். நான்கு பக்க சுவர்களும் அகிலனுக்கு சிறை வாசமாக இருந்தது. அவ்வப்போது தானும் தன் மனைவியும் ஜோடியாக இருக்கும் படத்தை தொட்டு பார்த்து மகிழ்ந்தான்.
நாட்கள் கழிந்தன. வேறு வழியில்லாமல் புது அலைபேசியை ஒன்றை வாங்கி அதில் தன்னுடைய பழைய நட்பு வட்டாரத்தை புதுப்பித்துக் கொண்டான். எந்த விஷயமானாலும் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வதும் தன்னுடைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதுமாக காலத்தை கழித்தான். நட்புக்கள் விரிய அவனை தேடி வரும் நண்பர்களும்; அவர்கள் வீட்டிற்கு இவன் செல்வதுமாக இருக்க, இது குடும்பத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவன் நண்பர்களை புறக்கணிக்க, வீட்டில் அகிலனிடம் யாரும் பேசுவது கிடையாது. நேரத்திற்கு மனைவி உணவளிக்க, மீண்டும் அவனிடம் வெறுமை குடி கொண்டது. நான்கு பக்க சுவர்களையும் பார்த்துக் கொண்டே தான் வாங்கிய கட்டிலில் அமர்ந்து, தன்னுடைய நினைவலைகளை தனதாக்கிக் கொண்டு உறங்கியவன் அதற்குப் பிறகு எழவே இல்லை. நான்கு சுவர்களில் அடைந்தவனை நான்கு மனிதர்களின் உதவியால் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வீட்டின் பசுமை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும் அன்பினாலும் மட்டுமே இணைய கூடியது.
எந்த காலத்திலும் நினைவுகள் பசுமையானது, உயிரோட்டம் கொடுக்க ஆள் இருக்கும் வரை.

No comments:
Post a Comment