Friday, June 23, 2023

அறிவுரை அவசியமோ by Veena Shankar

 


அறிவுரை அவசியமோ?


அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள் மீனாட்சி என்ற மினி. பேருந்து நிறுத்தத்தில் காலை வேளை அவலங்கள் சொல்லி மாளாது. பாதி மயங்கிய நிலையில் வரும் மாநகர பேருந்து, ஒரு எறும்பை ஏற்றினால் கூட கவிழ்ந்துவிடும் அளவிற்கு கூட்டம் நிறைந்தே வரும். ஆனால் அன்று என்னவோ விதிவிலக்கு போல என நினைத்து கொண்டாள் மீனாட்சி. 


அப்போதே பேருந்து வர, ஏறி அமர்ந்து தான் போக வேண்டிய இடத்திற்கு பயணச்சீட்டு எடுத்தாள். 


மித வேக பயணத்திலும் அவளுக்கு தூக்கம் சொக்க, ஏதோ ஒரு நிறுத்தம் வர, இரு வயதான மூதாட்டிகள் அவளை தள்ளி உட்காரச் சொல்லி அமர்ந்தனர். தங்களுக்குள் அதிகம் பேசிக் கொண்டே வந்தாலும் அதில் ஒரு மூதாட்டி மீனாட்சியை ஏற இறங்க நோட்டமிட்டாள்.


தன்னுடைய சக மூதாட்டியிடம் " இந்த காலத்து பிள்ளைகள் காதுல, கழுத்துல ஏன் ஒரு மூக்குத்தி, கொலுசு கூட போடமாட்டேங்குதுங்களே! பூ வைக்கவும் மலைக்குதுங்களே! எப்படித்தான் ஆத்தா அப்பன் இதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுறாங்களோ! தெரியல!" என மீனாட்சியை மட்டுமல்லாது அவளுடைய பெற்றோரையும் வம்புக்கு இழுத்தாள். அதற்கு ஏதும் பேசாமலே அமர்ந்திருந்தாள் மீனாட்சி. 


பேசிய மூதாட்டியோ மீனாட்சி பக்கம் திரும்பி " சிறுசா கூட ஏதாவது காதில் போட்டு கொள்ளாலாமில்ல. இப்படி மூழியா வெளியே வரக் கூடாது ஆத்தா! " என்று சொல்ல, சற்றே கோபம் வந்தாலும் அதை அடக்கி கொண்டு, " இல்ல ஆயா, நான் பரீட்சை எழுத போறேன். அங்கே இதெல்லாம் போட்டுட்டு போனாக்கா பரீட்சை எழுத விடமாட்டங்க" என்று சொன்னதும் " இது என்னடி புதுசா இருக்கு" என்று மோவாயை வெட்டினாள். " உங்க பேத்தி எப்படி?" என்று மறுபடியும் மீனாட்சி மூதாட்டியிடம் கேள்வி கேட்க, " எங்க வூட்டலையும் இப்படித்தான் " என்று பதிலளித்தாள். மேலும் மீனாட்சியே தொடர்ந்தாள். " ஆயா! எனக்கு அப்பா அம்மா வச்ச பேரு மினி. ஆனா அந்த பேரு எனக்கு பிடிக்காததால் மீனாட்சின்னு மாத்தக்கிட்டேன். அதுவுமில்லாம நான் தாவணி உடுத்தி, நீங்க சொன்ன அத்தனையும் போட்டுகிட்டு கோயிலுக்கு போயிட்டு சாமிகிட்ட பரீட்சை நல்லா எழுதணும்னு வேண்டிகிட்டு, போட்ட அத்தனை நகைகளையும் கழட்டி வைச்சிட்டு பரீட்சை எழுத புறப்பட்டிருக்கேன்." என்று சொல்லவும் வாயடைத்து குனிந்தனர் மூதாட்டிகள்.  


பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது. அதை நம் வீட்டில் நடைமுறையாக்குவதென்பது சற்றே கடினம் தான். காலம் அறியா இப்படிபட்ட அறிவுரையும் அவசியமோ?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...