Monday, February 13, 2023

அன்புள்ள என்னவருக்கு by Veena Shankar

 என்னவருக்கு காதலர் தினத்திற்கான கடிதம்



அன்புள்ள என்னவருக்கு,

                                            வணக்கம் என்று சொல்லி உங்களையும் என்னையும் நான் வேறுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. என் சுகத்தையும் சினேகத்தையும் உங்களிடமிருந்து அறிய ஆவல். நீங்கள் சுகமே.

                                       உங்கள் புன்னகைக்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் நான் உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பே பிறவி குணமாய், வரமாய் அது உங்களிடம் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தங்களின் பன்முக தோற்றத்தையும் அறிந்த நான், சில சமயங்களில் உங்களின் பதற்றத்தை அறிந்திருந்தாலும் தற்போது தான் தங்களின் நிலையிலிருந்து என்னை பார்க்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொண்டுள்ளேன் என்றே சொல்ல வேண்டும். 

                                   திருமணத்திற்கு முன்பு என்னவர் இப்படி இருக்க வேண்டும் என்ற மனக்கோட்டையை ஒரு நாளும் நான் கட்டியதில்லை. உங்கள் சிரிப்பினை, பல புகைப்படத்தின் மூலமாகவும் நேரடியாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன். என்னை பெண் பார்த்து, திருமண தேதி குறிக்கப்பட்டதும் உங்கள் பெயர் அடிக்கடி என் வேலை நிமித்தமாக வந்து போவது கண்டு எத்தனையோ நாட்கள் எண்ணியும் சிரித்தும் பரவசப்பட்டுள்ளேன். “ ஹரிச்சந்திரா “ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியை காதலிக்கும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் காதலியின் வெறுப்பை சம்பாதிக்க, கதாநாயகியின் “ சித்ரா” என்ற பெயரானது பல ரூபங்களில் வந்து அவனை நினைவுபடுத்தும். எனக்கும் இதே போல் பல இடங்களில் நடந்திருக்கிறது.

                                    திருமணத்திற்கு பின்னும் நான் படிக்க ஆசைப்பட, என்னை M.com., M.Lisc., மற்றும் தையல் என பல பட்டங்கள் வாங்க காரணமாக இருந்தது நீங்கள் தான். அதற்கு நான் நன்றி சொன்ன போது நீ படித்தாய், நான் படிக்க வைத்தேன் என்று சொல்லி என் மனதை நெகிழ்த்தி விட்டீர். மேலும் என் எழுத்துக்களை ஆதரித்ததும் நீங்கள் தான். என் படைப்பை தங்களிடம் பகிர்ந்து கொள்வதும் எனக்கு திருப்தி கொடுக்கும் செயல். வாழ்க்கை காரசாரமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் இருவரும் வாக்குவாதத்தின் உச்சத்தில் இருந்தாலும் அதை ஒரு சில நிமிடங்களிலேயே மறந்து, இறங்கி வரும் உங்கள் மனதிற்கு ஒரு சல்யூட்.

                                        காதலித்தவர்கள் எத்தனை பேருக்கு காதலர் தினத்தன்று திருமணம் நடந்திருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய தினத்தில் தம்பதியாய் பொறுப்பேற்ற நாம் இன்னும் காதலித்து வருவதற்கு இறைவனுக்கு நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் நான் நல்ல மனைவியாகவும் குழந்தைகளுக்கு தாயாகவும் குடும்பத்தினரிடம் பிணக்கு இல்லாமல் உறவை நீட்டித்துக் கொள்வதற்கும் என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டாலும் தங்களுக்கு முழு நேர தோழியாக இருப்பதையே விரும்புகிறேன்.

                                      நம்முடைய இந்த வெற்றி வாழ்க்கைக்கு, நேரம் கிடைக்கும் போது, அது இரவானாலும் சரி; பகலானாலும் சரி நாம் இருவரும் மனம் விட்டு பேசுவதே “ஹைலைட்” என நினைக்கிறேன். 

                                                தாங்கள் எடுக்கும் காரியம் எல்லாம் இனிதே வெற்றி பெறவும் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் அதில் இருக்கும் என்றும் உறுதியான மனப்பான்மையோடு சொல்கிறேன். பிப்ரவரி பதிநான்கில் இருபத்தி நான்காம் ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு, நம் பந்தத்திற்கு பங்கம் ஏதும் வாராமல் மென்மேலும் இதே போல் இருக்க தங்கள் சார்பாகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


இப்படிக்கு 

உங்களின் என்னவள்

2 comments:

  1. அருமை திருமணத்திற்கு பிறகு படிப்பது கடினம் அதிலும் இரண்டு மிக அருமை.சரிபாதியாக அவரின் வேலைபளுவை பார்த்துக்கொள்ளுவதும் அழகு.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வீணா💐💐

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வித்யா.

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...