ஒருமுறை என் கணவரோடு பேசிகொண்டு இருக்கும் போது அவர் தான் காசிக்கு செல்ல இருப்பதாக சொன்னார். நானும் ஓகே சென்று வாருங்கள் என்று சொன்னேன். அவருடைய நண்பர்களோடு செல்வதால் என்னை அழைத்து செல்ல இயலாது என்பதை அவர் வருத்த்ம் தோய்ந்த முகத்தோடு சொன்னார். அதனால் என்ன பரவாயில்லை. முதலில் நீங்கள் போய் வாருங்கள். பிறகு நாம் குடும்பத்தோடு செல்வோம் என்றும் சொன்னேன். பேச்சிற்கு இடையே பொதுவாக காசிக்கு செல்பவர்கள் தங்களுக்கு இஷ்டபட்ட ஏதாவது ஒரு பொருளை அதாவது காய்கறி, இனிப்பு வகையை அங்கே துறந்து வருவது வழக்கம். அப்படியென்றால் நீங்களும் ஒரு பொருளை விட்டு வர வேண்டுமே என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு ஆமாம் என்று தலையசைத்தார். அப்படியென்றால் காசியில் நீங்கள் எதை விட போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அது பிறகு பார்ப்போம் என்று சொல்லி சமாளித்தார். ஆனால் நான் விடுவதாக இல்லை. உங்களுக்கு பிடித்தமான என்னை விட்டு வர வேண்டாம் என்று நான் உவகையாக சொல்ல, ச்சே அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டேன் என்று பதில் சொன்னவுடன் நான் சற்றே உணர்ச்சிவசப்பட்டு நான் என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா என்று கேட்க அதற்கு அவர் நீ என்ன சொன்னாய்? என்று எதிர் கேள்வி கேட்டு தானே தொடர்ந்தார். மேலும் கண்டிப்பாக உன்னை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி, நீ தானே சொன்னாய் மிகவும் பிடித்தமான ஒரு பொருளை விட்டு வர வேண்டும் என்று. அப்படியானால் உன்னை நான் எப்படி அங்கே விட்டு வர முடியும் என்று சொல்லியபடியே என்னை பார்த்து சிரித்தார்.
அவர் சொன்ன பதிலோ என்னை மிகவும் திக்கு முக்காட வைத்தது. ஆனால் அந்த பதிலை நானும் வெகுவாக ரசித்தேன்.
நகைச்சுவை என்பது நம் கவலைகளை மறக்க செய்வது மட்டுமல்லாது ஒரு விதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தும். அதற்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இருந்தால் போதாது, அதை அடுத்தவர் ரசிக்கும் படியும், பண்பும் இருக்க வேண்டும்.
யார் சாமி இவன்?
வினோத் புது வீடு கட்டி குடியேற காத்திருந்தான். அதற்கு முன் கிரகப்ரவேசத்தை வைத்து விட முடிவு செய்து அக்கம்பக்கத்து வீட்டாரையும் அவன் நண்பர்களையும் தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைத்திருந்தான். வந்தவர்கள் அவன் வீட்டை பார்த்து வீட்டை பிரமாதமாக கட்டியிருப்பதாகவும் மிக வசதியாக உள்ளது என்று சொல்லி வியப்பில் மூக்கின் மேல் விரல் வைத்தனர். எல்லோரும் வீடு நன்றாக இருக்கிறது என்று சொல்ல, வந்தவர்களில் ஒருவர் மட்டும் வினோத்தை பார்த்து, " என்ன சார்! வீட்டை மட்டும் இவ்ளோ அழகா கட்டி இருக்கீங்க. ஆனா வீட்ல இருக்குற டியூப் லைட், பல்பு எல்லாமே கறுப்பாக இருக்குறதே ? அதனால் வெளிச்சம் வேற கம்மியா இருக்கு. அதை கொஞ்சம் மாற்றி புது விளக்குகள் பொருத்தியிருக்கலாம் இல்லையா? " என்று அவர் வினோத்திடம் கேட்க, " அவனும் "சார் இந்த வீட்டுல இருக்குற விளக்குகள் எல்லாமே புதுசு தான். எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி என்பதாலே விளக்கு வாங்கின தேதி, யார்கிட்ட வாங்கி இருக்கிறோம் என்ற விவரத்தை அந்தந்த விளக்கிலேயே எழுதி வைத்துவிட்டேன் என்று வினோத் சொன்னான் மிக பெருமையாக. அப்படி அவன் சொன்னதும் வந்தவரின் முகம் அவனை ஏளனமாக பார்த்தது. யார் சாமி இவன் ? என்று மனதில் நினைத்து கொண்டார் வந்தவர்.

No comments:
Post a Comment