அன்பு அக்காவிற்கு,
நான் இங்கு நலமே. உன் நலத்தையும் அறிய ஆவலே. என்ன தான் அலைப்பேசி வந்தாலும் அந்த காலத்தில் தொலைபேசியில் பேசுவது போலவே என்றாவது ஒரு நாளே தான் நாம் பேசி வருகிறோம். அன்றைய காலத்தில் எஸ்.டி.டி யில் பேச அதிகம் செலவாகும் என்பதால் நாம் கடிதம் மூலம் நம்மை குசலம் விசாரித்துக் கொண்டோம்.
நான் திருமணமாகி சென்னையை விட்டு வெளியூருக்கு செல்கிறேன் என்பதை அறிந்ததும் நீ அழுததை நினைத்து இன்றளவும் எனக்கு கண்கள் பனிக்கின்றன. இப்போது உலகம் நம் கையடக்கத்தில் இருந்தாலும் பேசுவதற்கு நேரம் அமைவதில்லை. திருமணமானவுடன் அம்மாவும் நீயும் எனக்கு எழுதிய எல்லா கடிதங்களையும் நான் பொக்கிஷமாக சேகரித்து வைத்துள்ளேன். அலமாரியை சுத்தம் செய்யும்போது அதை எடுத்து வருடி மறுபடியும் படித்த பிறகே உள்ளே வைப்பேன்.
நான் தாய்மை அடைந்ததை அறிந்து நீ எழுதிய கடிதத்தில், மாதுளை பழம் உடம்பிற்கு நல்லது என்றும் அப்போது எனக்கு மாதுளம் பழம் பிடிக்காததால் அதை சாப்பிட அறிவுறுத்தி இருப்பாய். அக்கா! இன்று சாப்பிடும் பொருள் எதைக் கொடுத்தாலும் அதை சாப்பிட நான் பக்குவப்பட்டு விட்டேன் என்பதை உன்னிடம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
நீ வாழ்நாளில் சொன்ன ஒரே ஒரு நகைச்சுவையை நான் வெகுவாக ரசித்தேன். பதிலுக்கு உன்னை “அழகே நீ பேரழகி” என்னும் பாடலை நான் பாடியவுடன் நீ தன்னிலை மறப்பதும் அதை ஆயுதமாக பயன்படுத்தி பலமுறை உன்னை ஏமாற்றி இருக்கிறேன்.
மேலும் என் ஊருக்கு அவ்வளவு எளிதில் ரயிலில் இடம் கிடைப்பதில்லை என்பதை நீ கூறிய வேலையில் எனக்கு இதயம் கனத்தது. மூன்று மாதங்களுக்கு முன் நம் தந்தை நம்மை விட்டு பிரிந்தாலும் உன்னுடனே அவர் இருந்ததால் என்னை விட நீதான் அதிகம் ஏக்கப்பட்டிருப்பாய் என்பது எனக்கு தெரியும். காலம் யாரையும் விட்டுச் செல்வதில்லை என்பது உனக்குத் தெரியும். நான் உன் வீட்டிற்கு வரும் சமயம் கூட நீ விடுப்பு எடுக்காமல் அலுவலகம் சென்றது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் தந்தை இறந்த சமயத்தில் நாம் இருவரும் ஒன்றாகவே இருந்தோம். ஆனால் நான் அந்த தருணத்தை எதிர்பார்க்கவும் இல்லை ரசிக்கவும் இல்லை. இழப்பினால் வந்த சந்தோஷமாக இருப்பதால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒன்றாகவே நாம் கழித்த அந்த பன்னிரு நாட்களில் நான், நம் அம்மாவின் இன்னொரு நகலாகவே உன்னை பார்த்தேன். கனத்த இதயத்துடன் ஊர் திரும்பிய எனக்கு ஆறுதல் சொல்லியும் அனுப்பினாய். இதற்கு மேலும் இந்த கடிதத்தை தொடர மனம் இடம் கொடுக்காத காரணத்தினால் தற்போது முடிக்கிறேன்.
இப்படிக்கு,
உன் வீணா

No comments:
Post a Comment