புது பாத்திரம்
“அத்தை! எத்தனை நாளா நாலு புடவையையே மாற்றி மாற்றி கட்டிட்டு கொண்டு இருப்பீங்க? அதான் அலமாரி பூரா நிறைய புடவை இருக்கிறது தானே? உங்கள் சம்மந்தியை பாருங்கள், எப்படி புடவை உடுத்துகிறாள்? அலமாரியில் இருக்கும் சில புடவைகளை எடுத்து நித்தியபடிக்கு போட்டுக்க வேண்டியது தானே? இந்த சேலை நல்லாவே இல்லை” என்று சொல்லி குளிக்க போன தன் அத்தையிடமிருந்து அந்த சேலையை பிடுங்கிக் கொண்டாள் வினோதினி. மேலும் “உங்களுக்கு முடியவில்லை என்றால் சொல்லுங்கள். உங்கள் அலமாரியை நான் ஒதுக்கி வைக்கிறேன்” என்று சொல்லியும் வைத்தாள்.
அடுத்ததாக தன் அம்மா இருக்கும் அறைக்கு சென்றாள். அங்கே தன் அம்மாவின் அலமாரியை நோட்டமிட தொடங்கினாள். அலமாரியில் இருந்த நான்கைந்து சேலைகளை எடுத்து “இந்த புடவை சாயம் போய் இருக்கிறது. இந்த புடவை மெல்லியதாக இருக்கிறது.” என்று தன் அம்மாவிடம் காட்டி அந்த புடவைகளை தனியே எடுத்து வைத்து அம்மாவின் அலமாரியை சுத்தம் செய்வது போல் பாவனை செய்தாள். ஆனால் வினோதினியின் அம்மாவுக்கு இது புதிதாக தெரிந்தது. எப்போதும் அவளே தன் அலமாரியை சுத்தம் செய்வது தான் வழக்கம். அதுவும் வினோதினி சொன்ன மாதிரி உள்ள புடவைகளை அவ்வப்போது கழிப்பதும் வினோதினியின் அம்மாவின் வழக்கம். அப்படி இருக்க இவளுக்கு எப்படி இவ்வளவு சேலை கழிக்க கிடைத்தது என்று ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருந்தாள் அவள் அம்மா.
வினோதினியின் அடுத்த இலக்கு அவள் கணவன். “இந்த சட்டையில் பட்டனே இல்லைங்க. இந்த பேண்ட்ல ஜிப்பு சரியா இல்லைங்க, எப்படி இதையெல்லாம் போட்டுக் கொள்கிறீர்கள்?” என்று கடிந்து கொண்டு சில பல துணிகளை எடுத்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே வர இருந்தவளை, “அந்த சட்டை, பேண்ட் எல்லாம் நல்லாத்தானே இருக்கு?” என்று வினோதினியிடமிருந்து வாங்க வந்த தன் கணவனிடம், “இந்த சட்டையை நீங்கள் போட்டுக் கொண்டால் யாரும் மதிக்கவே மாட்டார்கள். சின்னப் பிள்ளைகள் போடுவது போல இருக்கிறது. இந்த சட்டை தான் வேண்டும் என்று வாங்கி இத்தனை நாள் போட்டு விட்டீர்கள். போட்டுக் கொண்ட வரை போதும்.” என்று சொல்லி ஒரு வழியாக அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்தாள் வினோதினி.
அம்மா ஒவ்வொரு அறைக்கும் சென்று வருவதை பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் தங்களுடைய அறைக்கு அம்மா எப்போது வருவாள்? என காத்துக் கொண்டிருந்தனர். அம்மா வருவதை பார்த்ததும், “அம்மா எங்களிடம் வெறும் ஸ்கூல் யூனிபார்ம் தான் இருக்கிறது.” என்று சொல்லவும் குழந்தைகளை கட்டி அணைத்து முத்தமிட்டு, தான் சேர்த்துக் கொண்டிருந்த துணிகளை சமையல் கட்டுப்பக்கம் கொண்டு சென்றாள். அங்கே வைத்திருந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களுடன் சேர்த்து இதையும் வைத்தாள்.
மணி பதினொன்று இருக்கும். அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி சத்தமிட்டு வர, வேகமாக சமையல் கட்டுப்பக்கம் ஓடினாள். தான் வைத்திருந்த அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து வீட்டின் முன் அறையில் வைத்து ஒன்றிரண்டாக அவனிடம் கொடுத்து அதற்கு தக்க எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக் கொண்டாள். மேலும் இப்படியே தன்னிடமிருந்த எல்லா பொருட்களையும் கொடுத்தே ஐந்து எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கிக் கொண்டாள். என்ன தான் காசு கொடுத்து புது பாத்திரங்கள் வாங்கினாலும் இந்த பழைய துணிகளையும் பொருட்களையும் போட்டு பாத்திரம் வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதி தான்.
பாத்திரம் வாங்கிய மகிழ்ச்சியில் அதை காண்பிக்க சிறு குழந்தை போல வினோதினி துள்ளி குதித்து உள்ளே ஓடி வந்தாள். அதனை பார்த்த அவள் கணவனோ “நல்லவேளை! நான் வேஷ்டி கட்டவில்லை. இல்லையென்றால் அதையும் வாங்கிக் கொண்டு போய் இருப்பாய்,” என நக்கலாக சொல்ல, அதை அவள் காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை. அவளின் நடவடிக்கை பார்த்து எப்போது தான் இந்த பாத்திர பைத்தியம் அவளை விட்டு போகுமோ என்று நினைத்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டனர் மதனியும் நாத்தனாருமான வினோதினியின் அத்தையும் அம்மாவும்.
நாம் செய்யும் காரியம் அற்பமாக தோன்றினாலும் அதனை அடைபவர்களுக்கு அது அர்த்தமுள்ளதாகவே இருக்கும்.

இந்த விஷயம் தெரியாம போயிடுச்சு அடுத்து துணி எடுத்து போட்ற வேண்டியதுதான் கதை கவிதை இரண்டும் நன்று
ReplyDeleteமிக்க நன்றி சார்
Delete