Tuesday, June 13, 2023

அண்ணி கொடுத்த காபி by VeenaShankar

 


அண்ணி கொடுத்த காஃபி


"தலைவலி மண்டையை பிளக்கிறதே. கொஞ்சம் காஃபி கொடுத்தால் நன்றாக இருக்குமே " என்று சொன்ன நளினியிடம் "காஃபி பொடி தீர்ந்து போய்விட்டது " என்று சொன்னாள் அவள் அண்ணி கயல்.


" அண்ணி பக்கத்து வீட்டு மாமியிடம் போய் ஒரு கிண்ணம் காஃபி பொடி வாங்கி வாருங்களேன் " என்று ஆலோசனை தந்தாள் நளினி. " இல்லம்மா அந்த மாமி இப்போ தான் ஊருக்கு கிளம்பி போனாங்க" என்று சொன்ன கயலிடம் "அப்படின்னா எதிர்த்த வீட்டு மாமியிடம் வாங்கி வாருங்களேன் " என்று மறுபடியும் சொல்ல, "எனக்கும் அந்த மாமிக்கும் போன வாரம் தெருக்குழாயில் வைத்து சண்டை. அது நடந்ததிலிருந்து அவர்களிடம் நான் பேசுவதில்லை" என்று சொல்லிவிட்டாள் கயல். "சரி பரவாயில்லை. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் விமலாவிடம்... " என்று நளினி இழுக்க, " சரி! சரி ! விமலாவிடம் வாங்கி வருகிறேன். ஆனால் வீட்டில் பால் இல்லையே," என்று கயல் சொல்ல , "வரும்போது ஒரு பாக்கெட் பால் வாங்கி வாருங்களேன். நாம் இருவருமே காஃபி சாப்பிடலாம் " என்று நளினி சொல்ல, "சரிம்மா ! என்றவள் சிறிது நேரம் கழித்து காஃபி பொடி , பால் சகிதமாய் வீட்டிற்கு வநதாள் கயல். 


 அப்பாடா ஐந்து நிமிடத்தில் காஃபி வந்துவிடும். தலைவலி ஓரளவுக்கு குறையும் என்று நளினி நினைத்துக்கொண்டு இருக்கையில் மறுபடியும் அண்ணி கயல் , "நளினி! கேஸ் தீர்ந்து போயிருச்சி" என்று சொல்ல, தலையில் கை வைத்தபடியே "எனக்கு காபியும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம் . நான் எங்க வீட்டிலேயே குடிச்சிக்குறேன்" என்று சொல்லி தெருவில் நடந்தாள், காலையிலேயே தன் கணவனோடு சண்டை போட்டு அண்ணன் வீட்டிற்கு வந்த நளினி.  


இரு தெருக்கள் தள்ளி தான் அவள் வீடு . இருந்தாலும் முக்கால்வாசி நேரமும் அண்ணன் அண்ணி என்று இவர்கள் பின்னாலே சுற்றி கொண்டிருக்கும் நளினியை மாற்ற முடியாமல் தவித்தாள் அவள் அண்ணி கயல்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...