அம்மாவின் குரல்
"சுமி! மணி ஆறு ஆச்சு. எழுந்திரு! என்று சொல்லிக் கொண்டே சுமியை தட்டி எழுப்ப, அவள் எழுந்து உட்கார்ந்து படுக்கையை மடிப்பதற்குள் " ஏதோ வெட்டி முறிச்சி வேலை செய்த மாதிரி இப்படியே உட்கார்ந்து இருக்கிறியே? சீக்கிரம் போய் படிக்க உட்கார்." என்று அடுத்த செயலையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு அறைக்கு மறுபிரவேசம் செய்து ஏதோ எடுத்துக் கொண்டு சென்றாள் சுமியின் அம்மா ஷாலினி.
சுமி எழுந்து பல் தேய்த்து வருவதற்குள்
" வாசலுக்கு முன்னாடி இருக்கிற பால் பாக்கெட்டை கொண்டு வா" என்று சொல்லி குளித்து முடித்து, சுவாமிக்கு விளக்கேற்றி திருமாப்படிக்குள் (சமையலறை) ஷாலினி செல்ல, அங்கேயும் அவள் வாய் அடங்கி வீட்டில் யாரும் பார்த்ததில்லை.
" நானே எல்லா வேலையும் செய்யணும். அப்பாவுக்கும் தம்பிக்கும் காபி கலந்து தரலாம் தானே? இல்லைன்னா இந்த கறிகாயையாவது நறுக்கி தரலாம். தேங்காய் பூ வேற கொஞ்சமா இருக்கு. சட்னி அரைக்கணும். அதையும் துருவி கொடு" என சுமிக்கு சொன்னவாறே அவள் கொண்டு வைத்திருந்த பாலை ஒரு பக்க அடுப்பிலும் மறுபக்கத்தில் குக்கரையும் வைத்து கறிகாய் நறுக்க தயாரானாள்.
அப்போதுதான் புத்தகத்தை திறந்து படிப்போம் என்று இருந்த சுமி அம்மாவின் வார்த்தையால் எரிச்சலடைய, அ வளின் அடுத்த வார்த்தைக்கு காத்திராமல் கறிகாய் நறுக்க சென்றாள்.
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த கார்த்திக்கு கோபம் வர, "படிச்சுண்டு இருக்கிற பொண்ணை ஏண்டி இப்படி வேலை செய்ய கூப்பிடுற? " என ஷாலினியை சத்தம் போட, " ஆமா ! உங்க எல்லோருக்கும் வேலை செய்ய நான் இருக்கிறேன். எனக்கு ஒத்தாசைக்கு நீங்களும் வர்றதில்லை, அவளை கூப்பிட்டா உங்களுக்கு என்ன? நானும் வீட்டு வேலை அத்தனையும் செஞ்சு முடிச்சு ஆபீஸ்க்கு கிளம்பணும் என்று மோவாயை தோள் பக்கம் காட்டி கார்த்தியை பரிகாசம் செய்தாள்.
" அதற்கு தான் உன்னை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன். கேக்குறியா? " என்று சொல்ல, " ஆமா! சுமிக்கு நகை நட்டு சேர்க்க வேண்டாமா? என்று சொல்லி அவன் மீது பாய, " என் சம்பாத்தியத்தில் குடும்பத்தை ஓட்டுனா பத்தாதா? இவ்வளவு பெரிய வீடு இருக்கு. இந்த மாம்பலத்துல வாடகை எவ்வளவு இருக்கும் என்று நோக்கும் தெரியும் தானே? என் உத்தியோகத்திற்கும் குறைச்சல் இல்லை. என் சம்பளம் போதுமானது தான். இந்தா இவனும் இந்த வருஷம் படிச்சி முடிச்சதும் கை நிறைய சம்பளத்துல வேலை கிடைச்சிடும். நம்ம சுமி கல்யாணத் தேவைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல நான் லோன் போட்டுக்கிறேன். வாங்கி வைத்திருக்கிற நகையை போட்டு பேஷா கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்புறம் எதுக்கு...," என்று அடுக்கிக் கொண்டே போக சுமியும் ஷாலினியும் கடுப்பானார்கள்.
"எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்?" என்று சுமி கொதிக்க, " எப்ப பார்த்தாலும் இதையே சொல்லுங்க. நாளைக்கு நமக்கு கையில காசு வேண்டாமா? என்னால பிள்ளைங்க கிட்ட எதிர்பார்த்து நிற்க முடியாது" என தீர்க்காமாய் கத்தியபடியே சமையலில் வேகத்தை கூட்டினாள் ஷாலினி.
பெண்கள் கூட்டணியின் மத்தியில் ஆண் வாய் திறக்க முடியுமா? மேலும் ஏதும் பேச முடியாமல் இடத்தை விட்டு நகர்ந்தான்.
கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்த ஷாலினி " வாஷிங் மெஷின் ல துணி போட்டு இருக்கேன். அதை மட்டும் மாடியில காய போட்டு வந்திடு" என மறுபடியும் சுமியிடம் சொல்ல, அம்மாவை மனதால் கடிந்தாள் சுமி.
" சாதம், குழம்பு எல்லாம் பேக் பண்ணிவிடு." என்று சொல்லி ஷாலினி நைட்டியிலிருந்து புடவைக்கு மாறினாள்.
அன்று மாலை சுமி ஷாலினியிடம், "அம்மா! நானும் நீயும் சொல்ற வேலையை முன்ன பின்ன பார்த்து அதை செய்றேன். ஆனால் நான் செய்து முடிக்கறதுக்குள்ள நீ இன்னொரு தடவை சொல்றே ! இல்லைன்னா அடுத்த வேலையை சொல்லி என்னை எந்த வேலையையும் உருப்படியா செய்ய விடாம ஆக்குற, அதனால உனக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகி அப்புறம் படுக்கையில் விழுந்தா அப்பவும் நான் தான் உன்னை பார்த்துக் கொள்ளனும் . அதனால நீ எனக்கு சொல்ற வேலைகளையும் செய்கிற அர்ச்சனைகளையும் இந்தா இதுல பதிந்து வச்சிருக்கேன். இதை நீ காலையில ஆன் பண்ணிட்டா உன்னை போலவே இதுவும் கத்த ஆரம்பிச்சுடும்" என்று சொன்னாள்.
காலங்கள் ஓட, அன்று விளையாட்டாக சுமி சொன்னது இன்று உண்மையாகி போனது. திருமணமாகி புக்காத்துக்கு போன சுமியின் சமையலறையில், தான் பதிய வைத்திருந்த அம்மாவின் குரலை ஓட விட்டே சுமி தன் வீட்டு வேலைகளை செய்வதை வழக்கமாக்கி கொண்டாள். அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்று பாகற்கையாக இருந்தது சுமிக்கு. ஆனால் இன்று புக்ககம் அவளுக்கு நல்ல சுறுசுறுப்பான மருமகள் என்ற பெயரை சூட்டிவிட்டுள்ளது.
அன்று அம்மாவை வசைபாடியதை நினைத்து சுமி இப்போதும் ஆதங்கப்படுவாள். ஆம்! சுமி நினைத்தாலும் இன்று அவள் அம்மா ஷாலினியின் குரலையோ, அர்ச்சனையோ நேரிலே கேட்க முடியாத இடத்திற்கு சென்று விட்டாள் ஷாலினி.
"கொரானா" என்ற பெருந்தொற்றில் கார்த்திக்கும் ஷாலினியும் ஒருவர் பின் ஒருவராக மாட்டிக் கொள்ள, கணவனுக்காக தன் உயிரை பணயம் வைத்து அவன் வாழ்வை நிஜமாக்கினாள் ஷாலினி.
எவ்வளவு அழைத்தாலும் கார்த்திக் , சுமியிடமோ வெளிநாட்டிலிருக்கும் தன் பையனிடமோ செல்ல மறுத்து விட்டான். தன் மனைவி சேர்த்து வைத்த சம்பாத்தியத்தில், தான் வாழ ஆசைப்படுவதாகவும் அது தான் அவளின் ஆன்மாவிற்கு தான் செய்யும் நன்றி கடன் என்று சொல்லி தன் வேலையை கூட அவள் இறந்த உடனேயே ராஜினாமா செய்து விட்டான்.
இன்றும் தன் அம்மாவின் நினைவலைகளிலிருந்து மீளாதவளாய் சுமி, தற்போது தன் மகளிடம் அம்மாவின் குரலின் பிம்பத்தை நேரலையாக ஓட விட்டாள்.
அம்மாவின் அம்பு வாத்தைகள் கூட அன்பு தானே?
எவருக்கும் இதில் அனுபவம் உண்டு