Tuesday, January 2, 2024

தேர்வு முடிவு - பாகம் ஒன்று by Veena Shankar

 


தேர்வு முடிவு - பாகம் ஒன்று


 நகரத்த பேருந்து நெரிசலில் ஒரு வழியாக பயணித்து, தன் அலுவலகம் வந்து சேர்ந்தாள் அகல்யா. சிறிது நேரம் காற்றாடிக்கு கீழ் தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்து கண்களை மூடி கொண்டாள். 


"அம்மா!" என்ற அழைப்பின் பெயரில் விழித்தவள், தன் முன்னே அலுவலக உதவியாளர் ஒருவர் நிற்பதை பார்த்து தன் கடிகாரத்தை வேகமாக திருப்பினாள். நல்ல வேளை , பத்து நிமிடம் தான் ஆகியிருந்தது. 

 ஆனால் அந்த பத்து நிமிடங்கள் அவளுக்கு அதீத புத்துணர்வை தர, வந்தவரின் தேவையை கேட்டு அவரை அனுப்பி வைத்தாள். 


 தன் வீட்டில் இருந்து கிளம்பி இரண்டு மணி நேரம் ஆனதை தொடர்ந்து , அலைபேசியில் தன் தாயை தொடர்பு கொண்டாள். 


" ஒன்று! இரண்டு! மூன்று! " என எட்டு வரை அது எழுப்பிய ஒலியை கணக்கிட்டாள். நடந்து முடிந்த தேர்வின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவன் போல காத்திருந்தாள். சரி அவ்வளவுதான் என நினைக்கையில் எதிர்முனையில் "ஹலோ!" என்ற குரல் கேட்க பெருமூச்சு விட்டாள். அலைபேசியில் மெதுவாக கேட்டது அவளது தாயின் குரல். உள்ளூர சந்தோஷம் அகல்யாவிற்கு. தன் தாய், தான் அழைத்ததற்கு பதில் சொன்னாள் என்று. தன் தாயிடம் பிளாஸ்கில் தேநீர் வைத்துள்ளதாகவும் அதை குடிக்குமாறும் பசியெடுக்கும் பொழுது டேபிளில் வைத்துள்ள உணவை மதிய வேளைக்கு உண்ண நினைவு படுத்தினாள். 


 அலைபேசியை கீழே வைத்ததும் தான் வெற்றியின் முதல் படியில் நிற்பதாக அகல்யா உணர்ந்தாள். தன் உறவுகளிடம் தன் தாயை மாற்றி காட்டுவதாக சொல்லி தன்னிடம் அழைத்து வந்திருந்தாள். 


அன்றைய காலத்தில் அவள் தாய் மிகவும் சுறுசுறுப்பானவள். எந்நேரமும் ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு தன்னை எப்பொழுதும் பம்பரமாய் சுழல விட்டிருந்தவள். ஆனால் இன்று அவளின் மனமும் உடலும் ஒரு நிலையில்லாமல் தலைகீழாக மாறியிருந்தது. ஆம்! வெகுநாள் அவள் உட்கொண்டு வந்த மருந்துகள் தற்போது எதிர்வினை புரிய, அவள் தாயின் நரம்புகள் தளர்ந்து, சற்று ஞாபக மறதியும் கூடிப்போனது. மருத்துவரிடம் கேட்டதற்கு வயது மூப்பே காரணம் என்பது தான் விடையாக வந்தது. அவள் தாய்க்கு தான் என்ன செய்கிறோம் என்று கூட நினைவில்லாமல் பெயரளவிற்கு மட்டுமே ஒரு மனுஷியாய் வலம் வருகிறாள். 


 இதற்கிடையே கணவனின் பிரிவும் சேர்ந்து கொள்ள, அதையும் மனதில் பூட்டி வைத்துக் கொண்டு தன் கலகலப்பு தன்மையையும் இழந்தவள் அவள்.  


இப்படி ஒரு சில நிமிடங்கள் தன் தாயின் கடந்த காலத்தை நினைத்தாலும் இரண்டு, மூன்று நாட்களாக போராடிய தன் செயலுக்கு முதல் வெற்றி கிடைத்ததாக நினைத்தாள் அகல்யா. தன் அலைபேசியை கூட எப்படி இயக்குவது என்பதை மறந்து போயிருந்தாள் அவள் தாய். 


அழைப்பு வந்தால் எப்படி கையாள்வது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல வீட்டிலேயே பலமுறை பயிற்சி கொடுத்து தான் அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தாள் அகல்யா. அவள் வெற்றியின் முதல் படியை தொட்டவுடன் அடுத்த படிக்கு முன்னேற எத்தனித்தாள் . 


 அகல்யாவின் அடுத்த வெற்றியை ருசிக்கலாம் தொடர்ந்து வரும் தேர்வில்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...