Monday, March 18, 2024

குங்கும பொட்டு by Veena Shankar

 


குங்கும பொட்டு


அவசரமாக வீட்டை பூட்டி வேலைக்கு செல்ல கிளம்பிய ஜனனியை பார்த்து " அம்மா! நீங்க அழகா இருக்கீங்க" என்றாள், அவளுடைய மூன்று வயது பெண் ரசிகா . தினமும் அவள் இப்படி சொல்வது வழக்கம் என்பதால்

  " ஓகே ! தேங்க் யூ." என்று சொல்லி, முத்தமிட்டு ரசிகாவை ஸ்கூலில் விட்டு தன் ஆபீசை நோக்கி வண்டியை விரட்டுவாள்.


 ஜனனிக்கு இது தினசரி நிகழ்வு என்பதால் ரசிகாவின் வார்த்தையை பெரியதாக கண்டு கொள்வதில்லை.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜனனிக்கும் ரசிகாவுக்கும் விடுமுறை. அன்று தான் வீட்டை சுத்தம் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வாள் சுத்தத்தை விரும்பும் ஜனனி.   


வேலைகளை முடித்து முகம் கழுவ நினைப்பதற்குள் தன் அம்மாவின் கையை பிடித்து சற்றே ஆயாசப்படுத்திக் கொள்ள சொன்னது மழலை. அவளும் சோபாவில் அமர , ஜனனியை கட்டிப் பிடித்து " அம்மா! இன்னிக்கி நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க!" என்று தன் கொஞ்சல் வார்த்தையில் சொல்ல, ரசிகாவே தன் அம்மாவிடம் முகக்கண்ணாடியை கொடுத்து பார்க்க சொல்ல , எதை பார்க்க சொல்கிறாள் இவள் ? என்ற குழப்பத்தோடு, தன் முகத்தில் அப்படி என்னதான் அழகு இருக்கிறது? என்று கண்ணாடியை வாங்கி பார்த்தாள் ஜனனி.


கணவனை இழந்த பிறகு மற்றவர்கள் எவ்வளவு சொல்லியும் தன் நெற்றியில் சிவப்பு பொட்டை வைக்க மறுத்திருந்தாள் ஜனனி. இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு என்று பலர் சொன்னாலும் அவர்களின் உண்மையான மனதையும் அறிந்திருந்தாள் ஜனனி.


ஆனால் இன்று, இப்போது அவள் முகத்தில் வேர்வைக்கு மத்தியில் சிவப்பு பொட்டு பதிந்திருப்பதை பார்த்தாள். சற்றே தடுமாறினாள் ஜனனி. தான் வைக்காத போது இது எப்படி சாத்தியம்? என தன்னைத்தானே கேள்வியைக் கேட்டு கொள்ள, அலமாரியை சுத்தம் செய்யும் போது தன் கணவனின் நினைவு தினம் நாளை வருகிறது என்பதால் கணவனின் போட்டோ வைத்து படையல் வைக்க நினைத்து எடுத்த போது, நிழலாய் மாறிபோன தன் கணவன் நெற்றியில் அவள் முத்தமிட , அவன் நெற்றியில் இருந்த குங்குமப்பொட்டு இன்று இவள் நெற்றிக்கு இடம் மாறி இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தாள்.  


அப்படியே அவள் யோசனையில் மூழ்கி நின்ற போது மறுபடியும் ரசிகா தன் தாயைக் கட்டி அணைத்து, " அம்மா! எப்போதும் இந்த சிவப்பு பொட்டை வைத்துக் கொள். உனக்கு அழகா இருக்குது" என குழந்தை மொழி பேச, தன் கணவனின் விருப்பமும் இதுதானே? என்று சற்றே அன்றைய ஓர் நாளுக்கு பின்னோக்கி பயணப்பட்டாள் ஜனனி.  


" நான் இல்லை என்றால் நீங்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்வீர்கள் தானே?" என்று தன் கணவனிடம் விளையாட்டாய் ஜனனி கேட்க, "அது இருக்கட்டும். நான் சொல்வதை கேள். நான் இல்லையென்றாலும் நீ குங்கும பொட்டு வைத்துக்கொண்டு தேவதை போல இருக்க வேண்டும். அதுதான் உனக்கு அழகு. " என்று அவன் சொன்னதை இப்போது நினைத்து, தன் கணவனின் விருப்பமும் குழந்தையின் விருப்பமும் ஒன்றாக இருப்பதாகவும் கணவனே மறுபடியும் ரசிகாவின் மூலமாக சொல்கிறான் என்று நினைத்து "ஆகட்டும் " என்று ரசிகாவிற்கு தலையை அசைத்தாள் ஜனனி.


எதுவும் புதிதல்ல பூமியில். எதையும் அதன் படி ஏற்றுக் கொண்டால்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...