அவள் மீட்டிய இசையால் துயில் கொண்டதோ வீணை?
இல்லை இல்லை
அவள் அழகால் மயங்கி சாய்ந்ததோ வீணை?
கை விரல்கள் ஜாலம் காட்ட
இமைகள் மூடி காலம் கடத்த
விழிகள் அவள் இசையில் லயிக்க
வீணையில் சரிந்த தேகத்துடனே அவள்
ஏதும் விளங்கவில்லை இங்கே நமக்கு
நாதம் மட்டும் பிறப்பு கொண்டதோ?
அல்லது
காதலும் காமமும் கொள்ள மயங்கியதோ பெண்ணின் மனம்?
மொத்த அழகின் வெளிப்பாடு குமிழ் குமிழாய்
எதைக் கண்டு மயங்கினேன் நான்
அவள் நிலாவை ஒத்த முகத்தை பேசவா?
கார்மேகத்தை நினைவு கொள்ளும் கூந்தலை பேசவா?
மழையின் இடையே வெட்டும் மின்னல் போன்ற நெற்றிச்சூட்டியை பேசவா?
மூன்றாம் பிறையென கொண்ட புருவத்தை ரசிக்கவா?
சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருக்கும் அவள் விழிகளை ரசிக்கவா?
மத்தியில் இருள் போக்கிய திலகத்தை ரசிக்கவா?
மூங்கிலை ஒத்த வடிவமுடைய நாசியை சொல்லவா?
நாணத்தாலும் நாதத்தாலும் சிவந்த
முகத்தில் செங்குளமென உள்ள உதட்டினை சொல்லவா?
இலையை மடித்தாற் போல் கொண்ட செவிகளை சொல்லவா?
அது தாங்கும் காய் போன்ற காதணியை பேசவா?
செவியின் பின்னே ஒளிந்திருக்கும் கற்றை மலரை பேசவா?
கவிழ்ந்த தாமரை தண்டின் நிழல்
நீரில் விழும்போது கொள்ளும் வடிவம்
ஒத்த கழுத்து மாலையை பற்றி பேசவா?
நேர்த்தியாய் ஆடையை வடித்தவனை பற்றி சிந்திக்கவா?
அதை பாந்தமாய் அணிந்தவளை பற்றியும் சிந்திக்கவா?
மெழுகு என எனை ஏமாற்றிய கரங்களை சிந்திக்கவா?
தறியில் இடப்படும் நூல் போல் உள்ள
மீட்டும் விரல்களை ரசிக்கவா?
மணாளனை கொள்வது போல் வீணையை ஏந்தும் பாங்கினை ரசிக்கவா?
எது ரசிக்க?
எதை விடுக்க?
வனப்பே! என் வனப்பு இழந்தேன் உனை கண்டு
விடுப்பு கொள்ளவும் மனம் மறுக்கிறது காட்சியினின்று