கரும்பலகை யோசனை
"அம்மா! இன்னிக்கி காலைல என்ன டிபன்? " என்று பையன் சுரேஷ் கேட்க, "பூரி - சன்னா" என்று பதிலளித்தாள் விலாசினி. "சரி. மதியத்துக்கு என்ன?" என்று மறுபடியும் அவன் கேட்க, " ரசமும் கீரை கூட்டும்" என்று பதிலளித்தாள். சரி சரியென்று தலையசைத்தவாறே அவன் சமையல்கட்டிலிருந்து வெளியே போனான்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அவளுடைய பதினைந்து வயது பெண்,
" அம்மா இன்னைக்கு காலையில என்ன டிபன்? என்று கேட்டாள். " இப்போது தானே அண்ணன் கிட்ட சொன்னேன். உனக்கு கேக்கலையா?" என்று சொற்பமாக அவள் தன் பெண் அதிதி மீது எரிச்சல் காட்ட, "அம்மா நான் மாடியிலிருந்து இப்பதான் கீழே வரேன். நீங்க அண்ணன் கிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது" என்று சொல்ல, " காலையில பூரி - சன்னா " என்று மறுபடியும் பதில் தந்தாள் அம்மா. "அப்போ மத்தியானத்திற்கு என்ன வைக்கப்போற?" என்று அதிதி கேட்க, மறுபடியும் மதியத்திற்கான மெனுவை சொன்னாள் விலாசினி.
மீண்டும் சமையலில் மூழ்கியவள் பரபரப்பாக இருந்தாள். காலை வேளையில் அம்மாக்களின் அவசரம் அவர்களுக்கு மட்டுமே புரியும்.
சிறிது நேரம் தான் சென்றிருக்கும். பேப்பர் படித்து முடித்து தான் பருகிய காப்பி கோப்பையை அங்கேயே வைத்துவிட்டு சமையல்கட்டு பக்கம் வந்த ரவி, " என்னம்மா! பேச்சு சத்தமா இருந்தது. ஆனால் இப்ப யாரையும் காணோமே? என்று கேட்டவனை பார்த்து "காப்பி கோப்பை எங்கே" எனக் கேட்டாள் விலாசினி. " ஐயோ! மறந்துட்டேன். " என்றவாறே திரும்ப சென்றவனை, "எத்தனை தடவை சொல்லியிருக்கேன் காப்பி குடிச்சா கையோட டம்பளர கொண்டு வாங்கன்னு" என்று ரவியை சடைத்தாள். "சரி இனிமே கொண்டு வரேன். இன்னிக்கி என்ன டிபன்?" என்று கேட்க, அவனை மேலே கீழே பார்த்து பூரி - சன்னா. எண்ணெய் காஞ்சின்டிருக்கே? பார்த்தா தெரியலையா?" என எதிர் கேள்வி கேட்டவாறே சன்னாவை டைனிங் டேபிளில் வைத்தாள். "ஓ! பூரியா?" என்றவன் " ஆமா மதியத்திற்கு என்ன?" என்று கேட்க, வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னாள் ரவிக்கு. சரி அப்போ நான் குளிக்க போகிறேன். "என்று சொல்லி இடத்தை காலி செய்தான்.
இவங்களுக்கெல்லாம் என் அவசரம் புரியாது. ஒரு உதவின்னு கேட்டா சமையல் கட்டு பக்கம் கூட யாரும் வரக்கூடமாட்டாங்க. ஆனா என்ன டிபன், லஞ்ச் எல்லாம் இவங்களுக்கு தெரியனுமா? என நொந்து கொண்டே பூரியை இட்டாள்.
ஒருவழியாக எல்லோருக்கும் பேக் செய்து அனுப்பி ஒரு கோப்பை காபியுடன் தன் டிபனை முடித்தாள்.
சரியாக பத்து மணிக்கு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கடைதெருவிற்கு போய் வீட்டிற்கு திரும்பி வர மணி ஒன்றை தொட்டதும் மதிய உணவை டிவி யை பார்த்தவாறே முடிக்க, ஒரு குட்டி தூக்கம் போட்டாள்.
அன்றைய பொழுது முடிந்து மறுநாள் காலையில் மறுபடியும் இதே கூத்து நடக்கும் என்று நினைத்து அடுத்த நாளை ஆவலோடு எதிர் நோக்கினாள் விலாசினி.
அன்றும் காட்சிகள் ஆரம்பமாயின. ஆனால் பேச்சு சத்தம் கேட்கவில்லை. காரணம் மெனு கேட்டு வரும் வீட்டு அங்கத்தினர்களுக்கு தான் எழுதி வைத்திருந்த அன்றைய தினத்திற்காக மெனுவை கரும்பலகையைப் பார்த்து தெரிந்து கொள்ளும்படி கரும்பலகை இருக்கும் இடத்தை மட்டும் காட்ட, அதை படித்து தெரிந்து கொண்டவர்கள் ஏதும் பேசாமல் சென்றனர்.
தினமும் இது தொடரும் எனவும் எழுதி வைத்துவிட்டாள் விலாசினி. எப்படி விலாசினியின் யோசனை . நாமும் கடைப்பிடிப்போமா?

No comments:
Post a Comment