புறக்கணிப்பு
தேர்வு கண்காணிப்பு பணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அன்று சீக்கிரமாகவே எழுந்து பல வேலைகளை தலையில் சுமந்து ஒவ்வொன்றாக முடித்து கிளம்பினாள் அவள். பேருந்து நிறுத்தத்திற்கு அவள் வரவும் பேருந்தும் சரியாக வந்து நிற்க, அதில் ஏறி அமர்ந்தாள். முன்பகுதியில் நின்றிருந்த நடத்துனர் இவளிடம் எங்கே போகவேண்டும் என்று கேட்க நிறுத்தத்தை சொல்லி பயணச்சீட்டை வாங்க வேண்டி காசுக்காக கைப்பையை துழாவினாள். எப்போதும் வேலைக்கு செல்லும் வழித்தடத்திற்கு பாஸ் வைத்திருப்பதால் சில்லறை தேவைப்பட்டதில்லை அவளிற்கு. நடத்துனர் அவசரபடுத்த, அவள் பர்ஸை வீட்டிலேயே வைத்திருந்தது நினைவுக்கு வர அனைவரின் முன்னும் புழு போல நெளிந்தாள் அவள்.
இன்று ரேஷன் கடைக்கு போக வேண்டுமென்று குடும்ப அட்டையை வெளியே எடுத்தவள் பர்ஸை அங்கேயே வைத்தது நினைவுக்கு வர, விசயத்தை நடத்துனரிடம் சொல்ல, அவர் கறாராக பேசினார். இருந்தாலும் தான் குறிப்பிட்ட பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் தன் கணவன் நடத்தும் நிறுவனத்தின் பெயரை சொல்லியும் நடத்துனர் நம்பவில்லை அவளை.
வேறு வழியில்லாமல் வரும் நிறுத்தத்தில் அவளை இறங்க சொன்னார். மனிதாபிமானம் கொண்ட நானும் மற்றும் சிலரும் அவளுடைய பயணச் சீட்டுக்கான தொகையை பகிர்ந்து கொள்ள கண்ணீரில் நன்றி சொன்னாள் அவள்.
அடுத்த கட்டத்திற்கு பேருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. ஊரில் இத்தனை நாள் எனக்கு செல்வாக்கு அதிகம் என்று செருக்கோடு திரிந்து கொண்டிருந்த சக பயணியான எனக்கும் அன்று புத்தி வந்தது.
எதிலும் சரியானதை கடைபிடிக்கும் என் மனைவி, என் செல்வாக்கை எப்போதும் பயன்படுத்த மாட்டாள். காசு பணம் நிறைய இருந்தும் தன் கையால் உழைக்க வேண்டும் என்று சொல்லி வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறாள். ஆனால் இன்றளவும் என் பெயருக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்பதால் என்னுடைய பணத்திலே தான் எல்லா செலவுகளையும் செய்வாள். அவளுடைய சம்பளத்தை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விடுவாள். இதைப்பற்றி நானும் அவளுடன் ஒருநாளும் கேட்டதும் இல்லை.
ஒருமுறை இப்படித்தான் தான் மறந்து விட்ட கைப்பையை எடுக்க அவள் வீட்டிற்கு வந்த போது நானும், என் பெயரையோ கடையையோ சொல்ல வேண்டியது தானே? பயணச்சீட்டு வாங்காமல் கூட நீ பயணிக்கலாம் என்று நான் சொன்னதற்கு உங்களுக்கு அந்த நிலைமை வந்தால் தெரியும் என்று சொல்லி மறுபடியும் கைப்பையோடு நடந்தாள்.
பலமுறை இப்படி நடக்க எங்கும் எப்போதும் அவள் என் பெயரை சொல்லாமல் நிராகரித்தது ஏன் என்று இன்று புரிந்தது எனக்கு. அவள் சொன்னதால் இன்று பேருந்தில் பயணப்பட்டேன். ஆனால் என் முதல் பயணித்திலேயே இப்படி நடந்ததும் எனக்கு மனைவி சொன்ன உண்மை நிலையும் அவள் என் செல்வாக்கை புறக்கணித்தது சரியென புரிந்தது.
எதுவும் நமக்கு சொந்தமில்லை. செல்வாக்கு உட்பட.

No comments:
Post a Comment