தாவணி
தற்போதைய பெண் பிள்ளைகளுக்கு தாவணி உடுத்துவது என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு சுடிதாரும் முழு நீள ஃப்ராக் கும் இடம் பெற்று விட்டது.
அந்நாளில் கன்னிப் பெண்களுக்கு அடையாளம் தந்தது இந்த தாவணி தான்.
ஒரு புடவையை இரண்டாக கிழித்து இரு பெண் குழந்தைகளுக்கு அதை உடுத்த கொடுப்பது வழக்கம். ஆனால் நாகரீகம் மாற ஒரே வண்ணம் கொண்ட தாவணி உருவானது.
தாவணையானது அமெரிக்கன் ஜார்ஜெட் , நைலக்ஸ் மற்றும் காட்டன் என பல ரகங்களில் இருந்தது.
மேலும் அன்றைய வீட்டு பெண் பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான பூப்போட்ட சட்டையும் பாவாடையும் எடுத்து தைப்பது வழக்கம். ஒரே மாதிரி உள்ளது என்பதை பற்றி அவர்கள் நினைத்து கவலைப்பட மாட்டார்கள். இதற்கு வீட்டின் ஏழ்மையும் காரணமாக இருந்தது. வீட்டில் நாலைந்து பெண் பிள்ளைகள் இருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதே கஷ்டம். பிறகு எங்கு உடுப்புக்கு போக?
புடவையின் சரி பாதி அளவு என்பதால் நிறைய கொசுவங்களை வைத்து உடுத்தும் தாவணி காண்போரை வசீகரிக்கும். விழாக்களில் தாவணியை உடுத்தும் பெண்கள் இளைஞர்களுக்கு தேவதைகளாக தெரிவர்.
தற்போது இந்த தாவணி அணிவது சுருங்கி போய்விட்டது . பாவாடை சட்டைக்கு பொருத்தமாக உடுத்தும் தாவணி பார்ப்பதற்கு மிகவும் அழகு. அதுவும் மடிப்பு வைத்து அழகாக ஊக்கு குத்த்ப்பட்டு பின்னால் அழகான "வி " வடிவம் வரும் வரை அதனை மறுபடியும் மறுபடியும் சரி செய்து குத்துவதும் அழகே. தாவணிக்கு சரியாக ரிப்பன் வைத்து இரட்டை சடை போட்டு ஒரு முழம் கனகாம்பரமும் மல்லிப்பூவும் சேர்த்து , காதில் ஜிமிக்கி கம்மல் அணிந்து கழுத்தில் ஒரு மாலை சகிதமாய் அணிந்தும் வலம் வந்த பெண்களின் அழகுக்கு எல்லையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாவணி என்றும் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் உடுப்பே என்பதில் ஐயமில்லை.
பள்ளியில் சீருடை வந்த பிறகு வண்ண வண்ண தாவணிகள் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது காணாமற் போய்விட்டது.
முதன் முதலில் தாவணி அணியும் போது அதை சரி செய்வதிலேயே நேரம் போய்விடும். அவ்வாறு வகுப்பிற்கு செல்லும் மாணவியரை " இந்த வருடம் இப்படியே ஓட்டி விடு" என்று கிண்டல் செய்வதும் உண்டு.
நம் விழா காலங்களில் பெண்களுக்கு தாவணி என்பது மட்டுமே அடையாளமாக இருந்தது என்றாலும் தற்போது அந்த அழகை காண மனம் ஏங்குகிறது.
காணும் கோணங்கள் மாறிவிட்டதால் பாதுகாப்பு என்று வரும் பொழுது சுடிதார் தான் இன்றைய பெண்களின் விருப்பமாகவும் அடையாளமாகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமை என்றால் பட்டுப் பாவாடை தாவணியாக வலம் வருவது பெண்களின் கோட்பாடாக இருந்தது. அதுவே இளைஞர்களுக்கு விருந்துக்கு விருந்தாகவே அமைந்திருந்தது. நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஆடையான தாவணியை நம் வீட்டு பெண்களுக்கு வாங்கி கொடுத்து இல்ல விழாக்களில் அணிய செய்வதும் நம் கடமையே.

No comments:
Post a Comment