Sunday, February 12, 2023

சுகமான வலிகள் by Veena Shankar

 


சுகமான வலிகள்


                                 கொல்கத்தாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள் ரூபா. கண் விழித்து பார்த்த அவள், தன் அருகே தன் குழந்தை தொட்டிலில் படுத்திருப்பதாய் உணர்ந்தாள். அக்குழந்தை அன்றி தனக்கென யாரும் இல்லாதது கண்டு ஏக்கம் அடைந்தாலும் தன்னை காப்பாற்றியவருக்கும் குழந்தை பிறக்க உதவி செய்த மருத்துவ குழுவிற்கும் மனதார நன்றி சொன்னாள். ஒன்பது மாதம் முழுமை அடைந்த கர்ப்பிணியான அவள், தன் இல்லத்திலிருந்து துரத்தி விடப்பட்டாள்.


                                         ஆம். அது ஒரு பெரிய கதை. ரூபாவிற்கு பதினைந்து வயது இருக்கும் போது ரூபாவின் அப்பா சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு பிழைப்பிற்காக லாரியில் தன் குடும்பத்தோடு வர, கொல்கத்தாவை நெருங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது லாரி. அதனால் பெரும் பள்ளத்தில் இறங்கி ஒரு மரத்தில் மோதி நின்றது. இந்த துயர சம்பவத்தில் ரூபா தன் பெற்றோரை இழக்க, அவள் உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்று சிகிச்சை பெற்றுருந்த ரூபாவிடம் மருத்துவமனையில் அவளை காப்பாற்றியவன் சொன்னான். இதுதான் அவள் வாழ்க்கையில் அடைந்த முதல் வலி.  


                                     அவளுக்கு ஆதரவு கொடுத்த அவன், பாலியல் தொழிலுக்கான ஒரு இடைத்தரகர் என்பது முதலில் ரூபாவிற்கு தெரியாது. நாளடைவில் ரூபாவை அந்த தொழிலில் ஈடுபடுத்த அவன் முயன்றான். அதில் வெற்றியும் கண்டான். கொல்கத்தாவில் அதற்கான காலனியில் அவளை அனுப்ப கமிஷனை மட்டும் அவன் அனுபவித்து வந்தான். தன்னை எண்ணி ரூபா வருத்தப்பட, அவள் மனமும் உடலும் சேர்ந்து வலித்தது. அங்கே தன்னைப் போல் இருக்கும் பெண்களை நினைத்து நெஞ்சில் குமறத்தான் முடிந்தது. 


                                 நாட்கள் செல்ல சரீரத்தின் வனப்பால் இவளுக்கு நல்ல வருமானம் கிடைக்க, அவளை தேடி வருபவர்களில் அக்ஷய் அவளுக்கு பழக்கமானான். அவன் ஒவ்வொரு முறையும் வரும் போதும் தான் தன் உடற்பசிக்காக வரவில்லை என்றும் மனம் விட்டு பேசவே ரூபாவிடம் வருவதாக சொல்ல, அவனிடம் எல்லையற்ற சுதந்திரத்தோடு ரூபாவும் பழகினாள். அதில் தனக்கு வலியை மீறிய சுகம் இருப்பதாக உணர்ந்தாள். 


                            அக்ஷய் பணக்கார வீட்டு பிள்ளை என்பதால் அடுத்த பெண்களைகளிடம் ரூபா வெறுப்பை சம்பாதித்தாலும் தன்னை மணப்பதாக கூறியதால், அவன் தன்னை ஏமாற்றுகிறான் என்பதை அறியவில்லை ரூபா. தான் தாய்மை அடைந்துள்ளதாக அக்ஷயிடம் ரூபா சொல்ல, அன்று முதல் அக்ஷய் அங்கே வருவதை தவிர்த்தான். இது அவளுக்கு மிகுந்த மனவலியை கொடுத்தது. இருந்தாலும் அவனை தேடி திருமணம் செய்து வாழ்வில் அங்கீகாரம் பெற வேண்டும் என்று எண்ணி அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர துடித்தாலும் தாய்மை அடைந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில்லை என்பதால் அங்கிருந்து அவள் வெளியே துரத்தப்பட்டாள். தான் நிராதரவாக விடப்பட்டதால் மீண்டும் அவள் மனம் வலித்ததே அன்றி சுகம் இல்லை.


                                         எப்படியோ அப்படி இப்படி என்று நாட்களை நகர்த்திய ரூபா திடீரென மயங்கி சாலையில் விழ, யாரோ முகம் தெரியாதவன் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தான். அங்கே பிரசவ வலி ஏற்பட, குழந்தையை வலிகளோடு பெற்றெடுத்தாள் ரூபா. அந்த வலியானது சுகமாக இருப்பதாக உணர்ந்த கையோடு மயக்கம் அடைந்தாள்.


                               தற்போது கண் முழித்தவள் தனக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று ஆவலோடு அதன் மேல் போர்த்தி இருந்த துணியை விலக்கி பார்த்து அது பெண் குழந்தை என்று தெரிந்ததும் வேதனை பட்டாள். இந்த சிறு குழந்தையும் வளர்ந்த பிறகு தன்னை போல கஷ்டப்பட வேண்டுமே என்று கண்ணீர் மல்கி அழுதாள். மேலும் அக்குழந்தையிடம் இருந்து இன்னொரு உயிர் பிறக்குமே என்று எண்ணியவாறு தன் கண்களை துடைத்துக் கொண்டாள். இம்முறை அவள் வலிக்கான பதில் யாரிடமும் இல்லை. ஏனென்றால் பெண்ணின் ஒவ்வொரு வலிக்கும் ஓர் அர்த்தமும் அர்ப்பணிப்பும் இருக்கும். எந்த நிலையிலும் தான் அனுபவித்த வலியை தன் பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டும் என எந்த தாயும் நினைப்பதில்லை.


                                    மனதளவிலும் உடலளவிலும் வலிகள் சுகமானது தான் வாழ்க்கையை எதிர்கொள்ள. ஆனாலும் அந்த வலிக்கான மருந்தும் தேவைப்படும் அர்த்தமுள்ள நெஞ்சங்களால்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...