Friday, February 17, 2023

அன்பால் விளையும் வெறுப்பு by Veena Shankar



 அன்பால் விளையும் வெறுப்பு 


                                        சுபாவும் ரேகாவும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக சேர்ந்து படித்தார்கள். இருவரில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பார்க்க முடியாத அளவிற்கு இருவரும் இணைபிரியா தோழிகள். கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் சமயம் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை சிலாகித்துக் கொண்டு வருவர். அவர்களிடையே சக பயணியாக பயணித்தவன் தான் பிரசாத். சுபாவின் பேச்சிலும் அவள் காட்டும் கண் அசைவிலும் தன்னை மறந்து போய் நிற்பான். இதனால் தன்னுடைய நிறுத்தத்தை தாண்டி அவன் பயணித்ததும் உண்டு. நல்ல வேலையில் இருப்பதால் சுபா கண்டிப்பாக தன் வசப்படுவாள் என கணக்கு போட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். எப்படியோ சுபாவின் தோழி ரேகாவின் மூலம் தூது அனுப்பி அதில் வெற்றியும் கண்டான். 


                                       பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. சுபாவின் பிரிவு ரேகாவை பாதித்தது. சுபா இல்லாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளும்படி பலர் ரேகாவிற்கு அறிவுரை கூறினாலும் சுபாவின் பிரிவை ஏற்க கடினமாக இருந்தது. இதனை மேலும் வளர விடக்கூடாது என்று எண்ணிய அவளது பெற்றோர் அவளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை பேசி முடித்தனர்.


                                      அதிர்ஷ்டவசமாக தோழிகள் இருவரும் அதே ஊரில் வாழ்க்கைபட்டாலும் சூழ்நிலை இடம் கொடுக்காததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இனம் புரியாத பிரசாதின் அன்பில் சுபா மயங்க, மெல்ல மெல்ல ரேகாவிடமிருந்து சுபா விலகினாள். 


                                   சுபா எது சொன்னாலும் செய்தாலும் அதற்கு மறுப்பு சொல்லியே அறியாதவன் பிரசாத். வீட்டு வேலைகள் முதல் எந்த வேலையானாலும் அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதுடன் அவளை தங்கத்தட்டில் தாங்கினான். ஒரு நாள் பிரசாதும் சுபாவும் கடை தெருவிற்கு போக, அங்கே ரேகாவை சந்தித்தனர். ரேகாவின் கணவர் அவளுடன் வராததை பற்றி சுபா விசாரிக்க, எப்போதும் தான் தனித்தே வருவதாக சொன்னாள். சுபாவின் புடவை நன்றாக இருக்கிறது என்றும் அந்த வண்ணம் அவளுக்கு பிடிக்காது என்றாலும் எதற்காக அதை வாங்கினாள் என்று சுபாவிடமே ரேகா கேட்க, தன் கணவர் வாங்கி கொடுத்ததாக சொன்னாள் சுபா. 


                      சுபா தாய்மை அடைந்த போதும், அவளின் பிள்ளைப்பேறு காலத்திலும் அவளை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி பிரசாத், அவர்களையும் அவளிடமிருந்து விலக்கி வைத்தான். 


                                                 திருமணம் ஆகி வருடங்கள் பல ஓடினாலும் பிரசாத் அவளிடம் சிறு சண்டை கூட போடவில்லை. ஆனால் ரேகாவின் கணவனோ அவள் தவறு செய்யும் நேரத்தில் அவளை கடிந்து கொண்டு சண்டை போடுவதாக அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறாள் சுபா. இதற்காக தன் கணவனை எண்ணி பெருமிதப்பட்டாள். 


                                    சுபா தனக்கு கார் ஓட்டி பழக வேண்டும் என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் பிரசாத் சேர்த்துவிட, தனியாக கார் ஓட்டிய சுபா விபத்துக்குள்ளாக்க, அதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிந்தாலும் கவலைப்படாத பிரசாத், அவளுக்கு ஆறுதல் சொன்னான். மேலும் அவளுக்காக புது கார் வாங்கி அதற்கு ஓட்டுனரையும் நியமித்தான். இது சுபாவுக்கு வருத்தத்தை அளித்தது.  


                                சுபா எங்கு சென்றாலும் கூடவே வரும் தன் கணவனை லேசாக வெறுக்க ஆரம்பித்தாள். ரேகாவை போல தானும் தன்னிச்சையாக செயல்பட முடியாததை கண்டும், பிரசாதின் அதீத அன்பினால் தான் சிறைப்பறவையாக மாறியுள்ளதாக சுபா ஒரு புறம் உணர்ந்தாலும் மறுபுறம் சுபாவை தாங்கும் கணவனை எண்ணி ரேகா ஏக்கம் கொண்டு, தன் கணவனும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப்பட்டாள்.


                                                      இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தோன்றினாலும் மிகுதியாக தோன்றும் எந்த செயலும் சந்தர்ப்ப வசத்தால் அடுத்தவரின் வெறுப்பை சம்பாதிக்கும்.


ஆணின் வீரமும் பெண்ணின் பொறுமையும் போற்றுதலுக்குரியதே.


எதுவும் அழகே எதுவும் அந்தந்த இடத்தில் இருக்கும் வரை.

2 comments:

  1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டும் அல்ல அன்பும் கசக்கும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...