Friday, March 15, 2024

யாரோ இவர்கள் by Veena Shankar

 


யாரோ இவர்கள்?


ஆள் அரவமற்ற வேளையிலே அவனை நான்கு பேர் தூக்கி வந்து தோட்டத்து நிலத்தில் கிடத்தினர். எவ்வளவு பெரிய குழி வெட்ட வேண்டும் என்று ஆளாளுக்கு விவாதம் செய்ய, "சரி சீக்கிரம். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் விடிந்து விடும். பிறகு நாம் மாட்டிக் கொண்டு விடுவோம். சும்மா பேசாமல் வேலையை பாருங்கள்" என்று அவர்களில் ஒருவன் மற்றவரை அரட்ட, கோதாவில் இறங்கினர் அனைவரும். 


மறுபடியும் அவர்களுக்குள் சச்சரவு வர, ஒருவரே குழியை வெட்டுவதென முடிவு செய்து, கையாலேயே தோண்டவும் அவன் ஆரம்பித்தான். கொஞ்சம் குழி வெட்டியதும் தானே அமர்ந்து பார்த்து வெட்டிய குழியின் அளவை சரி பார்க்க, மற்றவரும் அவனை ஆமோதித்தனர். 


அழகான குழி, இறந்தவன் உருவத்திற்கு ஏற்ப நேர்த்தியாக நோண்டப்பட்டும் விட்டது. ஒருவன் தலை பிடிக்க, மற்றவர் பின் பகுதியை தாங்கி கொள்ள ஒருவழியாக உடலும் குழிக்குள் கிடத்தப்பட்டது. இதை முடிக்கும் முன்பே சூரியன் மெல்ல மேலெழும்பவும் சரியாக இருந்தது. 


ஒருவரை ஒருவர் நக்கி கொண்டு பங்களா வீட்டுக்குள் செல்ல ஆயத்தமாயினர். 


" அப்பாடா! நம்ம முதலாளியம்மாவின் கையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பி விட்டோம்" என்று ஒருவன் சொல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டபடி வீடு சென்றன பூனைக் கூட்டம். 


ஆம்! சென்ற முறை இந்த பூனை கூட்டம், ஒரு எலியை சாப்பிட முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிந்தி சிதறி வைத்து விட, வீட்டு முதலாளியம்மா இவைகளை நையப் புடைக்க, தற்போது அதை நினைத்து அறிவு வந்ததால், முதலாளியம்மாவால் விசம் வைத்து கொல்லப்பட்ட எலியின் உடல் தாங்கள் தின்றது போக மிச்ச மீதியை அடக்கம் செய்து திருப்திப்பட்டு திரும்பியது பூனைக் கூட்டம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...