Wednesday, January 17, 2024

" போதும்" - பகுதி இரண்டு by Veena Shankar

 


" போதும்" - பகுதி இரண்டு


பகுதி ஒன்றின் தொடர்ச்சியை காணலாம்



இலவசம் என்று அறிவித்தவுடன் முண்டியடித்துக் கொண்டு, கூட்டத்தில் ஒருவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் "போதும் " என்ற மனப்பான்மை , தானே வருமோ ? 


வருடம் பிறக்கும் முன்பே கிடைக்கும் நாட்காட்டிகளும் டைரியும் வாங்கி குவிப்பதன் நோக்கம் யாது? அந்தந்த வருடம் முடிந்ததும் அது செல்லும் இடம் எங்கே என்று நமக்கு நன்றாக தெரிந்தும் அதற்காக அலைமோதும், திருப்தி இல்லாத மனம், எதற்காக?


யாதும் " போதும்" என்ற ஏற்கும் மனம் வந்துவிட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை . ஆனால் இதற்கும் அப்பாற்பட்டு இரு வார்த்தைகள் இருக்கின்றன. அவை அறிவு மற்றும் அனுபவம்.


அறிவைப் பெருக்க நினைக்க வேண்டுமே தவிர அதில் போதும் என மனதிருப்தி அடைய கூடாது. ஒவ்வொரு நாளும் நிமிடமும் ஏன் ஒரு நொடி கூட நம் அறிவை பெருக்க காரணமாக இருக்கும். அந்த நுண்ணறிவு மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும் அதன் தேவை இருந்து கொண்டே இருக்கும். தவிர ஒரு கட்டத்தில் கல்வி போதும் என்று படிப்பதை நிறுத்திவிட்டாலும் அனுபவம் என்பது நம் வாழ்வில் பிறக்கும். அறிவை போலவே அனுபவத்தையும் எந்நாளும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. "எல்லாம் எனக்கு தெரியும், அனுபவப்பட்டிருக்கிறேன்" என்ற மமதை மனிதனின் கண்ணை மறைத்தாலும் சில சமயங்களில் அவன் எதிர் நோக்காத பலவும் நடந்தேறும்.


 அப்படித்தான் நாம் இன்று காணும் இயற்கை சீற்றங்களும். தற்போது அரங்கேறிய மழை வெள்ளத்தின் தாக்கம் நம்மை மட்டுமல்ல வளர்ந்த நாடுகளையும் புரட்டிப் போட்ட வரலாறுகள் உண்டு. இதை அனுபவ பாடமாக எடுத்துக் கொண்டாலும் "போதும்" என்று சொல்லி விலக்கி வைக்க முடியாது. 


" போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பதை கேட்டு பழகி இருந்தாலும் நாம் அதை உணர்வதில்லை என்பதே உண்மை. 


நமக்கு அவசியத்தின் வரன்முறை தெரியாத வரை இந்த "போதும்" என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்ற போதிலும் " போதும் " என்பதை சொல்லி பழகி நம் மனதை எளிதில் இலகுவாக்குவோம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...