Tuesday, March 14, 2023

அறிவி{யலி)ன் கண்காட்சி by Veena Shankar



 அறிவி{யலி)ன் கண்காட்சி


                                                        ஆபீஸ் விட்டு வந்ததும் வராததுமாய் “அப்பா! அப்பா! நாளைக்கு எனக்கு சயின்ஸ் எக்ஸிபிஷன் நடக்க இருக்குது. அதுக்கு எங்க மிஸ் ஏதாவது செஞ்சுட்டு வர சொன்னாங்க” என அவசர குரலோடு தன் அப்பாவை பார்த்து மன்றாடி கொண்டிருந்தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ். “ஆமா! நாளைக்கு தேவைன்னு இப்ப வந்து சொல்ற?” என கேட்டான் சசி. “இல்லப்பா. நானும் என் ஃப்ரெண்ட் விஜயும் சேர்ந்து செய்யறதா தான் இருந்தது. ஆனால் இன்னிக்கி அவன் கிட்ட நான் சண்டை போட்டுட்டேன். அதனால நாங்க ரெண்டு பேரும் பேசல. மறுபடியும் அவன்கிட்ட போய் என்னால் நிற்க முடியாது. எனக்கு தெரியாது. நீங்க தான் ஏதாவது ரெடி பண்ணி தரணும் என்று சொல்லி பொறுப்பை அப்பாவிடம் கொடுத்து விட்டு சென்றான். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டே தன் மனைவியிடம் காபியை போட சொல்லி டிரஸ் மாற்ற அறைக்கு சென்றான்.


                                      என்ன செய்து தரலாம் என்று யோசித்துக் கொண்டே, தன் அலைபேசியை பார்த்துக் கொண்டே, ஒரு கோப்பை காபியை காலி செய்ததும் அவனுக்கு ஏதோ ஒன்று நினைவுக்கு வர தன் அறையில் பரண் மேல் தான் வைத்திருந்த அட்டைப் பெட்டியை உருட்டினான். அவன் மனைவி கீதாவோ “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டும் பதில் சொல்லாமல் தன் தேடுதல் வேட்டையை தொடர, “என்னவென்று சொன்னால் நானும் தேடுவேன்ல” என கடிந்து சொல்ல “சயின்ஸ் எக்ஸிபிஷனுக்கு முக்கியமான ஒன்று பார்த்துகிட்டு இருக்கேன்?” என்று சசி பதில் சொல்ல, அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நிராகரித்து சென்றாள் கீதா.


                                நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு விடையாக அவன் நினைத்த அட்டைப் பெட்டி ஒன்று கிடைக்க, அதை தூசி தட்டி சுத்தம் செய்தான். “அதற்குள் இப்படி அறையில் ஒரே தூசியாக்கி விட்டீர்களே?” என்று கீதா கத்திக் கொண்டே சுத்தம் செய்ய தொடங்கினாள். பின் அட்டைப் பெட்டியில் இருந்ததை ஒவ்வொன்றாக பிரித்து வைத்தான். அதற்குள்ளே கிட்டதட்ட இருபது உருப்படிகள் இருந்திருக்கும். “என்னங்க இது?” என்று கீதா கேட்க, “இதுவா? இதுதான் நான் முதல் முதலில் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்தவுடன் வாங்கிய வாக்கி டாக்கி; இது பேஜர்; இது என்னுடைய முதல் மொபைல் போன்” என்று ஒவ்வொன்றாக காண்பித்தான் சசி. “என்னது இது மொபைல் போனா? நான் பார்த்ததே இல்லையே! இவ்வளவு கனமா இருக்குதே? இது என்ன ஆன்டனாவா?” என்று சொல்லியபடியே விக்னேஷ் அதை திருப்பி திருப்பி பார்த்தான். பட்டன் போன் முதல் சென்ற வருடம் கைவிட்ட செல்போன் வரை அந்த அட்டைப் பெட்டியில் அடக்கமாகியிருந்தன. பழைய சூட்கேஸ் ஒன்றை சுத்தம் செய்து அதில் ஒவ்வொன்றாக வரிசையாக அடுக்கி வைத்து டேப் போட்டு ஒட்டி அதன் கீழ் அந்த சாதனத்தின் பெயரும் மாடலின் பெயரும் ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி வைத்தான்.சசி. அதற்குள் விக்னேஷ், அவைகளுடைய அத்தனை விவரங்களையும் தன் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டான். 


                                         மறுநாள் பத்திரமாக அதை எடுத்துக்கொண்டு கண்காட்சிபடுத்தியும் பள்ளியில் நல்ல பெயரும் வாங்கி விட்டான் விக்னேஷ். அப்பா சொன்னது போல அதை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்தான். வரும் போதே தனக்கு முதல் பரிசு கிடைத்து விட்டதாக சொல்லி தன் அப்பாவை கட்டியணைத்து “தேங்க்யூ பா” என்று விக்னேஷ் முத்தம் தந்தான். சில நேரங்களில் செல்போன் தராத சந்தோஷத்தை மழலையின் முத்தத்தில் உணர்ந்தான் சசி. அந்த சந்தோஷத்தை பகிர வந்த கீதாவோ “ஆமாங்க! நீங்க இத்தனை நாட்கள் இந்த செல்போனைகளை பாதுகாப்பாக வைத்திருந்தது பெருசு இல்ல. இதெல்லாம் வாங்க எவ்வளவு செலவு செஞ்சு இருப்பீங்கன்னு கணக்கு போட்டு பாருங்க!” என்று சொன்னதும் காற்றை இழந்த பலூன் போல முகம் சுருங்கியது அப்பாவிற்கும் பிள்ளைக்கும்.


                                     சந்தோஷம் என்பது காற்று போல அடிக்கடி வரும். அதுவும் சில நேரம் தூசியையும் கிளப்பி விடும். ஆனால் தென்றலும் புயலும் பருவ நிலைக்கு ஏற்றார் போல் வரும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...