Monday, March 27, 2023

நம்பிக்கையானவள் by Veena Shankar



 நம்பிக்கையானவள் 


அந்த ஊரிலேயே ராமசாமியின் குடும்பம் தான் பெரியது. தன் மகன் மகள்களோடு கூட்டுக் குடும்பமாய் இருந்தாலும் ராமசாமியின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர். பெரிய குடும்பம் என்பதால் ஊரிலும் அந்த குடும்பத்திற்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. எந்த திருவிழாவானாலும் ராமசாமி தான் வழி நடத்துவார். அவருக்கு விவசாயமே பிரதானம் என்பதால் வீட்டில் அனைவரின் உழைப்பும் வயலில் பதியப்பட்டிருக்கும்.


 மாரியம்மனுக்கு உகந்த பங்குனி மாதத்தில் திருவிழா நடத்துவது அந்த ஊரின் வழக்கம். அந்த மாதத்தில் கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறும். கொடித்தடை இருக்கும் நாட்களில் சுப காரியங்களை ஊர்மக்கள் தவிர்த்து விடுவர். அவரவர் வேண்டுதலின் படி அழகு குத்துதல், உருவ பொம்மை எடுத்தல், பூக்குழி இறங்குதல், பூக்கூடை, தீச்சட்டி எடுப்பது வழக்கமாக இருப்பதால் அந்த மாதமே ஊரே கோலாகளப்பட்டிருக்கும்.


 இப்படி இருக்கையில் ராமசாமியின் பேரப்பிள்ளைகள் வெளியூரில் படித்து அங்கேயே வேலை பார்த்தும் தொழில் செய்தும் வந்தனர். ஊரின் சம்பிரதாயத்தில் நம்பிக்கை குறைவானதாகவும் தெய்வ நம்பிக்கையும் இல்லாமல் இருந்தனர்.


மூத்த மகனுடைய மகன் வெளியூரிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சமயம், ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அவனுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் பேசும் போதே நிலைமை ஏதோ விபரீதமாய் இருப்பதை உணர்ந்து பக்கத்தில் படுத்து கொண்டிருந்த ராமசாமி எழுந்து உட்கார்ந்தார். என்ன ஆனது என்று அவர் கேட்க, தன்னுடைய அலுவலகத்தில் தீ பற்றிக் கொண்டதாக அவர் பேரன் தெரிவித்தான். அவர் தன் பேரனை தேற்றினார் . மேலும் கொடித்தடை இருக்கும் போது யாரும் ஊரை விட்டு வெளியே போகக்கூடாது என்று தெரிந்தும் அதையும் மீறி சென்ற முறை அவன் ஊருக்கு பயணம் செய்ததை சுட்டிக் காட்டினார். தீச்சட்டி எடுப்பதை அவன் கிண்டல் செய்ததை எண்ணி அவர் வேதனை கொண்டதாகவும் தெரிவித்தார்.


தற்போது தான் காரில் சென்றாலும் அவ்வளவு சீக்கிரமாக அந்த ஊரை அடைய முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தான் பேரன்.


 மனம் உடைந்திருந்தவனிடம் அவனுடைய தாத்தா ராமசாமி அந்த ஊர் மாரியம்மனை மனதார வேண்டிக் கொள்ளுமாறு பணித்தார். முதலில் தயங்கியவன், அன்றைய தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் நாடு வெற்றி பெற வேண்டும் என்று வந்திருந்த ரசிகர்கள் கூட்டம் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டதை பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வர, உடனே தானும் பூஜை அறைக்கு சென்று வாய்விட்டு அந்த மாரியம்மனை வேண்டினான்.


அவ்வாறு வேண்டி கொண்டிருந்த சமயம் மறுபடியும் அலைபேசி சிணுங்க, மேற்கொண்டு என்ன ஆனதோ என்ற பயத்தில் பேசத் தொடங்கினான்.


 எதிர்முனையில் அவன் நண்பர்களின் கூட்டம் சிரித்தவாறும் அவனை கிண்டலடித்த வண்ணமாய் இருக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


மேலும் நண்பர்களில் ஒருவன், அன்றைய தினம் ஏப்ரல் ஒன்று என்றும் அது முட்டாள்கள் தினம் என்று சொல்லி அவனை பீதியடைய செய்ததாக சொல்ல, அவனுக்கு கடுப்பாக இருந்தது. இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று நினைத்ததான். தன்னுடைய கஷ்டத்தை மாரியம்மன் அரை மணி நேரத்திற்குள் தீர்தது வைத்ததை எண்ணி மகிழ்ந்தான். 


 இந்த விஷயத்தை தன் தாத்தாவிடம் சொல்ல , அவர் தன் பேரனை மாரியம்மனுக்கு பூக்குழி இறங்குவதாக வேண்டிக் கொள்ளும் படி சொன்னார்.. அவனும் அதன்படியே செய்வதாக வேண்டிக் கொண்டான் . 


இந்த விஷயம் குடும்பத்தாருக்கும் தெரிய அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . பேரனுக்கு தெய்வ நம்பிக்கை ஏற்படுத்திய மாரியம்மனுக்கு நன்றி சொன்னார் தாத்தா ராமசாமி.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...