Wednesday, February 15, 2023

தோற்றத்தின் விளைவு by Veena Shankar



 தோற்றத்தின் விளைவு


                              நகரின் பெரும் பணக்காரர் வீட்டு திருமணம் என்பதால் திருமண மண்டபத்தில் இருக்கும் சாலையில் ஆங்காங்கே பேனர்களும் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன. இது சொர்க்கலோகமோ என்று நினைக்கும் படி மிகவும் ஆடம்பரமாக திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பி இருக்க, முகூர்த்த நேரம் முடிந்த அடுத்த நிமிடமே சாப்பாடு கூடத்திற்கு வந்திருந்தவர்கள் இடம் பெயர, சாப்பாட்டுக்கூடமே ரணகணப்பட்டு போனது. நேரம் ஆக சிறிது கூட்டம் குறைய, அதுவரை பொறுத்து காத்திருந்த பெரியவர் ஒருவர், சாப்பாடு போடும் இடத்திற்கு சென்று தனக்கான இலையை கண்டுபிடித்து அமர்ந்தார். அவர் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் பணக்கார தோரணையில் இருப்பதை உணர்ந்தார். தோற்றத்தில் கிழிந்த சட்டையும் அதிலும் அழுக்குத் தோய்ந்த வேட்டியமாய் முகத்தில் தாடியுடன் இருந்தவரை மற்றவர்கள் பார்த்து முகம் சுளித்தனர். 


                              எல்லா பதார்த்தங்களும் பரிமாறப்பட்டு சாப்பிட தயாராகும் வேளையில் கோட்டு சூட்டு அணிந்த ஒருவர் வேகமாக பெரியவர் பக்கத்தில் ஓடி வந்து அவரை தரதர என்று இழுக்க, தம்பி! ஒரு வாய் சாப்பிட்டு வருகிறேனே என்று சொல்வது போல் அவர் மனம் இருந்தாலும் “ உனக்கு இவ்வளவு திமிரு கூடாது. எச்சிலை சோறு திங்கும் உனக்கு இப்படி பணக்கார வீட்டு சாப்பாடு கேட்கிறதா? என்று சொன்னபடியே தனியே ஓரிடத்தில் நிற்க வைக்க, அங்கிருந்தவர்களின் நகைப்பினை அந்த பெரியவர் சம்பாதித்தார். வெட்கம் என்பதையே மறந்து போயிருந்தார். இருந்தாலும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு காலங்கள் பல ஆனதால் இந்த கூட்டத்தில் தன்னை யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று எண்ணினார். 


                                        பொதுவாக “ பபே ” என்று அழைக்கப்படும் இடத்தில் தன்னை போல் உள்ளவர்கள் பசியாற முடியாது என்பதால் இலை போட்டு பரிமாறும் இடத்தில் அமர நினைத்தார். ஆனால் அங்கேயும் துரதிஷ்டம் அவரை துரத்தியது.

 

                                               மீண்டும் அந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி, அந்த பெரியவரை பார்த்து “ கோயிலில் பிச்சை எடுக்கும் உனக்கு என்ன அவசரம்? கடைசியாக சாப்பிட்டு போக வேண்டியது தானே? என்று வசை பாட, அதன் பின் பல பந்திகள் பரிமாறப்பட்டு விட்டன. ஆனாலும் கூட்டம் நிரம்ப காத்திருந்தார் அந்த பெரியவர். எல்லாம் ஒரு சாண் வயிறு படுத்தும்பாடு. அந்நேரம் அவரருகே வந்த ஒரு சிறு பையன் “ தாத்தா! ரொம்ப நேரமா இங்கே நிற்கிறீங்களே? பசிக்குதா? “ என்று அவர் கையை பிடித்து கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பெரியவர் நிற்க, “ அவனிடம் உனக்கு என்ன பேச்சு? என்று ஆங்கிலத்தில் சொல்லி தன் குழந்தையை கூட்டிக் கொண்டு போனாள் அந்த குழந்தையின் தாய். ஆனாலும் அவரை திரும்பி பார்த்தபடியே சென்றது அக்குழந்தை.  


                        மேலும் அந்த பெரியவர் அப்படியே நின்று கொண்டிருக்க, டிப் டாப் ஆன இளைஞன் ஒருவன் அவருக்கு பக்கத்தில் வந்து, “ சாப்பிட வந்தீங்களா? இந்த மாதிரி இடத்துக்கு வரும் போது கொஞ்சம் நீட்டா டிரஸ் பண்ணி வரலாம் இல்ல? உங்களோட தோற்றமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காமிக்கிறது. பாருங்கள்! நானும் உங்களை போல தான். பெரிய பணக்காரன் இல்லை. நானும் வேலை தேடி நகரத்துக்கு வந்தவன் . அன்றாட வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் எனக்கு தனியே வசிக்க இடம் இல்லாமல் தினமும் நீங்கள் படுத்துறங்கும் இடத்தில் தான் நானும் என்னுடைய இரவு பொழுதை கழிக்கிறேன்.” என்று சொல்லி அந்த பெரியவரை ஒரு பந்தியின் ஓரத்தில் இலையில் சாப்பிட உட்கார வைத்தான். அவனை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அவன் காட்டிய இலையில் அமர்ந்தார் அந்த பெரியவர். இம்முறை கோட்டு சூட்டு போட்ட ஆசாமி பெரியவரிடமும் இளைஞனிடமும் ஏதும் சொல்ல விரும்பாமல் அடுத்த இடத்திற்கு நகர்ந்தான். காரணம் இளைஞனின் பணக்கார தோற்றம் அவனை அந்த இடத்திற்கு தகுதியுள்ளவனாக மாற்றி இருந்தது.


                                  ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டுப் போகும் இந்த இடத்தில் ஒரு ஏழை பெரியவருக்கு அவரின் தோற்றத்தினால் உணவு கிடைக்காமல் போவது என்பது மனிதனின் பிழையா? இல்லை அவன் மனதின் பிழையா? இதற்கான பதில் யாரிடமும் இல்லை என்பதே உண்மை.


                                     வறுமை கொடுமையானது. என்றாலும் தோற்றமும் அவசியம், உருமாறும் வாழ்க்கையில். மனதை தேற்றவும் அவசியம் மனிதாபிமானம்.

5 comments:

  1. பல நேரம் ஆடையே தோற்றத்தை கணிக்கிறது👌

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இவர்கள் எல்லாம் திருவள்ளுவரின் பார்வையில் கல்லாதவர்கள் , கல்வி என்பது பொருள் ஈட்ட என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் நாம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே. ஆழ் மனதில் பதிந்தவை. மாறுவதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...