Saturday, June 3, 2023

மாமியின் அறிவுரை by Veena Shankar

 


மாமியின் அறிவுரை


பல வருடங்களாக அக்ரஹாரத்தில் வசிப்பதால் என்னவோ சுமிக்கு மாமி பாஷை அத்துப்பிடி. அவர்களிடம் பேசும் போது அவர்களைப் போலவே பேசுவாள்.  


தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் சைலஜா மாமி தான் அவளுக்கு எல்லாமே. தன் கணவனுக்கு அடுத்தபடியாக அவள் மதிப்பது அந்த மாமியை தான் . அவள் திருமணமாகி வந்தது முதல் பெண் குழந்தைகள் பிறந்தும் இன்று வரை பதினைந்து வருடங்களாக சைலஜா மாமியின் அறிவுரை படித்தான் பெண் பிள்ளைகளை வளர்த்தாள் சுமி.


சுமிக்கு சுபா, சரண்யா என்ற இரட்டை பெண் குழந்தைகள். தற்போது அவர்கள் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவிற்கு காத்திருக்க சைலஜா மாமி அவர்களை ஏதாவது படிக்க சொல்லி அறிவுறுத்தினாள். கொஞ்ச நாள் கழித்து தேர்வு முடிவுகள் வர சரண்யா நல்ல மதிப்பெண்களோடும் சுபா அவளை விட சற்றே குறைவான மதிப்பெண்களோடும் தேர்ச்சி பெற்றனர். இது சரண்யாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும் சுபாவிற்கு சரண்யாவின் மீது லேசாக பொறாமை கொள்ள வைத்தது. 


மதிப்பெண்கள் குறைந்ததால் சுபாவை சுமி திட்டி கொண்டே இருந்தாள். 

 சுபாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த வேதனையோடு சுபா அழுது கொண்டே இருக்க , அதை பார்த்து மனம் தாளாத சரண்யா அவளை சமாதானம் படுத்த முயன்றாலும் அவள் மீது கோபம் கொண்டாள் சுபா.


 இதை தன் அம்மாவிடம் போய் சரண்யா சொல்ல, அவள் மாமியிடம் ஆலோசனை கேட்டாள். இப்படியே போனால் சுபா மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவாள் என்று சொன்ன மாமி தான் நேரடியாக சுபாவிடம் பேசுவதாகவும் சொன்னாள்.


மறுநாள் வீட்டுக்கு வந்த மாமியைப் பார்த்ததும் கட்டி அணைத்து சுபா அழுதாள். ஏதோ இனம் புரியாத அன்பு அவளிடம் மாமிக்கு. அவள் வாய் பேச முடியாதவள் என்பதாலா? தெரியாமலே சுபாவை அரவணைத்து தேற்றினாள் மாமி. மேலும் "நீ மதிப்பெண் குறைந்ததற்காக அழாதே! நீயும் நன்கு படித்தாய். ஏதோ ஒரு சமயங்களில் இப்படி நடப்பது சகஜம்தான். உதாரணமாக நீ மாடிப்படி ஏறும்போது கவனமாக தானே ஏறுவாய் . ஒரு வேளை அதில் தண்ணீர் இருந்து அதை நீ கவனிக்காமல் ஏறியதால் வழுக்கி விழுநதுள்ளாய். . நீ தண்ணீரை கவனித்து ஏறியிருந்தால் தாண்டி இருப்பாய் இல்லை என்றால் அதை துடைத்து ஏறி இருப்பாய் . ஆனால் சரண்யா படியில் இருந்த தண்ணீரை கவனித்து ஏறி உள்ளாள். அது போல் தான் வாழ்க்கையும் நாம் கவனிக்காத போது நம்மை தாழ்த்தி விடும் . 


அது உன்னுடைய குறையும் அல்ல. இனிமேல் கவனம் காட்டி உன் மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடு. போனது போகட்டும்." என்று சொல்லி கொண்டிருக்கும் போதே மரியாதை நிமித்தமாக மாமியின் காலில் விழுந்து சேவித்த சுபாவிற்கு ஆசீர்வாதம் செய்தாள் சைலஜா மாமி.  


இனி தான் பார்த்து நடந்து கொள்வதாக மாமிக்கு வாக்கு கொடுத்த சுபா சரண்யாவையும் பார்த்து புன்னகை செய்து, தன் கட்டை விரலை உயர்த்த, அம்மா சுமி மாமியின் அறிவுரைக்கு கண்ணால் நன்றி சொன்னாள்.


ஒருவரை ஏற்றி விடுவது மட்டுமல்ல நல்ல பண்பு . தவறும் பொழுது தாங்குவதும் அடைக்கலம் தந்து ஆலோசனை தருவதும் சிறந்த பண்பேயாகும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...