காலனின் பிடியில்
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அசுவதி. ஒரு வாரம் ஆயிற்று. இன்னும் அவள் சாதாரண வார்டுக்கு மாற்றப்படவில்லை. மூக்கில் ஒரு குழாயும் கைகளில் குளுக்கோஸ் பாட்டிலும் ஏறிக் கொண்டிருந்தது. கால்களை அசைக்க முடியாதபடி கட்டி இருந்தது. உடலும் வெள்ளை போர்வையில் மட்டுமே அடக்கமாய் இருந்தது. கழிவு வெளியேறுவதற்கு தனி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. கண் விழித்து பார்ப்பது அரிது என்ற நிலையில் தான் அசுவதி இருந்தாள். ஆனாலும் அவள் கணவன் சதீஷ் நம்பிக்கை இழக்கவில்லை. தனக்கும் தன் பெண்பிள்ளைக்கும் ஆறுதலாக அசுவதி மீண்டு வருவாள் என்று காத்திருந்தான். அவளை காண வருகிறேன் என்ற கூட்டத்திற்கு வேண்டாம் என மறுப்பு சொல்லி விட்டான். அசுவதியின் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் மட்டுமே பார்க்க சதீஷ் அனுமதித்தான்.
குத்து விளக்கு போல இருந்த அசுவதி இப்படி கிடக்கிறாளே என அவள் அம்மா புலம்ப, எண்ணெய் ஊற்றினால் விளக்கு எரியும் தானே அத்தை? அதற்காகத் தான் சிகிச்சை போயிட்டு இருக்கு என்று சொல்லி சதீஷ் தன் மாமியாரை சமாதானப்படுத்தினான். மீண்டும் ஒரு வாரம் ஓடிய நிலையில் மருத்துவமனையிலிருந்து தன்னுடைய அலுவலகத்தையும் இயக்கி வந்தான் சதீஷ். தற்செயலாக வெளியே சதீஷ் வர அசுவதி கண் விழித்ததாக நர்ஸ் வந்து சொல்ல, மறுபடியும் உள்ளே ஓடினான். அசுவதியினருகே அவன் அமர அசுவதி லேசாக கண்விழித்து தன் கணவனை பார்க்க அவளுடைய தலையைக் கூட கோதி விட முடியாத நிலையில் கட்டு போடப்பட்டிருந்தது. மீண்டும் அசுவதியின் கண்கள் யாரையோ தேட, அவள் மகளை தேடுகிறாள் என உணர்ந்த சதீஷ் அவளை தற்போது தான் பள்ளிக்கு அனுப்பி விட்டதாக அவள் காதோரம் சொன்னான்.
மேலும் அங்கும் இங்குமாய் விழித்துப் பார்த்தவளுக்கு விழியோரம் கண்ணீர் படர்ந்தது. தன் நிலையை எண்ணிப் பார்த்த அசுவதி, சதீஷ் சொல்லியும் கேட்காததால் தான் தனக்கு இந்த விபத்து நடந்தது என்று மனதில் நினைக்க, அதை அறிந்த சதீஷ் அவளை தேற்ற முற்பட்டான். அசுவதியை சடலமாக தான் மீட்க முடியும் என்று மீட்பு குழுவினர் சொன்னாலும் சதீஷின் அபார நம்பிக்கையாலே தான் அசுவதி இன்று உயிருடன் இருக்கிறாள் என்பது உண்மையானாலும் அது எத்தனை நாட்களுக்கு என்பது யாருக்கும் தெரியாது.
வார விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசத்திற்கு போகலாம் என்று அசுவதி சொல்ல முதலில் மறுத்த சதீஷ் பின் சரி என்று ஒப்புக்கொண்டான். காரில் பயணம் அமைதியாகப் போய்க் கொண்டிருக்க, தானும் காரை ஓட்ட ஆசைப்படுவதாக அசுவதி முரண்டு பிடிக்க அவள் வேகமாக காரை ஓட்டக் கூடியவள் என்பதால் சதீஷ் அதற்கு மறுத்தே வந்தான். பயணம் தொடர ஆங்காங்கே தின்பண்டங்கள் வாங்கி மலையை ரசித்தவரே சதீஷ், அசுவதி தன் தன் குழந்தை சகிதமாய் செல்ல, ஒரு கட்டத்தில் அசுவதி மட்டும் காரை விட்டு இறங்காமல் தான் காருக்குள்ளிருந்தே இயற்கையை ரசிப்பதாக சொல்லி தன் கணவனும் குழந்தையும் இறங்கியவுடன் சட்டென்று ஓட்டுநர் இருக்கைக்கு மாறி காரை இயக்கத் தொடங்கி மின்னல் வேகத்தில் பறந்தாள். இதை எதிர்பார்க்காத சதீஷ் பதைக்க செய்வதறியாது வரும் வழியில் இன்னொருவர் காரில் ஏறி குழந்தையையும் கூட்டிக்கொண்டு அசுவதி சென்ற திசைக்கு போவதற்குள், போகும் வழியிலேயே முன் சென்ற வண்டிகள் வரிசையாக நிற்க, அதற்கு மேலும் தன் பயணத்தை தொடர முடியாமல் விபத்து நேர்ந்ததை உணர்ந்து அசுவதித்தானோ என்ற மனநிலையோடு தன் மகளோடு அந்த இடத்திற்கு ஓடினான். அவன் நினைத்தபடியே ஒரு மரத்தில் மோதி அவனது கார் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் மலைக்கிடையே தூக்கி வீசப்பட்டது அசுவதி தான் என்று அவளுடைய உடையை வைத்து கண்டுபிடித்தான் சதீஷ்.
பரபரப்பான அந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டிருக்கையில் அசுவதியின் விரல்கள் மெல்ல சதீஷின் கைகளை தீண்ட, நினைவில் மீண்டவனிடம் ஏதோ சொல்ல நினைத்தவளாய் அசுவதி இருக்க அந்த வலியிலும் தன்னை கருணை கொலை செய்து விட கண்களாலும் செய்கையாலும் கேட்டுக் கொண்டாள். அசுவதி நீ உயிர் பிழைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சதீஷ் சொல்வதற்கு முன் அசுவதி மீண்டும் கண்ணயர்ந்தாள். அப்போது அங்கே வந்த மருத்துவர் அசுவதியை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது தன்னை கருணை கொலை செய்து விடும் படி அசுவதி சொன்னதாக சதீஷ் மருத்துவரிடம் சொல்ல, சதீஷிடம் அவன் மனைவியின் முடிவு சரி தான். ஆனால் அதை நாம் இஷ்டப்படி செய்து விட முடியாது என்று சட்டத்தை சொல்லியும் அவள் கோரிக்கையையும் முன் மொழிந்தார். சதீஷை பிறகு வந்து அவரை சந்திக்கும் படி சொல்லி அடுத்த அறைக்கு சென்றார். மருத்துவரின் பதில் சதீஷிற்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது.
அவளுக்கு காரை இயக்க விருப்பம் இருந்ததும், தான் வேண்டாம் என்று எதிர்மறையாக சொல்லியதால் தானோ என்னமோ தன்னையும் மீறி அவள் காரை இயக்கி, விபத்தில் மாட்டிக் கொண்டாளோ? அசுவதியின் இந்த நிலைமைக்கு தானே காரணமோ? என நினைத்து மருத்துவரின் ஆலோசனையை எதிர்கொள்ள காத்திருந்தான்.
மறுநாள் பள்ளிக்கு செல்லும் முன் தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று துடித்த அசுவதியின் மகளை சதீஷ் கூட்டிக் கொண்டு வந்தான். அவள் அருகே குழந்தை அமர, தன் குழந்தையின் வாசமறிந்த அசுவதி, கண்களை திறக்காமலேயே குழந்தையை பற்றிக்கொள்ள அந்நேரத்திலேயே காலனின் வாகனம் அசுவதின் உடலை தன் வசம் ஏற்றிக் கொண்டது.
கருணையும் பிறக்கும் அடுத்தவரின் இயலாமை கண்டு. அது கடவுள் ஆனாலும் சரி. காலனானாலும் சரி. அந்த கருணையையும் நிராகரித்து இயல்பாய் ஏற்றுக் கொள்வதே சிறப்பு.
எதில் வேகம் காட்டினாலும் வேகத்தின் விளைவு என்பது காலனின் பிடியில் தான்.

எதிர்மறை சிந்தனையை நினைப்பது நிறுத்த வேண்டும் இந்த பிரபஞ்சம் நல்லது கேட்டது அறியாது எல்லா எண்ணத்தையும் நிறைவேற்றிவிடும் ---- கதை நன்று
ReplyDeleteஆம். நன்றி தோழரே
Delete