“மீ டைம்” மற்றும் “ஸ்பேஸ்”
சமீப காலமாக நாம் கேட்கும் இரு சொற்கள் “மீ டைம்” மற்றும் “ஸ்பேஸ்”. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த “ஸ்பேஸ்” என்ற வார்த்தையை கேட்டுள்ளேன். என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொண்ட போது தான் அதன் அர்த்தம் சரியாக தெரிந்தது. திருமணமாகி கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் கால் பதித்த எனக்கு, இந்த “ஸ்பேஸ்” என்ற வார்த்தை தேவைப்படவில்லை. வீட்டில் பெரியவர், சிறியவர் அருகில் உள்ள உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பேசி சிரித்து மகிழ்ந்திருந்த காலமும் கூட அது தான். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்கள் கேட்கப்படாவிட்டாலும் பெரியோர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு வாழ கற்றுக் கொடுத்தது. எடுத்த முடிவும் தவறா? சரியா? என்று ஆராயகூட இடம் இல்லாமல் சென்றது அன்றைய நாட்கள்.
ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்ய, வேலைகளும் ஒருவர் மீது மட்டுமே விழாமல் பகிரப்பட்டதும் உண்மைதான். ஆனால் இந்த கூட்டுக் குடும்பங்கள் சிதறி தனி குடும்பமாக உருவெடுத்த அன்றே தொலைந்தது மகிழ்ச்சி. அதற்காக நான் யாரையும் குறையும் குற்றமும் கூற முற்படவில்லை. அவரவர் வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருப்பதால் கூட்டு குடும்பம் சுருங்கி விட்டது. அன்று கூட்டுக் குடும்பத்தில் ஒரு ஆள் இல்லை என்றாலும் மற்றவரால் அந்த வேலை செவ்வன செய்து முடிக்கப்பட்டு இருக்கும். அதனால் எல்லோரும் எல்லா வேலைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். வேலை முடித்து கிடைக்கும் நேரத்தில் தையல், கூடை பின்னுவது மற்றும் பல கலைகளையும் கற்று தெரிந்திருந்தனர். ஆனால் அதை அவர்கள் வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. இன்று ஊருக்கு சென்றாலும் மறுபடியும் நாமே அந்த வேலையை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாவதால் தான் இந்த “ஸ்பேஸ்” -” மீ டைம்” என்ற வார்த்தைகள் நம்மிடம் ஒட்டிக்கொண்டன. இல்லையென்றால் அந்த இடத்திற்கு செல்வதையே தவிர்த்தும் விடுவோம்.
தொலைதொடர்பு சாதனங்கள் அன்று இல்லாததால் குடும்பத்தினர் இடையே பற்றுதல் இருந்தது. அதுவும் தனக்கென மீ டைமை யாரும் எதிர்பார்த்தது இல்லை. “ஸ்பேஸ்” என்ற ஒன்று இல்லாமலே கூட பல சாதனையாளர்கள் உருவாகியிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவரவர் குடும்பத்தினர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். குடும்பத்துக்குள்ளேயும் உறவுக்குள்ளேயும் தற்போது இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்று அவரவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து குடும்பத்தில் குழப்பம் வருவதும் சகஜமாகிவிட்டது என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
என் சிறு வயதில் ஒரு சில சிறுகதைகளை எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் அது எங்கே போனது என்று எனக்கு தெரியவில்லை. “ விண்மீன்கள்” என்ற குழுவின் அடித்தளமாக உள்ள “திருமதி அகிலா தேவி குமரன்” ஆல் மீண்டும் உயிர் பெற்று என் எழுத்து தொடர்கிறது. இடைப்பட்ட காலங்களில் கூட நான் இப்படி எழுதியதும் இல்லை, எழுதுவேன் என்று நினைத்து பார்த்ததும் இல்லை. என்னுடைய விருப்பம் வேறு பலவற்றில் இருந்தது.
என்னை பொறுத்தவரை நம்முடைய “மீ டைம்” , “ ஸ்பேஸ்” என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தாமாகவே நம்மிடம் வந்து சேரும். அதற்கு சற்று பொறுமையும் தேவை. எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். கடமைகள் காத்திருக்கும் நேரத்தில் எனக்காக நேரத்தை நான் நிச்சயம் ஒதுக்கவேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இன்று நாம் “மீ டைம்” என்று பேசி, ,நாளை நம் பிள்ளைகள் அதே வார்த்தையை நம்மிடம் சொல்லும் பொழுது நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பதும் சந்தேகமே!
நீங்கள் கூட கேட்கலாம் “ நமக்காக நேரம் ஒதுக்குவது தவறா?” என்று. தவறு இல்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் நாம் கடமைக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த மீ டைமும் உங்களுக்கு நாள் முழுதும் கிடைத்தால் குழப்பம் வரும். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமலும் போய்விடும். எதுவும் அளவோடு இருந்தாலே நன்மை பயக்கும்.
என்னுடைய கருத்தை மட்டுமே நான் பகிர்ந்தேன். இதனால் யாரையும் நான் புண்படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து.

No comments:
Post a Comment