மனதின் புலம்பல்
சிறு வயதிலேயே ஸ்ரீதேவிக்கு பூ கட்ட அவள் பாட்டி சொல்லி கொடுத்திருந்தார். அதுவும் அவளுக்கு பூ கட்டுவதென்றால் கொள்ளை பிரியம். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று பலரும் நினைத்ததுண்டு. தனக்கு கிடைக்கும் நேரத்தில் பூ கட்டுவாள். இதே வழக்கம் அவளுக்கு திருமணம் ஆன பின்னும் தொடர்ந்தது . தன் தெருவில் தானே பல பூச்செடிகளை நட்டு வைத்து பூ வரும் வரை காத்திருந்தாள். அதில் கிடைக்கும் எல்லா பூக்களையும் தானே தொடுத்து இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டாள். அவளுடைய ஆசையானது நாளடைவில் அதிகமானது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பூக்களை பறித்து விடுவரோ என்று எண்ணி காவல் காத்து கொண்டே இருப்பாள். பலவகையான பூக்களையும் பறித்து கட்டுவதையே வழக்கமாகக் கொண்ட அவள், யாரையும் பூக்கள் எடுக்கவும் அனுமதிக்க மாட்டாள். இதனால் தான் வசித்து வந்த தெருவில் பலரின் வெறுப்பை சம்பாதித்தாள்.
நன்றாக பழகி வந்த ஶ்ரீதேவி திடீரென்று இப்படி ஏன் மாறினாள் என நினைத்தனர் அக்கம்பக்கத்தினர்.
பூக்களை எல்லாம் வகை வகையாக பிரித்து அதை தொடுக்க இறைவனுக்கு சமர்பிப்பதில் நாட்டம் கொண்டாள். அந்த மாலைகளை தன் கையால் கோயிலுக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததில்லை அவளிடம். இப்படியாக தன் வேலைகளுக்கு நடுவே தொடுத்து கொடுக்க, அவளுக்கு கையில் வலி எடுக்க மருத்துவரிடம் சென்றாள். அவளை பரிசோதித்த மருத்துவர் , அவளிடம் பூ கட்டும் வழக்கத்தை நிறுத்த சொன்னார். அதனையும் மீறி அவள் பூ தொடுக்க அவளுடைய வீட்டு வேலைகள் எல்லாம் கிடப்பில் கிடக்க, தன் கணவனையும் குழந்தைகளையும் ஒத்தாசைக்கு அழைக்க, சிலவற்றை மட்டும் செய்து அவர்கள் ஒதுங்கி விட, அவர்களை கடிந்து கொண்டாள்.
இதற்கிடையே ஶ்ரீதேவிக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் வந்து சேர்ந்தது. இதனையே காரணம் காட்டி வேலைக்கு ஆள் ஒருவளை நியமித்தாள். மேலும் அவளுடைய வேதனையை வீட்டிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லியும் "எனக்கு மட்டுமா நான் சாமியை வேண்டிக்கொண்டு பூ கட்டுகிறேன். நம் மொத்த குடும்பத்திற்கும் தானே. அதனால் நீங்களும் என்னுடனே பூ கட்டுவதில் பங்கெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்ல அதுவரை அமைதியாய் இருந்த கணவனும் பிள்ளைகளும் அவளை திட்டி தீர்த்தனர். கணவன் ஒரு படி மேலே போய் இனி அவள் பூ கட்டக்கூடாது என்று சொல்ல, இத்தனை நாள் பூ கட்டி வந்த அவளுக்கு வாழ்வில் சோதனை வரும் என்று அவள் சொல்ல, அதனால் சாமி நம்மை சோதிக்கமாட்டார். அதையும் மீறி ஏதாவது நடந்தால் அது நம் விதிப்பயன் என்று சொன்னான் ஶ்ரீதேவியின் கணவன். நம்மால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவுதான் செய்ய வேண்டும் நம் சக்திக்கு மீறி எதையும் செய்ய இயலாது. " உன்னால் முடிந்தால் கட்டு அடுத்தவரை பழிக்காதே?" என்று கத்தி அலுவலகத்துக்கு புறப்பட்டான்.
எந்த ஒரு செயலையும் விருப்பத்தோடு கற்றுக்கொண்டால் அது எளிதாக நம் வசம் வந்துவிடும். அதற்காக அடுத்தவரை நிர்ப்பந்திப்பதும் பழிப்பதும் கூடாது. முடிவில்லா இந்த சிந்தனையால் மனநோய்க்கு வழி கோலும்.

சரியா சொன்னீங்க நம்மால் முடிந்ததை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் முக்கியமாக இறை உணர்வை தேடும் பொழுது அடுத்தவரை எதிர்பார்க்கக் கூடாது - நன்று வீணா
ReplyDeleteநன்றி சகோதரரே
Delete