போதும் ! - பகுதி ஒன்று
"போதும்! " என்ற வார்த்தை நமக்கு பரிச்சயமானது தான். இருந்தாலும் நாம் உபயோகிக்க தவறுவது ஏன்? என்ற ஐயப்பாடு என்னிடம் உண்டு.
விருந்தில் பல பதார்த்தங்கள் பரிமாறப்படும் போது நமக்கு வேண்டாதவற்றை முதலிலேயே வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையோடு அல்லது நம் கையால் செய்கை செய்தால் நன்றாக இருக்குமே. வயிறு முழுமையாய் நிறைந்த பிறகு வருவது தான் போதும் என்ற வார்த்தை. ஆனால் ஆர்வக் கோளாறினாலும் நம் அவாவினாலும் நாம் போட்டுக் கொள்ளும் அளவுக்கு அதிகமான உணவு, நம்மால் மிச்சம் வைக்கப்படுகிறது. இது அப்படியே குப்பைத் தொட்டிக்கு போவதால் யாருக்கு லாபம்? அப்படி போகும் உணவும் ஒரு சில உயிரனங்களால் உண்ணப்படுவது உண்மை என்றாலும் சில மணநேரத்திற்கு தான் நன்றாக இருக்கும் அந்த உணவும்.
கடைத்தெருவிற்கு சென்று பழமோ, காய்கறியோ வாங்கும் போது தரும் நெகிழிப் பைகளில் கூட நமக்கு போதும் என்ற மனப்பான்மை வருவதில்லையே, ஏன் ? ஒரு பை வாங்கிக் கொண்டாலும் இரண்டாவது பையை தேடி கண்கள் விரிகின்றன. மேலும் காய்கறி கடையில் கொசுராக தரப்படும் கருவேப்பில்லை, மல்லி செடி கூட அப்படித்தான். கடைக்காரர் கை நிறைய கொடுத்தாலும் போதும் என்ற வார்த்தை வாராது தவிக்கிறதே தவிர போதும் என்ற வார்த்தையை தவிர்ப்பது தான் காரணம் என்பதை நாம் அறிவதில்லை.
துணி கடைக்கு செல்லும் பொழுது கூட இப்படித்தான். வாங்கிய துணிகளுக்கு ஏற்றார் போல் தான் அங்கே பை கொடுப்பர். இருந்தாலும் கடைக்காரரிடம் மேலும் ஒரு பை கேட்டு வாங்குவதால் பயன் என்ன? "போதும்" என்பது இங்கே காணாமற் போகிறது. இப்படித்தான் பல இடங்களிலும் நடக்கிறது.
"என்னிடம் இருக்கிறது வேண்டாம், போதும்" என்ற வார்த்தைகள் மறந்து போகிறது. ஒரு பொருளுக்கான ஆசை நம்மிடம் எவ்வளவு புதைந்திருக்கிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
பகுதி இரண்டில் தொடர்வோம்

No comments:
Post a Comment