பேனாவும் மையும்
உடன்பிறவா சகோதரர்கள் என்றும் எழுத்துக்கு உயிர் கொடுப்பர்
எத்தனையோ பொய்கள் அரங்கேறி இருக்கும் அவனை தனதாக்கி கொள்ள
ஏப்ரல் ஒன்றில் அடுத்த மாணவனின் சட்டையை பதம் பார்க்கும் படலம்
சிலநேரங்களில் பொய்யையும் மெய்யாக்க பிறந்தவன்
எத்தனை அழகு சட்டையில் பூட்டினாலும் கண்களை கொள்ளையடிக்கும் கம்பீரம் தனி தான்
இரவல் என்று வாங்கினாலும் மறதியால் உடைமையாக்கி கொள்வதும்
கருத்துக்கும் விமர்சனத்திற்கும் மட்டுமல்ல அழகான கற்பனைக்கும் வழி கொடுப்பதும்
சட்டத்தை படைக்கவும் திருத்தவும் ஊன்றுகோல் ஆவதும்
உங்களைப்போல ஒருவன் நட்பிலும் இல்லை அன்பிலும் இல்லை
"மை" - பேனா
எங்கே? எங்கே? என்று வீடு முழுவதும் தேடினாள் வனிதா. என்ன தேடுகிறாள் என்பது வசந்திற்கு கூட சொல்ல மறுத்தாள். நெடுநேர தேடலுக்குப் பிறகு கிடைத்தது அவள் தேடிய அந்த பொருள். அப்பாடா கிடைத்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடியே அதை தன் அலமாரியில் பத்திரப்படுத்தினாள். தான் தேடியது கிடைத்தது என்று வசந்த்திடம் சொல்ல, எங்கே கிடைத்தது என்று அவன் கேட்க டேபிள் மேட்டுக்கு அடியில் வைத்திருந்தேன் போல மறந்து விட்டேன் என்று பதில் சொன்னதும் நல்ல வேலை நான் தப்பித்தேன். தவறுதலாக அது கீழே விழுந்து அதை நான் கவனிக்காமல் குப்பையில் போட, என்ன நீங்கள் வீட்டைப் பெருக்கி இருக்கிறீர்கள் ? என்று என்னை துளைத்து கிழித்து இருப்பாய் என்று வசந்த் சொல்ல, அவன் தலையில் ஒரு செல்ல குட்டு வைத்து பால்கனிக்கு சென்றாள் வனிதா. காலைப் பொழுது அவள் பார்வைக்காக மலர காத்திருந்தது.
பொதுவாக அமைதியான காலைப் பொழுதில் தான் வனிதா தன் எழுத்துக்கு உயிர் கொடுப்பாள். அனாவாசியமாக இரவு தூக்கத்தை களவாடுவதும் காலையை புறக்கணிப்பதும் அவளுக்கு பிடிக்காத செயல். தன் நோட்டுப் புத்தகம், மை பேனா சகிதமாய் அந்த நாற்காலியில் அமர்ந்து எழுதினாலே வாஸ்து அமைப்பு போல் அவள் எழுத்தும் மிளிரும் என்று அவள் நம்புவாள். அற்புதமான பல படைப்புகளும் அதற்கான பற்பல பாராட்டுக்கள், விருதுகளும் அவளை தேடி வந்தது. பல பொருட்களால் கெளரவப்படுத்தினா லும் அவளுக்கு , அவள் எழுத்துக்கு முதற்படியாய் அமைந்தது அவளுடைய முதல் காதல் கடிதம் தான். நேர்த்தியான வார்த்தை பிரயோகம், அச்சு மாறாத எழுத்துக்கள், கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது, அவள் வசந்த்திற்கு எழுதிய முதல் காதல் கடிதம்.
அன்று அவள் காதல் கடிதம் எழுதிய காலத்தில் மை பேனா அல்லாது வேறு எதுவும் இல்லை. எல்லா விஷயத்திலும் புதுமையும் பெண்ணியம் போற்றும் வனிதா, இந்த விஷயத்தில் மட்டும் தன்னுடைய படைப்புகளை இன்றளவும் மைப்பேனா கொண்டு தான் படைக்கிறாள் என்பது உண்மை.
கல்லூரி நாட்களில் வசந்த் வனிதாவை விரும்புவதாக பலமுறை ஜாடைமாடையாக சொன்னாலும் அதை புரிந்தும் புரியாதவளுமாய் அவள் இருக்க, அவளுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து தன் நண்பர்களையும் கூட்டு சேர்த்து எழுதி அவளிடம் கொடுக்க, அதிலிருந்து பிழைகளை சிவப்பு மைக் கொண்டு திருத்தம் செய்து மறுபடியும் அதை வசந்திடம் கொடுத்தாள். தான் கொடுத்த கடிதம் தான் அதுவென்று தெரியாமல் வாங்கிய வசந்த், தனிமையில் படிக்க எத்தனித்து ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து பிரித்துப் பார்க்க, அதைப் பார்த்ததும் அவனுக்கு முகம் சுருங்கியது. இவளுக்கு என்ன என்னுடைய காதல் புரியவில்லையா? இப்படி திருத்தி கொடுத்திருக்கிறாளே? என்று நினைத்து கோபமடைந்தான். பதிலுக்கு தானும் அவளை கலாய்க்க எண்ணி சிறிய வெள்ளி மை பேனாவை அவளுக்காக வடிவமைக்க சொல்லி அதை வனிதாவிடம் கொடுத்து இதில் உள்ள மை தீர்வதற்குள் உன் விருப்பத்தை எழுது என சொல்லி அவள் கையில் திணித்தான்.
ஒரு வாரம் சென்ற நிலையில் வனிதாவிடம் இருந்து வசந்த்திற்கு பதில் வந்தது. மடித்திருந்த கடிதத்தில் மேல் பகுதியில் நீங்கள் கொடுத்த மை தீரும் வரை என்னால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டதை பார்த்ததும் தன்னுடைய காதல் நிராகரிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணத்திலேயே கடிதத்தை அவன் பிரிக்க அதில் ஒரு மினி கவிதை எழுதி வசந்தின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருந்தாள் வனிதா. அவள் வீட்டிற்கு வந்து பேசுமாறும் எழுதி இருக்க, வானத்தில் பறப்பது போல் உணர்ந்தான் வசந்த்.
அவள் எழுதிய அந்த கவிதையை யாருக்கும் தெரியாமல் ஒரு பத்திரிக்கை அறிவித்த போட்டிக்கு அனுப்பி வைத்தான் வசந்த். அதில் அந்த கவிதை சிறப்பான கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட, வனிதாவை ஆச்சரியப்படுத்தினான்.
வனிதாவின் பெற்றோரை தன் பெற்றோருடன் சந்தித்து பெண் கேட்க, வனிதாவின் பெற்றோர் முதலில் நல்ல வேலையை தேடிக்கொள்ளுமாறு சொன்னர்.
அவர்களுக்குள் பல கருத்து சார்ந்த விவாதங்கள் அரங்கேறிய நிலையில் அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்தது. இதற்கு மத்தியில் கல்லூரியின் கவிக்குயிலாக வனிதா அறியபட்டாள்.
பெற்றோரின் வேண்டுதலுக்கு ஏற்ப உயர் நிலையை தொட்ட வசந்த்தும் வனிதாவும்
இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
அன்று வசந்த் வாங்கி தந்த அந்த பேனா தான் இன்று அவள் கண்ணில் காணாமல் தவித்துப் போக அதை தேடியிருக்கிறாள்.
அன்று வசந்த் தந்த அந்த வெள்ளி பேனா தான் அவள் வாழ்க்கையில் அவளுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட வைத்திருக்கிறது. அதை பொக்கிஷமாக தன் தாலியிலே கோர்த்து வைத்தது எப்படியோ நழுவி விழ, அதை வசந்த் தான் டேபிள் மேட்டிற்கு அடியில் வைத்தான். ஆனால் நழுவவிட்டதை வனிதா சொல்லாமல் மறதியாக வைத்து விட்டதாக வசந்த்திடம் சொன்னாலும் அவள் மனதை நோகடிக்காமல் வசந்தும் மௌனம் காத்தான்.
அன்று அவன் பத்திரிக்கைக்கு அனுப்பிய கவிதையால் தான் இன்று பெரிய எழுத்தாளராக வனிதா உருவெடுத்தாள்.
எந்த ஒரு விஷயத்திற்கும் உந்துதல் தேவை. தூண்டுபவரை நாம் தவறாக நினைத்துவிடாமல் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
என்றும் நினைவு மாற, மறவா மை பேனாவிற்காக எழுதப்பட்டது.

No comments:
Post a Comment