தீர்வு
சுரேஷிற்கு தன் அம்மா பாக்கியத்தின் மீது கொள்ளை பிரியம். சிறு வயதிலேயே தன் கணவனை இழந்தவள். தன் அப்பாவின் இறப்புக்கு பின் தன்னை வளர்த்த ஆளாக்கிவிட்ட தன் அம்மாவிற்கு உறுதுணையாக சுரேஷ் இருப்பான் . தனக்காக அம்மா வேலைக்கு போய் கஷ்டப்பட்டதையும் தனக்கு நல்ல வேலை கிடைத்த பின் தன் அம்மாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி அவள் உழைப்புக்கு விடை கொடுத்தான். திருமண வயது வந்ததும் பாக்கியம், சுரேஷிற்கு ஒரு வரன் பார்த்து திருமணத்தை முடித்து வைத்தாள்.
திருமணமான பின் அம்மாவுக்கு தன் மனைவி நந்தனியின் வரவால் வீட்டு வேலைகளில் இருந்து சிறிது ஓய்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். நந்தினியும் தன் மாமியாருக்கு கூடமாட வேலை செய்து வந்தாள். சுரேஷிற்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆயிற்று. அவன் பாக்கியத்திடம், “அம்மா இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டது போதும். அதனால இனிமே எல்லா வேலைகளையும் நந்தினி பார்த்துக் கொள்ளட்டும்” என சொல்லவும் பூரிப்படைந்தாள் பாக்கியம். இதனால் வரை தன் வேலை பளுவை யாரும் பகிர்ந்து கொள்ள வரவில்லை என்ற குறை அவளுக்கு இருந்தது. “அப்பா” என்ற ஒற்றை வார்த்தையால் தன் முடிவினை சொன்னது கேட்டு சுரேஷ் தன் அம்மா இவ்வளவு எளிதாக சமையல் வேலையை விட்டுக் கொடுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. பெண்களின் ஆதிக்கமே சமையல்கட்டிற்குள் தான் இருக்கும் என்பதை அவன் நண்பர்கள் கூற கேட்டுள்ளான்.
வருடங்கள் ஓட, நந்தினிக்கு அடுத்தடுத்து இரு ஆண் பிள்ளைகள் பிறக்க, குழந்தைகள் வளர்ப்பு முடிந்து இருவரும் பள்ளிக்கூடத்தை தொட்டனர். எப்போதும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும் வீட்டு வேலைகளை செய்து கொண்டும் அவரவருக்கு பிடித்த வண்ணம் தன்னை மாற்றி கொண்டிருந்த நந்தினிக்கு இப்போது தனக்கு வேலை ஏதும் இல்லாததாக உணர்ந்தாள். அதனால் சுரேஷிடம் தான் வேலைக்கு போவதாக சொன்னாள். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பொழுது அவர்களை கலந்து ஆலோசித்து எடுக்கும் முடிவு எப்போதும் சரியாக இருக்கும் என்பதால் தன் அம்மாவை கேட்டு சொல்வதாக சுரேஷ் சொன்னான். திருமணத்திற்கு முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளை தன் அம்மாவை காரணம் காட்டி திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல வேண்டாம் என திருமணத்திற்கு முன்னமே நந்தினியிடம் சுரேஷ் சொல்லி இருந்தான்.
தன் அம்மாவிடம் ஆலோசித்த சுரேஷிடம் நந்தினி வேலைக்கு போனால் தனக்கு பிரச்சனை ஏதுமில்லை என்றும் வீட்டு வேலைகளை தான் பார்த்துக் கொள்வதாகவும் பாக்கியம் சொன்னாள். குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே நந்தினியின் படிப்புக்கு ஏற்ப ஒரு வேலை அமைய, குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு செல்வதும் மாலை திரும்ப அழைத்து வரும் கடமை சுரேஷிடம் இருந்து நந்தினிக்கு கை மாறியது.
வீட்டிலும் பள்ளியிலும் பொறுப்பு அதிகமாக சற்று அயர்ந்து போனாள் நந்தினி. நாள் முழுவதும் வேலை பார்க்கும் பாக்கியம், மாலை நந்தினி வந்ததும் இரவு வேலைக்கான பொறுப்பை நந்தினியிடம் விட்டு விடுவாள். இருந்தாலும் தன் இயலாமையை மாமியாரிடம் சொல்ல தயங்கினாள் நந்தினி. அதற்கு மாறாக அத்தை நீங்கள் வீட்டை வழி நடத்துவது நன்றாக இருக்கிறது என்று மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக சமையல் வேலையையும் வீட்டு பொறுப்பையும் தன் பேச்சு சாமர்த்தியத்தால் பாக்கியத்திடமே ஒப்படைத்தாள். இந்த சூட்சுமத்தை அறியாத பாக்கியம், அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வர, சிம்மாசனத்தில் அமர்ந்தாள் நந்தினி.
தன் சமையலை பார்த்து பேரப்பிள்ளைகள் முதற்கொண்டு அனைவரும் விரும்புவதாக எண்ணியும் தன் மருமகள் தன்னை தலையில் வைத்து பேசுகிறாள் என நினைத்தும் பூரித்து போனாள் பாக்கியம். இதை உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மகிழ்ச்சியோடு பாக்கியம் சொல்ல, அவர்கள் அவளின் அறியாமையை புரிய வைக்க, பாக்கியம் சுரேஷிடம் புலம்ப ஆரம்பித்தாள். இதை கேட்ட நந்தினி கோபமடைந்து “வீட்டு வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதால் தான் நான் எந்த ஒரு வேலையிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை” என சொல்லி பாக்கியத்திடம் சண்டையிட்டாள்.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு அம்மா கண்கலங்கி நிற்க, இருவர் பக்கமும் பேச முடியாமல் சுரேஷ் திணறினான். மெல்லிய மயிலிறகே ஆனாலும் வண்டி நிறைய ஏற்றினால் அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும் என்று எங்கோ என்றோ படித்த திருக்குறள் அவனுக்கு நினைவுக்கு வர, மறுபடியும் நந்தினியை வேலைக்கு செல்ல வேண்டாம் என அப்போதே அவளை பணித்தான். ஆனால் சாமானியத்தில் இதற்கு ஒப்பாத நந்தினி, வேறு வழி இல்லாமல் சமாதானம் ஆனாள். தான் வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக பல காரணங்களை முன் வைத்தாலும் சுரேஷின் தீர்க்கமான முடிவு அவளை வேலைக்கு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்தியது.
மித மிஞ்சிய அழகு ஆபத்தானது. அதேபோல பெருமை கொள்ளும் மனதும் சந்தர்ப்ப வசத்தால் எரிமலை போல வெடிக்க கூடியது.

No comments:
Post a Comment