ஒரு நாள் பயணம்
அப்பாவை காரில் இருந்து இறக்கி ரயிலில் அவருடைய பெட்டிகளை எல்லாம் வைத்து தன் அப்பாவை மெதுவாக ஏசி இல்லாத பெட்டியில் அமர வைத்தான் அபிலாஷ். " அப்பா! நமக்கு இருக்கிற வசதிக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்யலாம். ஆனால் நீங்க தான் சாதா பெட்டியில் டிக்கெட் வேணும்ன்னு அடம் பிடிச்சி ரிசர்வ் செய்ய சொல்லிட்டீங்க. நீங்கா இந்த சாதா பெட்டியில் பயணம் செய்யறது எனக்கு பிடிக்கலை" என்று சொன்னான். அதற்கு புன்சிரிப்பு காட்டி "இல்லப்பா ! எனக்கு என்னமோ சாதாரண பெட்டியில் பயணம் செய்யறதுக்கு ஆசையா இருந்தது" என்றார் பதிலுக்கு அப்பா நாகேஷ். " "பத்திரமா போங்கப்பா" என்று அபிலாஷ் தன் அப்பாவை பார்த்து சொன்னான். "சரிப்பா நீ போயிட்டு வா நான் பாத்துக்குறேன்" என்று பதில் அளித்தார் ஒய்வு பெற்ற அரசு மேலதிகாரியான நாகேஷ் .
"அப்பா ! நமக்கு இருக்கிற வசதிக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்யலாம் " என்று மறுபடியும் பேச்சை இழுக்க, "சரிப்பா! என்னை ஏத்தி விட்டுட்ட இல்ல நீ போ! இங்கே நிறைய பேர் இருக்காங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் அபிலாஷின் அப்பா . "இல்லப்பா! ரயில் கிளம்பற வரைக்கும் நான் இங்கே இருக்கிறேன்" என்று அபிலாஷ் சொன்னாலும் அவனை வலுக்கட்டாயமாக வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார் அப்பா. " சரிப்பா! கிளம்புறேன்" என்று அப்பாவுக்கு டாட்டா சொல்லி கிளம்பினான்.
அபிலாஷ் கிளம்பி விட்டான் என்று மனதில் மகிழ்ச்சியுடன் ரயில் புறப்படும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
சற்று நேரத்தில் ரயில் வண்டி கிளம்ப, சின்னக் குழந்தை போல சன்னலோர இருக்கையில் இருந்தவாறு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். குடும்பத்தை ஒதுக்கி தான் மட்டுமே செய்யும் பயணம் என்பதால் அதில் ஒரு சுகம் இருப்பதாக உணர்ந்தார்.
நேரம் ஆக ஆக விற்பனையாளர்கள் ஒவ்வொருவராக வர, சமோசாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது; மணப்பாறை முறுக்கை பற்கள் நாடியது; தண்ணீராய் இருக்கும் தேநீரும் தீர்த்தமாய் மாறியது; வாழைக்காய் பஜ்ஜிக்கு மனம் இழுத்தது; எண்ணெய் பதார்த்தங்களுக்கு கைகள் நீள ஆரம்பித்தது, இப்படியாக பலவும் வருவதற்குள் மதியம் வர சுட சுட இருக்கும் என்ற பிரியாணியும் சில்லென்று மாறிப் போனாலும் , இரவில் பரோட்டா குருமாவும் ஈர்க்க தண்ணீரில் மட்டுமே வெறுமை இருந்தது.
இரவுப் பொழுது விடை பெற காலை விடிந்தது. இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் மக்கள் கூட்டம் கலைய நாகேஷும் இறங்கினார். ஒரு நாள் பொழுது போனது தெரியாமல் சென்ற ரயிலின் அழகை ரசிக்க தன்னை மறந்து நின்றார். அப்பா! என்ற குரல் கேட்க திரும்பியவர், தன் மகளின் வரவைக் கண்டு முகம் மலர அவளோடு மறுபடியும் காரில் பயணம். ஆனால் பேச்சு மட்டும் அளவோடு இருந்தது அவர்களிடம். வந்திறங்கியதும் சொற்ப நேரம் நேற்றைய நினைவுகள் அசை போட, குளித்து முடித்து டிபன் அருந்த சிறிது ஓய்வுக்கு பின் தனக்கு ஏதோ வயிறு உபாதை செய்வதாக மகளிடம் சொல்ல, மருத்துவமனை பிரவேசம். ஒன்று முதல் பத்து வகையான பரிசோதனைகள். இறுதியில் நேற்று அவர் சாப்பிட்ட உணவு சேராமல் போனது தான் காரணம் என்று தெரிந்ததும் தன்னை தானே நொந்து கொண்டார். ஆனாலும் தான் அனுபவித்த அந்த ஒரு நாள் பயணம் நினைவில் விட்டு நீங்காது என்பது உண்மையே என்றும் பெற்ற பிள்ளைகள் தன்னை தனியே விட மறுத்தாலும் அவர்களிடம் சண்டை போட்டே தான் வந்ததும் தான் டிக்கெட் பரிசோதகராக இருந்த காலத்தை மறுபடியும் அனுபவிக்க நினைத்ததால் இந்த சிறு உபாதை பெரியதல்ல என்று உணர்ந்து சிரித்தார் .
பணியும் அதனோடு தொடர்புடைய நினைவும் காலத்தால் மறக்கக் கூடியதல்ல.

No comments:
Post a Comment