தேர்வு முடிவு - பாகம் இரண்டு
முதல் தேர்வு வெற்றி பெற, அடுத்த கட்ட தேர்வுக்கு தயாரானாள் அகல்யா. ஒன்றுக்கு பலமுறை சொல்லிக் கொடுத்தாலும் மறந்து போகும் தன் தாயை வைத்து என்ன செய்ய முடியும் என்று நினைத்து சோர்ந்து போகாமல் சிறிதாவது அவள் தன் அவசியத்தை பூர்த்தி செய்து கொள்ளும் வடிவமாய் அவள் இருக்க வேண்டும் என நினைத்தாள்.
அடுத்ததாக அகல்யா தன் தாய் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை வேளைக்கு ஏற்றார் போல் பிரித்து , குப்பியின் ஒவ்வொரு அறையிலும் அடைத்து வைத்தாள். தன் கண் முன்னே மாத்திரைகளை தன் தாயிடம் எடுக்கச் சொல்லி விழுங்க செய்தாள். இப்படித்தான் முன்பு ஒருநாள் அவள் தாயே மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி இரு முறை அவற்றை விழுங்க, மூர்ச்சையாகிப் போனதிலிருந்து தாயின் மருந்துகளை கையில் எடுத்து கொடுக்கும் புதுப்பழக்கம் அரங்கேறியது. அதுவும் சரியே.
இருந்தாலும் அவள் தாய் வீட்டில் தனியே இருந்து பழகியது சற்று ஆறுதலான விஷயம் தான் அகல்யாவிற்கு.
இந்த அவசர உலகில் தாயை கூட பாசத்தோடும் அன்போடும் கட்டி அணைக்க முடியாமலும் நம் தேவைகளுக்காக பயணிக்கிறோம் , சில சமயங்களில் பறக்கிறோம் . சிறு வயதில் முழு நேரமும் தாய், நம்மை அரவணைக்க தற்போது அவளை அரவணைக்க நேரமில்லாது போவது நம் துரதிருஷ்டவசமே!
அவள் தாய்க்கு தானாகவே மருந்தை உட்கொள்ளும் பக்குவம் வந்தாலும் அகல்யாவிடம் காட்டிய பிறகே உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தாயின் செயலில் பத்தில் ஒரு பங்கு முன்னேற்றம் கண்டதாக உணர்ந்தாள்.
அடுத்ததாக வெளியில் இருந்து வரும் அழைப்பை ஏற்க தெரிந்த தாய்க்கு, தானாகவே தனக்கோ , அவள் தன் உறவினருக்கோ அழைப்பு விடுக்க சொல்லி பழக்கி கொடுத்தாள் . ஆனால் இம்முறை பல தோல்விகளை சந்தித்தாள் அகல்யா. அவள் இல்லாத சமயத்தில் அவள் தாய் அடுத்தவருக்கு ஓயாமல் அழைப்பு கொடுத்து விட, அவள் தன் நிலையை எடுத்துச் சொல்லி தன் தாயின் செயலை மன்னிக்குமாறு உரியவரிடம் கோரினாள் அகல்யா. இதனால் அவசியப்படும்போது கூட அவள் தாயின் அழைப்பை ஏற்க மறுத்தது உலகம்.
முயற்சியை கைவிடாமல் இருந்த அகல்யா, தேவைப்படும்போது மட்டுமே அழைப்பு கொடுக்க வேண்டும் என்பதை தாய்க்கு உணர்த்தினாள்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்திலிருந்து தன் தாயை எப்போதும் அகல்யாவே தொடர்பு கொள்வாள்.
இப்படியாக ஒருநாள் தாயிடமிருந்து அழைப்பு வர, என்னமோ! ஏதோ! என்று பதறிப் போனாள். ஆனால் அவள் நினைத்தபடி ஒன்றும் நடக்கவில்லை.
கேஸ் சிலிண்டர் வந்திருப்பதாகவும் அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வது? என்று அவள் தாய் அகல்யாவிடம் விசாரிக்க, தானும் இதைப்பற்றி தாயிடம் ஏதும் சொல்லாமல் மறந்து போனதை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டாள். பின் நிலைமையை சமாளித்து பணம், புத்தகம் இருக்கும் இடத்தை தன் தாயிடம் சொல்ல , அதை வந்தவரிடம் கொடுத்தாள் அவள் தாய். ஆனால் சிலிண்டர் மட்டும் வீட்டிற்குள்ளே வர மறுத்தது , வீடு பூட்டி இருந்த காரணத்தால்.
தன் தாயின் நித்தியபடி உடைகளை அவளாகவே கையாள பயிற்சியும் கொடுத்து அதில் வெற்றியும் கண்டாள் அகல்யா. சிற்சில செயல்களை தன்னிச்சையாக தாய் கையாள, அகல்யாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
தான் இரண்டாவது படிக்கு முன்னேறி விட்டதாக நினைத்தாள்.
இரண்டாம் பாகத் தேர்வு முடிவு, அகல்யாவிற்கு சாதகமாக வெளியாகி, அவளை அடுத்த கட்டத்திற்கு பயணிக்க பணித்தது.

No comments:
Post a Comment