Friday, March 31, 2023

மீனும் இரையும் by Vidhya Nivash

சின்னது முதல் பெரியது வரை மிக

 துல்லியமாக கண்ணாடி போல்

 தெரிந்த தண்ணீரில் இவ்வளவு

 மீன்களும் எங்கிருந்தது சின்ன

 சலனத்தில் உணவை வேட்டையாட

 கரையில் ஒதுங்கிய கண்ணாடி

 மீன்கள் உள்ளம் கவரும் அழகு

 கூட்டத்தில் ஒன்றை ஒன்று மோதாமல்

 அழகாக விலகிச் செல்ல தேடியது

 கிடைக்கவில்லை என்றதும் வந்த

 இடம் தெரியாமல் மறைய பார்க்கும்

 நமக்கு கண்வித்தை தான் ..


இரையை போட்ட மாத்திரத்தில் படை

 எடுத்து வந்தது. துணைக்கு நண்டு

 சிண்டு ,தலைவா முகர்ந்ததில் அது

 காய்ந்து போன ரொட்டி துண்டங்கள்

 .இதை உண்பதற்கு நம் மக்கிபோன

 உணவே மேல்.படையை திருப்பி

 நாட்டிற்கு விடுங்க.நொடியில் மறைந்த

 படை .

இரை கரை படை மறை.



 

நல்லதும் கெட்டதும் by Veena Shankar



 நல்லதும் கெட்டதும் 


வயது அறுபதை தொட்டதால் மருத்துவரின் ஆலோசனை படியும் வேறு வழியில்லாமல் ஒரு வருட காலமாக நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார் முகிலன். ஒரு போதும் ஆரம்பித்ததை பாதியில். விடாமல் தவறாமல் நடை பயிற்சி போனார். முதலில் அதிகாலையில் சென்றவர் தற்போது மாலையில் மாற்றி கொண்டார். அதுவும் பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு செல்லாமல் சாலையிலேயே தான் செல்வார். வாகனங்களின் ஒலி சத்தத்தையும் நிறைய மனிதர்களின் நடமாட்டத்தை அவர் விரும்பியதே காரணம். 


நடைபயிற்சி போகும் போது, சும்மா போகாமல் மற்றவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே செல்வார்.


"அம்மா! குழந்தையை இப்படி வாகன நெரிசல் இருக்கும் இடத்தில் தனியே விடலாமா?" என்று கடிந்து கொண்டு அந்த பிள்ளையை கவனமாக பிடித்து தன் வசம் வைத்து கொள்வார்.


யாரும் ஒலி எழுப்பியை அதிகமாக ஒலித்தாலும் மாறாக வலப்பக்கம் திரும்பும்போது ஓலிக்காமல் சென்றாலும் அவர்களை நிறுத்தி அவர்களை வசைபாடி அனுப்புவார்.


ஒருமுறை நடைபயிற்சி செல்லும் போது சாலையின் வளைவில் ஒருவன் வண்டியை நிறுத்தி அலைபேசியில் பேச அவனை கண்டபடி திட்ட, அவனும் பதிலுக்கு கத்த ஒரே ரணகளம் தான். பெரியவர் ,(முகிலன்) சொன்னது சரிதான் என்று கூடியிருந்தவர்கள் சொல்ல, முகிலனிடம் மன்னிப்பு கேட்டு செல்லுமாறு அவனை பணித்தனர்.


நித்தம் ஒரு சம்பவம் அகிலனால் நடக்க அவரை ஆதரித்தவர்கள் தூற்ற ஆரம்பித்தனர். ஆனாலும் முகிலன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 


வயதின் மூப்பு காரணமாக நடை தளர, கண் பார்வை சிறிது மங்க, காது கேட்கும் திறன் குறைய விடாது நடை பயிற்சியை தொடர்ந்தார் முகிலன்.


ஒரு நாள் அதீத இறைச்சலுடன் வந்த லாரியின் சப்தம் கேட்டு முகிலன் ஒதுங்க, அவருடைய கால், மாட்டு சாணத்தில் பதிய சாலையில் வழுக்கி விழுந்தார். அவரை தூக்கி எழ வைக்க ஆட்கள் இருந்தாலும், மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் முன் தானும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இந்த பெரியவருக்கு தெரிய வேண்டாமா? என கூட்டத்தில் ஒருவர் சொன்னது இம்முறை தெளிவாக கேட்டது முகிலனுக்கு. 


பிறருடைய நல்லதுக்கு தானே நான் சொன்னேன். நல்லது நினைப்பதும் தவறா என நினைத்தவாறே ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்து வீடு சேர்ந்தார்.


நல்லது நினைத்தாலும் கெடுதாலாய் மாறும் கலிகாலத்தில்.

Thursday, March 30, 2023

கிளிஞ்சல்கள் by Vidhya Nivash

 


ஒவ்வொன்றும் ஒரு விதம் ,ஒரு அழகு

 ஆனால் இவை அனைத்தும்

 குழுமிகிடங்கும் ஒரே கடல்

 அன்னையின் மடியில் இதில் சில

 வழுவழுவென சில வரிகளுடன் சில

 சொரசொரப்பாக ஏன் ஒரே தாயின்

 வயிற்றில் பிறந்தாலும் நிறத்தில்,

 தோற்றத்தில் மாறுபடுகின்றன.இதில்

 ஒன்றில் ஒன்று தான் தானே

 பெரியவன் ,சிறந்தவன் என்ற

 எண்ணம்.செல்லமாக போட்ட

 சண்டைகள் வளரவளர விரிசல்

 காண்பது ஏன்?இந்த கிளிஞ்சல்

 களுக்குள் எப்படியோ? கொட்டி

 கிடக்கும் கூட்டத்தில் அலையின்

 ஓட்டத்தில் கையில் காலில்

 சிக்கியவை .மீண்டும் கடல்

 அன்னையின்  மடியில்

 தஞ்சம் கொள்ள ஆசையோ.

Wednesday, March 29, 2023

படமும் குட்டிகதையும் by Veena Shankar

 


வாழ்க்கையின் சோதனை அடுத்த நிகழ்வுக்கான ஆலோசனை


 தன்னை தேவையில்லை என்று நினைத்த கணவனுக்கும்

தன்னை குற்றவாளி என்று தூற்றிய ஊருக்கும்

தன்னை சுயநலவாதி என்று சொல்லிய உறவினருக்கும்

பெண்ணின் பதில் சோகத்தில் மௌனம்


 எத்தனை முக்கோணங்கள் அமர்ந்திருக்கும் நிலையில், இருந்தாலும் முதல் கோணல் முற்றும் கோணலானதே அவள் வாழ்க்கையில் முதல் காதலும் தொடர்ந்து துரத்திய மணவாழ்க்கையும்

                                   குட்டி கதை

முதல் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்;

இரண்டாவது குழந்தைக்கு பால் பவுடர் வாங்கணும்;

எனக்கும் என் கணவருக்கும் ஃபோன் ரீ சார்ஜ் பண்ணனும்;

இந்த மாதம் கல்யாண முகூர்த்தம் வேறு நிறைய இருக்கிறது

மொய் செலவு இல்லாமல் ஃபேஷியல் பண்ண பியூட்டி பார்லர் போகணும். வாடகை, கரண்ட் பில் அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. அடுத்த வாரம் சொந்தக்காரர்களின் விஜயம் வேறு; கோயில் திருவிழா, தம்பி பையனுக்கு முடி இறக்குதல்; அப்பா எத்தனை செலவுகள். இதுக்கெல்லாம் காசு வேணும். அதற்கு முதல்ல நான் வேலைக்கு போகணும். நான் இருக்கிற இடத்துல ஒரு வேலையும் கிடைக்காது. அதுக்கு நான் முதல்ல பூமியில போய் பிறக்கணும் என்று சிந்தித்து கொண்டிருந்தாள் தேவலோக மாது ஜீன்ஸ் பேண்டில்

துணையான துணை தேடி by Vidhya Nivash

 


 தட்டு தடுமாறி பாதைகள் இல்லா வெளியில் பயணிக்கும் போது தான் தெரியும் சாலையின் அருமை.துணைக்கும் யாருமில்லை என்றால் எங்கும் வெறுமை.அதுவே இன்று யாரும் இல்லா வெளியில் மலை உயர ஏறுவதை கனவாக கொண்டு உயிரை பணயம் வைத்து வாழ்க்கையில் சுவாரஸ்யம் தேவை என்று சிலரும் அதில் தைரியமும் ,இயற்கையையும் துணை கொண்டு.மற்றும் சிலர் சைக்கிள்,கார் என்று பல ஊர்கள் சுற்றி வர போகும் இடமெல்லாம் சொந்தம் பழகி,மொழி பழகி,உணவு பழகி புதுவிதமான அனுபவம் தேடி.எப்பிடியும் கடைசியாக அவர் சொல் நம் சொந்த வீடும் ,சோறுமே சொர்க்கம் என்பதுவே.

வாத்துகள் இரண்டும் ஒன்றின் பாதையில் ஒன்று தொடர நீரில் கோடு போட்ட அதிசயம்.ஒன்றிக்கு துணையாக ஒன்று இருக்க இணைபிரியாத பந்தம்.இதில் ஆண் பெண் என்ற முரண்பாடு அற்று.இருவரும் ஒன்று என்று உணர்ந்தலே போதும் காண்பவை எல்லாம் இனிதே.துணையான துணை தேடி அலையாமல் இருக்கும் துணையின் உணர்வுகளை உணர்ந்தாலே போதும் இல்லை.

Tuesday, March 28, 2023

படமும் கவிதைகளும் by Veena Shankar



இறைவன் படைப்பின் பிரம்மாண்டம் மலையும், 

பெண் சிலையும்


 மனம் சிரிக்க இடம் தேடுகிறது 

அறிவு சிந்திக்க இடம் தேடுகிறது 

விடியல் சந்திக்க காலம் தேடுகிறது 

பறவை பறக்க வானம் தேடுகிறது  

மேகம் தவழ மலை தேடுகிறது 

பெண்ணின் கண் தேடுகிறது காதலை


மலையோ? மழை மேகமோ? தீண்டும்

 தென்றலோ? 


யார் அங்கே? என் காதலை சொல்லி விடுங்கள்

 அவனிடத்தில். அவனுக்காக

ஏங்கிய நாட்களையும்

அவன் இல்லாது கடக்கும்

எஞ்சிய நாட்களையும் பற்றி


அடர் கூந்தலும் அவள் சுடர் விழியும் 

அடர்ந்த காடும் அதன் நிழலும்

ஒளிரும் சூரியனும்

அவன் செந்நிற கதிரும்

தீண்டும் தென்றலும் அதனால் சிலிரும்

 மெய்யும்

பரந்த மலையும்

அங்கே வெண்பனி போர்வையும்

பசுமை வயலும் ஆங்கு திரியும் பறவைகளும்

நோக்குவது எதனை?

தேவலோகத்து இந்திரனல்ல பூலோகத்து

 பிரம்மன் விவசாயியை


வெண்பனி போர்த்திய மலையை ரசிக்கும்

 சேவ்வாடை அணிந்த மாது

அகந்தை அழிக்கும் by Vidhya Nivash


 ஐந்து கிரகங்களின் அணி வகுப்பு

 என்று கேள்விப்பட்டேன்..சிறிது

 தாமதமாக பார்த்தேன் இரண்டு

 கிரகங்கள் மறைந்துவிட்டன.

எத்தனை அதிசயங்கள் வானில்

 நித்தம் நித்தம் பார்த்தாலும் மயக்கும்

 அழகு நிலவும் ,வானும் அள்ள அள்ள

 குறையா புதையல்.கையில் ஐந்து

விரல்கள் ஒன்றாக இருந்தாலும்

 ஒன்றில் ஒன்று மாறுபட்டாலும் ஒன்று

 குறைதாலும் மற்றது செயலற்றது

 .இன்று கேட்டதில் பிடித்தது தானே 

உயர்ந்தவன் என்ற எண்ணம் அடி

 முட்டாள் தனம் ஒவ்வொருவரும்

 தனித்தன்மை வாய்ந்தவர்.

இந்த கிரகங்களை போல தான்

 சின்ன,  பெரிய,அருகில் ,தொலைவில்

 எங்கு இருந்தாலும் எதுவும் நிரந்தரம்

 இல்லை.ஒரு நாள் மாறும்.நாம் பிறரை

 எவ்விதம் நினைக்கிறோமோ அதுவே

 நமக்கும். இதில் யாரும் உயர்த்தி

தாழ்த்தி இல்லை.


திருமண நாள் by Veena Shankar



திருமண நாள்


அன்றைய தினம் வசந்தனின் திருமண நாள் என்பதால் தன் மனைவிக்கு ஒரு முழம் பூவும் அவளுக்கு பிடித்த மஞ்சள் ரோஜாவையும் அதிரசத்தையும் கூடவே தான் கொறிக்க உருளை கிழங்கு வறுவலும் வாங்கி கொண்டு வந்தான். வீட்டினுள் வரும் போதே வசந்தனின் மகன் அவனையும் கையிலிருந்த பொருட்களையும் பார்த்து புன்னகை செய்தவாறே அலுவலகத்திற்கு புறப்பட்டான்.  


                             வசந்தன் தான் கொண்டு வந்த பொருட்களை மனைவிக்கு தெரியாமல் ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்தான். காலை பதினோரு மணிக்குள் அவளுக்கு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே தட்டை அலங்கரித்தான் . 


                 " சௌமியா! இந்தா! உனக்கு பிடித்ததை வாங்கி வந்திருக்கிறேன், எடுத்து கொள்.. போன வருஷம் எனக்கு மஞ்சள் ரோஜா கிடைக்கவில்லை.. அதனால் இந்த முறை சீக்கிரமே கடைக்கு போய் பூ காலியாவதற்குள் வாங்கி வந்துட்டேன். உன்னுடைய அகல விழிகளை திறந்து பார்.” என்று சொல்லியவாறே தட்டை அவள் பக்கத்தில் வைக்க " ஏங்க ! எனக்கு இருக்கிற நாலு முடிக்கு இவ்வளவு பூவா? " என்று அவள் மலைக்க,


           "சக்கரை வியாதி வந்ததிலிருந்து நான் இனிப்பு சாப்பிடுவதில்லைன்னு தெரிஞ்சும் நீங்க எனக்கு பிடிக்கும்ன்னு அதிரசம் வாங்கி வந்துட்டீங்க. சரி! பரவாயில்லை. எனக்குன்னு சொல்லி வாங்கி வந்துட்டு நீங்களே சாப்பிடாதீங்க. பையனுக்கும் கொஞ்சம் கொடுங்க" என்று தன் கண்களாலேயே சொன்னாள். அதை புரிந்து கொண்ட வசந்தனும் “சரிம்மா” என்றபடியே தலையாட்டி அவளுடைய கேசத்தை வருடினான்.  


                               சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வசந்தன், தன் அத்தை மகளான சௌமியாவிடம் “இன்றைய காதலர் தினத்திலே” அவளிடம் தன் காதலை சொல்ல, அவளும் இவனை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்தாள். பிறகென்ன நல்ல தினம் பார்த்து திருமணம் தான். சௌமியாவின் படிப்பு முடிய ஒரு வருடம் இருந்ததால் அடுத்த வருடம் அதே தினத்தில் திருமணம் முடிந்தது. 


                      ஆனால் பத்து வருட காலம் மட்டுமே நீடித்தது அந்த பந்தம். வருடா வருடம் தங்களுடைய திருமண நாள் அன்று கோயிலுக்கு செல்வது அவர்கள் வழக்கம். அன்றும். அப்படிதான். கோயில் படியில் இறங்கும் போது தவறுதலாக விழுந்த சௌமியா, இருதயம் பாதிக்கப்பட்டு இறந்தாள். வசந்தனின் பையனுக்கு அப்பொழுது ஏழு - எட்டு வயது இருக்கும். பலரும் வசந்தனை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் அவளுடைய நினைவாக தான் வாழ்வதாகவும் தன் பிள்ளையை தானே வளர்த்துக் கொள்வதாகவும் சொல்லி மறுமணத்திற்கு மறுத்துவிட்டான்.


                            இன்றும் தன் மனைவியின் மீதான காதலை வசந்தன் விட்டு விடவில்லை. தன்னை விட்டு மனைவி பிரிந்த போதும் அவளுடைய நினைவாகவே இருக்கும் வசந்தன், அவள் போட்டோ முன்பு அவளுக்கு பிடித்த பொருட்களை வைத்து அவள் தன்னிடம் பேசுவதாக நினைத்து கொண்டு இவனும் பேசுவான்.


                   ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் திருமண நாளை கொண்டாடி வருகிறான் வசந்தன். திருமண பந்தம் அவ்வளவு எளிதாக மறக்ககூடியதல்ல. 


                     இருந்தாலும் இறந்தாலும் நினைவு இறப்பதில்லை. அதற்கு ஓய்வுமில்லை.

Monday, March 27, 2023

நம்பிக்கையானவள் by Veena Shankar



 நம்பிக்கையானவள் 


அந்த ஊரிலேயே ராமசாமியின் குடும்பம் தான் பெரியது. தன் மகன் மகள்களோடு கூட்டுக் குடும்பமாய் இருந்தாலும் ராமசாமியின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர். பெரிய குடும்பம் என்பதால் ஊரிலும் அந்த குடும்பத்திற்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. எந்த திருவிழாவானாலும் ராமசாமி தான் வழி நடத்துவார். அவருக்கு விவசாயமே பிரதானம் என்பதால் வீட்டில் அனைவரின் உழைப்பும் வயலில் பதியப்பட்டிருக்கும்.


 மாரியம்மனுக்கு உகந்த பங்குனி மாதத்தில் திருவிழா நடத்துவது அந்த ஊரின் வழக்கம். அந்த மாதத்தில் கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறும். கொடித்தடை இருக்கும் நாட்களில் சுப காரியங்களை ஊர்மக்கள் தவிர்த்து விடுவர். அவரவர் வேண்டுதலின் படி அழகு குத்துதல், உருவ பொம்மை எடுத்தல், பூக்குழி இறங்குதல், பூக்கூடை, தீச்சட்டி எடுப்பது வழக்கமாக இருப்பதால் அந்த மாதமே ஊரே கோலாகளப்பட்டிருக்கும்.


 இப்படி இருக்கையில் ராமசாமியின் பேரப்பிள்ளைகள் வெளியூரில் படித்து அங்கேயே வேலை பார்த்தும் தொழில் செய்தும் வந்தனர். ஊரின் சம்பிரதாயத்தில் நம்பிக்கை குறைவானதாகவும் தெய்வ நம்பிக்கையும் இல்லாமல் இருந்தனர்.


மூத்த மகனுடைய மகன் வெளியூரிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சமயம், ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அவனுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் பேசும் போதே நிலைமை ஏதோ விபரீதமாய் இருப்பதை உணர்ந்து பக்கத்தில் படுத்து கொண்டிருந்த ராமசாமி எழுந்து உட்கார்ந்தார். என்ன ஆனது என்று அவர் கேட்க, தன்னுடைய அலுவலகத்தில் தீ பற்றிக் கொண்டதாக அவர் பேரன் தெரிவித்தான். அவர் தன் பேரனை தேற்றினார் . மேலும் கொடித்தடை இருக்கும் போது யாரும் ஊரை விட்டு வெளியே போகக்கூடாது என்று தெரிந்தும் அதையும் மீறி சென்ற முறை அவன் ஊருக்கு பயணம் செய்ததை சுட்டிக் காட்டினார். தீச்சட்டி எடுப்பதை அவன் கிண்டல் செய்ததை எண்ணி அவர் வேதனை கொண்டதாகவும் தெரிவித்தார்.


தற்போது தான் காரில் சென்றாலும் அவ்வளவு சீக்கிரமாக அந்த ஊரை அடைய முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தான் பேரன்.


 மனம் உடைந்திருந்தவனிடம் அவனுடைய தாத்தா ராமசாமி அந்த ஊர் மாரியம்மனை மனதார வேண்டிக் கொள்ளுமாறு பணித்தார். முதலில் தயங்கியவன், அன்றைய தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் நாடு வெற்றி பெற வேண்டும் என்று வந்திருந்த ரசிகர்கள் கூட்டம் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டதை பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வர, உடனே தானும் பூஜை அறைக்கு சென்று வாய்விட்டு அந்த மாரியம்மனை வேண்டினான்.


அவ்வாறு வேண்டி கொண்டிருந்த சமயம் மறுபடியும் அலைபேசி சிணுங்க, மேற்கொண்டு என்ன ஆனதோ என்ற பயத்தில் பேசத் தொடங்கினான்.


 எதிர்முனையில் அவன் நண்பர்களின் கூட்டம் சிரித்தவாறும் அவனை கிண்டலடித்த வண்ணமாய் இருக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


மேலும் நண்பர்களில் ஒருவன், அன்றைய தினம் ஏப்ரல் ஒன்று என்றும் அது முட்டாள்கள் தினம் என்று சொல்லி அவனை பீதியடைய செய்ததாக சொல்ல, அவனுக்கு கடுப்பாக இருந்தது. இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று நினைத்ததான். தன்னுடைய கஷ்டத்தை மாரியம்மன் அரை மணி நேரத்திற்குள் தீர்தது வைத்ததை எண்ணி மகிழ்ந்தான். 


 இந்த விஷயத்தை தன் தாத்தாவிடம் சொல்ல , அவர் தன் பேரனை மாரியம்மனுக்கு பூக்குழி இறங்குவதாக வேண்டிக் கொள்ளும் படி சொன்னார்.. அவனும் அதன்படியே செய்வதாக வேண்டிக் கொண்டான் . 


இந்த விஷயம் குடும்பத்தாருக்கும் தெரிய அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . பேரனுக்கு தெய்வ நம்பிக்கை ஏற்படுத்திய மாரியம்மனுக்கு நன்றி சொன்னார் தாத்தா ராமசாமி.

Sunday, March 26, 2023

ஐம்புலனும் பேசியதே by Vidhya Nivash

 


மேகமூட்டத்துடன் தொடங்கிய விடியல்

 நடைப்பயிற்சிக்கு கீழே சென்றவுடன்

 தான் தெரிந்தது மழைச்சாரலின்

 தடயங்கள் சாலையில் அதனுடன்

 பாதத்தடங்களை பதித்து நடக்க

 எங்கும் அமைதி ஐம்புலனும் பேசியது

 எப்போதும் வானை ஆக்ரமிக்கும்

 சூரியன் சுறுசுறுப்பை விடுத்து தூங்க

 இன்று தான் கண்ணில்ப்பட்ட

 சாலையின் இருபுறமும் உள்ள

 மின்விளக்குகள் கண்சிமிட்ட நாங்கள்

 இருபத்துநான்கு மணிநேரமும் கடைசி

 மூச்சு வரை மின்னுவோம் என்று

 சொல்ல ஆங்காங்கே குருவிகள் பேச

 சாலையில் கடந்த ஒரிருவரின்

 நறுமணங்கள் எப்போதோ முகர்ந்த

 பள்ளி,கல்லூரி நாட்களுக்கு இழுக்க

 இடையில் வந்த யார் வீட்டிலோ

 கொதிக்கும் சாம்பாரின் மணம்

 அம்மாவிடம் இழுத்துச் செல்ல

 முகர்தல் பேசியது மின்னல் வேகத்தில்

 செல்லும் பல வாகனங்களும் தூங்க

 சாலையில் செல்லும் ஒரிரு

 வாகனங்களும்  மெல்ல அரைத்

தூக்கத்தில் நகர எறும்புக்கூட்டம்

 போல் செல்லும்  மாணவர்கள்

இல்லாமல் பள்ளிக்களும் தூங்க

 வேலைநிமித்தமாக செல்லும் ஒரிரு

 ஆசிரியர்கள் பரபரப்பின்றி மலர்ந்த

 முகத்துடன் செல்ல அரைவிழிகள்

 திறந்தார் போல் பள்ளிகதவுகள்

 வரவேற்க ஆங்காங்கே

 நடக்கும் என்னை போன்றும் ஒரு சில

 சிறுவரும் பெரியோரும் இதனுடன்

 மேனியை தழுவிய தென்றலும்

 ஐம்புலனும்  மௌனத்தில் பல கதை

 பேசி துணைவர கடைசியாக மழைத்

துளிகள் மீண்டும் வழியனுப்ப வந்தது .



தெரியாது by Veena Shankar

 


தெரியாது


அலைகளுக்கு நடுவே இருக்கும் கடலின் ஆழம் தெரியாது


மங்கையின் மனதிற்குள்ளே பிறக்கும் எண்ணம் தெரியாது


கருவில் இருக்கும் சிசுவின் நளினம் தெரியாது


பேச்சின் ஊடே வீசும் வார்த்தையின் வேகம் தெரியாது


ஆணின் அன்பு எதுவரை என்பது சொல்ல தெரியாது


மரத்தின் கிளைகளுக்கிடையே இருக்கும் பிணைப்பு தெரியாது


மனிதனின் வெற்றி இதுவே என்று கணிக்க தெரியாது

Friday, March 24, 2023

வர்ணங்கள் by Vidhya Nivash



சிறுவயதிலிருந்து பல

 வண்ணங்களால் ஈர்க்கப்பட்டாலும்..


மனதின் பக்குவத்தால் உணர்ந்த

வண்ணங்கள் எத்தனை நிறைவை 

தருகின்றன


கார் கூந்தலை விட வெள்ளி

 கம்பிகள் அழகு அதிலும் மருதாணி

 பூசியது ஒரு வகை


வண்ண வண்ண ஆடைகளை விட

 வெண்மையும் கருமையும் ஒரு புதிய

 தோற்றத்தை, கம்பீரத்தை ,தனி 

இடத்தையும் தருகிறதில்லை..

பார்க்கும் யாவையும் மனதின் கண்

 புதுப்புது வண்ணங்களை

இயற்கையின் வர்ணஜாலங்களை

 அள்ளித்தெளிக்க அசந்து போனவை

 மயில் கழுத்தின்

 வண்ணம்,செங்காந்தல் மலரின்

 சிவப்பு,ஒவ்வொரு மணிக்கு மாறும்

 வானின் வண்ணம் குறிப்பாக சூரியன் வருகை,மறைவு
 
செக்கச்சிவந்த மஞ்சள்,  நீலம்..

குயிலின் கருமை

புறாவின் வெண்மை
 
பன்னீர் ரோஜாவின் இளஞ்சிவப்பு

அடுக்கிக்கொண்டே போகலாம்..

செறிவூட்டப்பட்ட வண்ணங்கள்

 முன்னே எண்ணங்களை

 வண்ணங்களால் தட்டிச்செல்லும்

 இயற்கையின் முன் அடிமையே...


வர்ணங்கள் by Veena Shankar

 


 அன்பான துணை நம் வாழ்வின் வர்ணம்

அழகான சிநேகம் நம் பூரிப்பின் வர்ணம்

மழலையின் வரவு நம் வசந்தத்தின் வர்ணம்

சாதனையின் சின்னம் நம் புரிதலின் வர்ணம்

துடிப்பான செயல்கள் நம் எண்ணத்தின் வர்ணம்

செழிப்பான செல்வம் நம் வெற்றியின் வர்ணம்

சலனமில்லா உடல் நம் மனதின் வர்ணம்

தோல்வியில்லா பாதை நம் முதிர்ச்சியின் வர்ணம்

வருடம் தேய்வது நம் வயதின் வர்ணம்

தொடரும் பயணம் நம் காலத்தின் வர்ணம்


பல எண்ணங்களே செயலின் வர்ணங்கள்

அந்த வர்ணத்தின் வெற்றியே வாழ்வின் சாதனைகள் 

அந்த சாதனைகளே தொடர் வெற்றியின் சின்னங்கள்

அந்த சின்னங்களே கடந்து வந்த பாதையின் வரலாறு

அந்த வரலாறே நாளைய தலைமுறைக்கு பாடம்

அந்த பாடமே அவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி

அந்த ஆராய்ச்சியே நடத்தும் சோதனைக்கு விடை

அந்த விடையே தரும் வாழ்க்கைக்கு வர்ணம் 

அதுவும் புது வர்ணம் அடுத்தவருக்கும் விளங்கும் வண்ணம்


வர்ணங்கள்

மேனியில் நீல நிற பட்டு புடவை தவழ

முதுகில் உண்மையாக பின்னப்பட்ட கருங்கூந்தல் படர 

கழுத்தில் மரகத பச்சை நிற மாலை குடி கொள்ள

நெற்றியில் சிவப்பு நிற பொட்டும் அதன் மேல் வெள்ளை நிற விபூதியும் நிலைக்க 

செந்நிற மூக்குத்தி இனிதாய் இடம் பார்த்து அமர 

கைகளில் மஞ்சள் நிற பொன் வளைகள் அணி வகுக்க

சிவந்த மேனியாள் உட்கார வைக்கப்பட்டாள் 

மாப்பிள்ளையின் முன்

சிவந்தது இருவர் முகம் மறுமுறையும் நாணத்தால் , அவள் வளைகாப்பு விழாவிலே


வர்ணம்

அமைதிக்கான வர்ணம் அடக்கம்

அறிவிற்கான வர்ணம் ஆக்கம்

துன்பத்திற்கான வர்ணம் ஆதிக்கம்

பரிவிற்கான வர்ணம் ஏக்கம்

ஆசைக்கான வர்ணம் தாக்கம்

ஓய்விற்கான வர்ணம் தூக்கம்

மறைவிற்கான வர்ணம் துக்கம்

அழற்சிக்கான வர்ணம் தேக்கம்

செயலிற்கான வர்ணம் நோக்கம்

தவறுக்கான வர்ணம் நீக்கம்

முயற்சிக்கான வர்ணம் தொடக்கம்

காயத்திற்கான வர்ணம் வீக்கம்

தூண்டுதலுக்கான வர்ணம் ஊக்கம்

அழகிற்கான வர்ணம் மயக்கம்

புரிதலுக்கான வர்ணம் தயக்கம்

துடிப்பிற்கான வர்ணம் செயலாக்கம்

கோபத்திற்கான வர்ணம் மூர்க்கம்

தேடுதலுக்கான வர்ணம் மார்க்கம்

வாழ்க்கைக்கான வர்ணம் வர்க்கம்

முடிவிற்கான வர்ணம் தீர்க்கம்

தெளிவிற்கான வர்ணம் தர்க்கம்

பரிவர்த்தனைக்கான வர்ணம் ரொக்கம்

மாற்றத்திற்கான வர்ணம் சொர்க்கம்

பிரிவிற்கான வர்ணம் பிணக்கம் 

தஞ்சமடைவதிற்கான வர்ணம் இணக்கம்

தோல்விக்கான வர்ணம் சுணக்கம்

சோர்வுக்கான வர்ணம் கிறக்கம்

தடுமாற்றத்தின் வர்ணம் நடுக்கம்

வெற்றியின் வர்ணம் பதக்கம்

இவை யாவும் மனதில் ஏற்றால் சிநேகம் பக்கம்

அநீதி by Veena Shankar



 அநீதி


படித்த கேள்வி தேர்வில் வாராமல் இருப்பதும்


நமக்கு பிடித்த உணவை உண்ணும் வேளையில் பிறர் யாசிப்பதும்


காவலாளியாக இருந்து மதிய வேளையில் சற்றே கண்ணயரும்போது பிடிபடுவதும்


அவசரமாக பணம் எடுக்க வங்கி செல்லும் போது அடுத்தவருக்கு படிவம் நிரப்புவதும்


நம் அழகு கண்ணாடியில் ஒழுங்கீனமாக தெரிவதும்


நிலாச்சோறு ஊட்டும் போது ஒருநாளும் நிலா பிடிபடாமல் போக்கு காட்டுவதும்


அடுத்த பெண்ணின் சேலை மட்டும் அழகாய் தெரிவதும்


அழகு நிலையத்திற்கு சென்று வீடு திரும்பியதும் நம்மை வித்தியாசமாக அடுத்தவர் பார்ப்பதும்


 பார்த்த, படித்த, பிடித்த விசயங்கள் நம்மை எதிரியாக நினைப்பதும்


அநீதியே! நீதி தெரிந்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

Thursday, March 23, 2023

சாட்சியோ by Vidhya Nivash

 


பல பறவைகள் கூட்டமாக பசியாற 

ஒரு வித்தியாசமான இல்லை

 ஆச்சரியம் அதிசயம் ஒரு பறவை

 மட்டும் ஒற்றை காலுடன் பார்க்கும்

 நமக்கு மட்டுமே வித்தியாசமான

 தோற்றம் அதுவோ சம பறவைகளுடன்

 இயல்பாக பறக்க, அமர,நடக்க இது

 எப்படி?

உடலில் அனைத்தும் சரிவர இருக்கும்

 போதே மனதளவில் குறையாக

 வருந்துவர் மத்தியில் புது நம்பிக்கை

 கொடுத்தது இந்த பறவை மனதளவில்

 வலிமையாக இருந்தாலே குறைகள்

 மறைந்து நிறைகள் மேலோங்கும்

 என்பதற்கு சாட்சியோ..

வியக்கிறேன் by Veena Shankar

 


இருக்கப்படும் பூமியும்

இறைக்கப்படும் நீரும்


வரையறுக்கப்பட்ட சூரியனும்

வரன்முறையற்ற காற்றும்


இழுக்கப்படும் வாயுவும்

இழக்கப்படும் வாயுவும்


படைத்தவனும்

புடைக்க அனுபவிப்பவனும் 


ஒன்றே என்றாலும் உன்னில் இத்தனை வகைகளா?


செடிகள், கொடிகள், மரங்கள் என எத்தனை பரிணாமங்கள் உன்னில்


உணவாகும் மருந்தாகும் நீ கண்ணுக்கு விருந்தாவதும் உண்டு பல நிற பூக்களாலும் மாறுபட்ட நிறத்தை உடைய இலைகளாலும்


வியக்கிறேன் உன்னை கண்டு

வியர்க்கிறேன் உன் வளமை கண்டு


குளிர்கிறேன் உன் பசுமை கண்டு

கூனுகிறேன் உன் அருமை கண்டு

Wednesday, March 22, 2023

சிலையா? உயிரா? by Vidhya Nivash

 


சிவப்பு கல் மெத்தையில் பல வண்ண

 கற்கள் அலங்கரிக்க கூடையில்

 செடிகள் வளர்ந்து நிற்க

அனைத்தும் செயற்கையான

 பெட்டியில் துள்ளும் ஈர் உயிர்கள்

இதற்கு மத்தியில் அமைதியாக

 தியானத்தில் புத்தர்..

புத்தர் இருப்பது கண்ணாடிப் பெட்டின் 

 உள்ளேவா?வெளியேவா?

பார்க்க உள்ளிருந்தாலும் அவர்

 இருப்பதோ வெளியே சுவற்றில்..

பல நேரம் நாமும் சிலதில்

 உள்ளிருப்பது போன்று

 இருந்தாலும் உற்றுப்பார்த்தால் தான்

 தெரியும் நாம் இருப்பது வெளியில் ..

சில நேரம் சிலையாக (செயற்கையாக உருவாக்கப்பட்ட)

பல நேரம் உயிராக (இயற்கையில் உருவான)

வளம் வந்தாலும் நம் இடத்தை நாம்

 அறிந்தால் சுகமே..



என்ன இல்லை என்னிடம் by Veena Shankar

 


என்ன இல்லை என்னிடம் 


இருள் நீக்க ஒளி வேண்டுமா?


தாகம் அடங்க நீர் வேண்டுமா?


மாசு நீங்கிய காற்று வேண்டுமா? 


குளிர் காய சூரியன் வேண்டுமா? 


ஊர் சேர பாதை வேண்டுமா? 


அழகை ரசிக்க வானம் வேண்டுமா? 


மனம் இளைப்பாற மணற்பரப்பு வேண்டுமா? 


கவலை மறக்க குயில் இசை வேண்டுமா?


காதலின் புகழ் பாட இவை அனைத்தும் வேண்டுமா?


நீ வேண்டுவது அனைத்தும் என்னிடம் இருக்கும் போது நீயோ வீட்டுக்குள்ளே முடங்கி விட்டு


இயற்கையான என்னை குறை சொல்கிறாய்.

Tuesday, March 21, 2023

உருமாறும் அதிசயம் by Vidhya Nivash

 


மஞ்சள் வானில் நீ சிரிக்க உன்

 அழகில் பார்ப்போர் கண்கள்  கூச

நன்னீர் எங்கும் தகதகக்க..

இன்றைய அதிசயம்

கீழே கார்மேகம் மேலே தெளிந்த நீலவானம் 

இடையே டார்ச் லைட் அடிப்பது போல் வானத்தை

 கிழித்துக் கொண்டு வரும் பகலவனின்

 ஒளிக்கதிர்கள்..

வானத்திற்கு கூலிங் கிளாஸ் போட்ட மாதிரி

 ஒரு காட்சி அப்படியே கண்களில் படமெடுக்க

 மனதில் பதிந்த ஓவியம்..

எத்தனை எத்தனை அழகு நித்தம் ரசித்தாலும் 

அடங்க உருமாறும் அதிசயமோ வானமும்

 பகலவனும்..



திருப்தி by Veena Shankar



 திருப்தி


"ஊரின் பெரிய தொழிலதிபர் வீட்டு கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்.? பாருங்க! எவ்வளவு ஆடம்பரமாக நடக்க போகுது" என்று சொல்லியவாறே தன் கணவன் ரகுவை தன்னுடைய முதலாளியின் வீட்டு கல்யாணத்திற்கு எப்படியாவது அழைத்து செல்ல வேண்டுமென்று முடிவெடுத்திருந்தாள் ராகிணி. அவளுடைய கட்டாயத்தின் பெயரிலேயே தானும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து குழந்தைகளிடமும் விடுப்பு எடுக்க சொன்னான் ரகு. 


பல பல விளையாட்டுக்களும் திண்பண்டங்களும் பரிசுகளும் இருக்கும் என குழந்தைகளுக்கு ஆசை வார்த்தை காட்டினாள். 

அதனால் குழந்தைகளும் சுணக்கமில்லாமல் திருமணத்திற்கு கிளம்பினர். 


ஊரெங்கும் போஸ்டர் ஒட்டி, ஊர் மக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி' சாப்பிட்டு போகும் படி கேட்டுக்கொண்டார் அந்த தொழிலதிபர். ஆடம்பர கல்யாண நிகழ்வை காணப் போவதாக ஊர் மக்கள் நினைத்தே அங்கு சென்றனர். 


பெரிய திடல் ஒன்றில் கோயில் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மணமக்கள் அமர்ந்திருக்க, பற்பல இடங்களில் உணவுக் கூடங்கள் அமைய பெற்றிருந்தன. எந்த திசையிலிருந்தும் யாரும் வந்து உணவருந்தலாம் என்று சொல்லப்பட்டிருந்ததால் வருவோர் போவர் நிறைய பேர் மூன்று வேளையும் வயிறார உணவருந்தி சென்ற வண்ணம் இருந்தனர்.


மணமக்களின் முகத்தில் மகிழ்ச்சியும், தொழிலதிபரின் செயலில் பெருமிதமும் காண முடிந்தது. 


தன் நெருங்கிய நண்பரை அழைத்து ஊர் மக்கள் கல்யாணத்தை பற்றி என்ன பேசுகிறார்கள் என தொழிலதிபர் கேட்க, பசி நீங்க உண்டது திருப்தி அளிப்பதாக சொல்கிறார்கள் என்று அவர் பதிலளித்தார். தொழிலதிபரின் முகத்தில் சந்தோஷம் பீறிட்டது.


கல்யாண மண்டபம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்தவாறே நுழைந்த ரகுவுக்கும் ராகிணிக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. மணமேடை தவிர எங்கும் ஆடம்பரம் இல்லை. சாதரணமான பந்தல் ஆங்காங்கே உணவு கூடத்திற்காக போடப்பட்டிருந்தது. மேலும் சாமானியனும் மணமக்களை கண்டு வாழ்த்த வரிசை அமைந்து இருந்தது. அவ்வளவு தான். மிகுந்த எதிர்பார்ப்போடு சென்றவர்கள் வயிறார உண்டனர்.


ராகிணியை பார்த்து கல்யாணம் ஏற்பாடு எப்படியிருக்கிறது என்று அவளுடைய அலுவலக நண்பர் ஒருவர் கேட்க, தான் நிராசை ஆனதையும் எதிர்பார்த்த அளவுக்கு ஏதும் இல்லாததாகவும் உணவு மட்டுமே திருப்தி அளிப்பதாக இருந்ததாக சொன்னாள் பக்கத்தில் அவள் இருப்பதை அறியாமல். அவள் சொன்னதை கேட்டு கொண்டிருந்த அவளுடைய முதலாளிக்கு சற்றே சங்கடமாகியது. இருந்தாலும் ஒவ்வொரு மனிதனையும் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.


தன்னுடைய பெண் தனக்கு கல்யாணத்தில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றும் ஆடம்பரமாக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் வந்தவர்களுக்கு வயிறார பசியாற்றும் படி தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டதால் தான் தன்னுடைய ஆடம்பரத்தை திருமணத்தில் காட்டாமல் ஊரில் உள்ள எவரும் வந்து பசியாற வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்ததாக எண்ணி தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். 


 "போதும் " என்ற சொல் ஒன்று மட்டுமே ஒருவர் பசியாறியதும் மனம் உவந்து சொல்லக்கூடியது. அதுவே பசியாற்றியவருக்கு திருப்தியை தரக்கூடியது என்பதையும் தொழிலதிபர் உணர்ந்திருந்தார். 


பொன்னின் அழகும் குணமும் தனியே இருந்தால் அதற்கு சிறப்பு இல்லை. ஆனால் அது அணியப்படும் நபரை பொறுத்தே அதன் வனப்பு கூடுகிறது.

Monday, March 20, 2023

இரட்டிப்பு மகிழ்ச்சி by Vidhya Nivash


 இரண்டு வருடத்திற்கு முன் வரைந்த

 படம் இதே தினத்தில் சர்வதேச

 மகிழ்ச்சி தினத்தில்..

சிரித்து மகிழ பெரிய காரணம் தேவையில்லை

மனது விரும்பினால் போதும்..

அதுவும் பிறரை காயப்படுத்தாமல் இருந்தால் 

போதும்..

எது கிடைத்தால் மகிழ்ச்சி வரும்?

நல்லஉறவு,ஆரோக்கியம்,உணவு,இடம்,பொருள்,

காற்று,மழை,தூக்கம்,பணம்,சூழல் என நீண்டது 

அந்த பட்டியல் .அது தற்காலிக மற்றும் நிரந்தர

 மகிழ்ச்சி என்று ஒவ்வொருவரிடம் மாறுபடும் ..

பிறரை மகிழ்வித்து பாருங்களே அந்த மகிழ்ச்சி

 இரட்டிப்பு அடையும்..

பதிவை முடிக்கும் தருவாயில் வந்த 

  எதிர்பார மகிழ்ச்சி..



ஒரு மலர் போதும் பெண்ணுக்கு

 மனதில் மகிழ்ச்சி பூக்க😊

 



பெண் திருமணத்திற்கு பின் by Veena Shankar

 


பெண் திருமணத்திற்கு பின்


அரிதானது தற்போது என் குணமானது - கோபம்


குறையானது தற்போது சுமையானது - குடும்பம்


துணையானது தற்போது தூரமானது - தோழிகள்


வீரமானது தற்போது சாந்தமானது - குணம்


மிகையானது தற்போது சிறுமையானது - நகைச்சுவை


குறும்பானது தற்போது 

கடமையானது - பொறுப்பு


வடிவமானது தற்போது வருத்தமானது - தோற்றம்


குசும்பானது தற்போது குற்றமானது - செயல்


விந்தையானது தற்போது குறிப்பானது - பேச்சு


எதிரானது தற்போது உடந்தையானது - கலாச்சாரம்


வெறுமையானது தற்போது வெற்றியானது - கடமை 


துணிவானது 

தற்போது சகிப்புத் தன்மையானது - வாழ்க்கை


நிறைவானது தற்போது சிறையானது - பாசம்


என்றாவது அது எனக்கானது - தனிமை


காத்திருப்பேன் எனக்கான நாள் வரும் வரை

Saturday, March 18, 2023

புதுமை தமிழச்சி by Vidhya Nivash

 


புதுமை தமிழச்சி என்ற நிகழ்ச்சில்

 கலந்துக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. 

அசந்து போனேன் எத்தனை எத்தனை

 திறமைகள் இந்த அற்புத படைப்பிடம்

 பீரங்கியில் இருந்து வெடிக்க தயாராக இருந்த குண்டு போல் பேச்சு,

கூண்டிலிருந்து பறந்து வந்த குயில்

 போல்பாட்டு,

கட்டி வைத்த சிறகுகளை அவிழ்க்க

 மயில் அல்ல ராவண ஆட்டம்,

வண்ணத்துப்பூச்சி விட

 நுண்ணக்கமான கைவேலைபாடு..

இதில் என்ன ஆச்சரியம் என்றால்

 அனைத்தும் ஒருவரிடமே என பல

 அணுகுண்டு வெடிக்க அவர்கள்

 கண்மணிகள் சர வெடியாக வெடிக்க ..

மேடையில் சென்று அள்ளி அணைக்க

 ஆசை..

வயதிற்கு தடையே இல்லை ஒரு

 மேடையை மட்டும் தாங்கள் போதும்

 என்றது நேற்றை நிகழ்ச்சி..





ஒரு நாள் பயணம் by Veena Shankar



 ஒரு நாள் பயணம் 


அப்பாவை காரில் இருந்து இறக்கி ரயிலில் அவருடைய பெட்டிகளை எல்லாம் வைத்து தன் அப்பாவை மெதுவாக ஏசி இல்லாத பெட்டியில் அமர வைத்தான் அபிலாஷ். " அப்பா! நமக்கு இருக்கிற வசதிக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்யலாம். ஆனால் நீங்க தான் சாதா பெட்டியில் டிக்கெட் வேணும்ன்னு அடம் பிடிச்சி ரிசர்வ் செய்ய சொல்லிட்டீங்க. நீங்கா இந்த சாதா பெட்டியில் பயணம் செய்யறது எனக்கு பிடிக்கலை" என்று சொன்னான். அதற்கு புன்சிரிப்பு காட்டி "இல்லப்பா ! எனக்கு என்னமோ சாதாரண பெட்டியில் பயணம் செய்யறதுக்கு ஆசையா இருந்தது" என்றார் பதிலுக்கு அப்பா நாகேஷ். " "பத்திரமா போங்கப்பா" என்று அபிலாஷ் தன் அப்பாவை பார்த்து சொன்னான். "சரிப்பா நீ போயிட்டு வா நான் பாத்துக்குறேன்" என்று பதில் அளித்தார் ஒய்வு பெற்ற அரசு மேலதிகாரியான நாகேஷ் . 


"அப்பா ! நமக்கு இருக்கிற வசதிக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்யலாம் " என்று மறுபடியும் பேச்சை இழுக்க, "சரிப்பா! என்னை ஏத்தி விட்டுட்ட இல்ல நீ போ! இங்கே நிறைய பேர் இருக்காங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் அபிலாஷின் அப்பா . "இல்லப்பா! ரயில் கிளம்பற வரைக்கும் நான் இங்கே இருக்கிறேன்" என்று அபிலாஷ் சொன்னாலும் அவனை வலுக்கட்டாயமாக வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார் அப்பா. " சரிப்பா! கிளம்புறேன்" என்று அப்பாவுக்கு டாட்டா சொல்லி கிளம்பினான். 


அபிலாஷ் கிளம்பி விட்டான் என்று மனதில் மகிழ்ச்சியுடன் ரயில் புறப்படும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.

சற்று நேரத்தில் ரயில் வண்டி கிளம்ப, சின்னக் குழந்தை போல சன்னலோர இருக்கையில் இருந்தவாறு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். குடும்பத்தை ஒதுக்கி தான் மட்டுமே செய்யும் பயணம் என்பதால் அதில் ஒரு சுகம் இருப்பதாக உணர்ந்தார்.

நேரம் ஆக ஆக விற்பனையாளர்கள் ஒவ்வொருவராக வர, சமோசாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது; மணப்பாறை முறுக்கை பற்கள் நாடியது; தண்ணீராய் இருக்கும் தேநீரும் தீர்த்தமாய் மாறியது; வாழைக்காய் பஜ்ஜிக்கு மனம் இழுத்தது; எண்ணெய் பதார்த்தங்களுக்கு கைகள் நீள ஆரம்பித்தது, இப்படியாக பலவும் வருவதற்குள் மதியம் வர சுட சுட இருக்கும் என்ற பிரியாணியும் சில்லென்று மாறிப் போனாலும் , இரவில் பரோட்டா குருமாவும் ஈர்க்க தண்ணீரில் மட்டுமே வெறுமை இருந்தது.



இரவுப் பொழுது விடை பெற காலை விடிந்தது. இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் மக்கள் கூட்டம் கலைய நாகேஷும் இறங்கினார். ஒரு நாள் பொழுது போனது தெரியாமல் சென்ற ரயிலின் அழகை ரசிக்க தன்னை மறந்து நின்றார். அப்பா! என்ற குரல் கேட்க திரும்பியவர், தன் மகளின் வரவைக் கண்டு முகம் மலர அவளோடு மறுபடியும் காரில் பயணம். ஆனால் பேச்சு மட்டும் அளவோடு இருந்தது அவர்களிடம். வந்திறங்கியதும் சொற்ப நேரம் நேற்றைய நினைவுகள் அசை போட, குளித்து முடித்து டிபன் அருந்த சிறிது ஓய்வுக்கு பின் தனக்கு ஏதோ வயிறு உபாதை செய்வதாக மகளிடம் சொல்ல, மருத்துவமனை பிரவேசம். ஒன்று முதல் பத்து வகையான பரிசோதனைகள். இறுதியில் நேற்று அவர் சாப்பிட்ட உணவு சேராமல் போனது தான் காரணம் என்று தெரிந்ததும் தன்னை தானே நொந்து கொண்டார். ஆனாலும் தான் அனுபவித்த அந்த ஒரு நாள் பயணம் நினைவில் விட்டு நீங்காது என்பது உண்மையே என்றும் பெற்ற பிள்ளைகள் தன்னை தனியே விட மறுத்தாலும் அவர்களிடம் சண்டை போட்டே தான் வந்ததும் தான் டிக்கெட் பரிசோதகராக இருந்த காலத்தை மறுபடியும் அனுபவிக்க நினைத்ததால் இந்த சிறு உபாதை பெரியதல்ல என்று உணர்ந்து சிரித்தார் .


பணியும் அதனோடு தொடர்புடைய நினைவும் காலத்தால் மறக்கக் கூடியதல்ல.

Friday, March 17, 2023

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


உடலெங்கும் சாம்பல் பூசி உறங்கும் மலை

என்னை யாரும் நெருங்கவும் வேண்டாம்

 தொடவும் வேண்டாம்..

நேரம் வரும் போது நானே வெடிப்பேன்.

எனை யாரு எழுப்பியது

  தகதகவென ஓடுவேன் என்னை யாரும்

 அள்ளிப்பூச முடியாது..

ஊரெங்கும் என் சாம்பல் பறக்க நான் வந்து

உங்களை வாசம் செய்வேன்.






படமும் கருத்தும் by Rishi

 


துக்கங்களை மனதுக்குள் புதைத்து வைக்காமல் ,

 இறைவனின் பாதத்தில் அழுது விடுங்கள்,

எரிமலை குழம்பாக 

வெடித்து சிதறுவதற்கு முன்னரே...

படமும் கருத்தும் by Veena Shankar

 


மாண்ட உயிர்களின் மீண்ட குருதியா?

மனிதர்களின் அதீத செயலுக்கு கிடைத்த பதிலா?

அடிமைக்கு கிடைத்த ஆக்ரோஷ வெற்றியா?

விவாதம் தொடர வெளிப்படும் தலைப்பா?

உஷ்ணத்தால் வெந்து, சிவந்து சிந்தும் ஆறா?

காலத்தின் விடையும் இதுவே பொறுமையுள்ள மனிதர்களின் உள்ளத்திற்கும் குரலுக்கும்


மலையிலிருந்து வெளிப்படும் தீக்குழம்பல்ல இது மனக்குமுறலிலிருந்து வெளிவரும் குருதிப்புனல்


குழந்தை பிறப்பிற்கு பின் தன் மடி கொடுக்கும் தாயும் பின்னாளில் அவள் மனக்குமுறலும் மரணத்தின் போது

Thursday, March 16, 2023

ஏன் இந்த நிலை? by Vidhya Nivash

 


கடந்த வாரம் ,ஏன் இந்த வாரம் கூட தொடர்கிறது மகளிர் தின கொண்டாட்டங்கள் ஆனால் இன்று படித்த செய்தி வருத்தத்தையும் சிந்திக்கவும் தூண்டுகிறது.

ஒரு மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேல் மாணவர்கள் 12 வது வகுப்பு தேர்வுக்கு செல்லவில்லை.ஏன்? இரு காரணங்கள் பேசப்படுகிறது ஒன்று குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியவில்லை.இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை இளமையில் திருமணம் பெண் பிள்ளைகளுக்கு மீண்டும் அதிகரிக்கின்றனவாம் .

என்ன நடக்கிறது..எங்கிருக்கிறோம் நாம்..இன்னும் சுதந்திரம் வேண்டும், வாழ்க்கை துணையே தேவையில்லை என்று ஒரு புறமும்.

இன்னும் எத்தனை பாரதியும்,பெரியாரும் தேவை.தெருவிற்கு ஒரு தன்னார்வ குழுக்கள் பிள்ளைகளின் படிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் பெருக, ஆசிரியரும் பெரும் பங்காற்ற..ஏன் இந்த நிலை ??


உண்மை(மெய்) by Veena Shankar



 உண்மை ( மெய் )  


மெருகூட்டிய மெழுகு பொம்மை தான் உன் மெய்


சிலையாகி நின்று செல்லரிக்க செய்யுதோ உன் சிரிப்பு


பலகைகளை பற்றியிணைப்பதோ உன் கரங்கள்


முற்றத்தில் நின்றே வருவோரை கவரும் உன் விழி ஒரு வழி பாதையே


குழந்தைகளை குதூகளிக்க வைக்கும் உன் பார்வை


நிழலா நிஜமா என்று நினைக்க வைக்கும் உன் வனப்பு


காலை முதல் இரவு வரை கடையில் உன் தரிசனம்


உயிரில்லாமல் போனாலும் உனக்கான இடம் உயர்ந்ததே


மாறிவிடவா நானும் உன்னைப்போல் உயிரில்லை என்பதால் கண்ணீரும் இல்லை உன்னிடம் பொம்மையே

Wednesday, March 15, 2023

நிறையா? குறையா? by Vidhya Nivash



சில நேரங்கள் பெண்ணை  காளியாக

 மாற்றினாலும்

 பல நேரங்களில் காலியாக இருப்பதே

 உத்தமம்,

சில நேரங்களில் நிறையாக திடமாக

 இருப்பதே தன்னம்பிக்கைக்கு உத்தமம் 

பல நேரங்களில் குறையாக இருந்தால்

 மட்டுமே செவிமடுக்க முடியும்,

தேர்வு நேரங்களை தவிர மற்ற

 வேளைகளில் வெற்று காகிதமாக

 இருந்தாலே நிரம்ப முடியும்,

வண்ண வண்ண நிறங்களை விட 

வெண்மையே எந்த நொடியிலும் வேறு

 நிறமாக உருமாற முடியும் ,

அன்பும் அறிவும் குறைய குறையவே

 நிறையும்,

வயிறு நிறைய சாப்பிடுவதைவிட

குறையே ஆரோக்கியம்..







இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...