Friday, February 2, 2024

வடையும் சுண்டலும் by Veena Shankar

 


வடையும் சுண்டலும்


" அப்பா! என்ன சித்திரை வெயில் இப்படி கொளுத்துது? என்று சொல்லிக் கொண்டே தன் முகத்தை முந்தானையால் துடைத்தாள் ராணி. வெயிலில் நொந்து போயிருந்த அவள் ஒரு மர நிழலை தேட, மரத்திற்கு அடியில் பல இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருந்ததை பார்த்து கடைசியாக , இரு வாகனங்களுக்கு இடையே கொஞ்சம் இடம் இருப்பதை அறிந்து தன் தலை பாரத்தையும் தூக்கு சட்டியையும் கீழே வைத்தாள். எப்போதும் தலையில் வடையும் கையில் சுண்டலையும் சுமப்பது அவள் வழக்கம் தான் என்றாலும் கொல்லும் வெயில் அவளை நிலை குலையத்தான் வைத்தது.


அப்போது தன் வாகனத்தை எடுக்க வேண்டி அங்கே வந்த சுதிர், ராணியின் உருவத்தையும் களைப்பையும் பார்த்து, "டீ வேணுமா பாட்டி? நான் வாங்கி தரட்டா , அசதியா இருக்கியே? " என அன்போடு விசாரித்ததில் ராணியின் நெஞ்சம் குளிர்ந்தது. " பத்து மணிக்கு ஒரு டீ சாப்பிடுவேன். பிறகு மதிய சாப்பாடு தான். இடையில் ஏதும் சாப்பிட மாட்டேன் " என்று கறாராக ராணி சொன்னதும் ஆச்சரியப்பட்டு போனான் சுதிர். ஓசியென்றால் தனக்கும் தன் அப்பனுக்கும் ஒன்று வாங்கும் இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆள்? என்று நினைத்தான். " சரி பாட்டி இந்த வெயில்ல இத போய் ஏன் விக்கிற? எங்கே விற்குற? உனக்கு என்ன வயசாகுது? " என தன் கேள்விகளை அடுக்கினான் சுதிர். 


 அதற்கு அவள், அங்கே பக்கத்தில் இருக்கும் ஆபீஸ்களுக்கு விற்பதாகவும் சொல்ல, " என் ஆபிசும் பக்கத்துல தான் இருக்கு. நீ ஒரு தடவை கூட அங்க வரவே இல்லையே? " என்று கேட்டுக் கொண்டே அவளிடம் வடை, சுண்டலை வாங்கி சுவைத்தவன், சுவையில் மயங்கினான்.  


தன் புருவங்களை சுருக்கிய ராணி, அவனைப் பார்த்து 

 " உங்க ஆபீஸ் எது தம்பி ?" என்று கேட்க, எதிரே உள்ள இடத்தை காண்பித்தான்.

" ஓ! அதுவா? அந்த வாட்ச்மேன் என்னை உள்ளேயே விடமாட்டேங்கிறான். ஏதோ பெரிய ஆபிசாம்." என வாட்ச்மேனை ஏக வசனத்தில் பொரிந்து தள்ளினாள். மேலும் "ஆமா தம்பி! இன்னும் நாலஞ்சு ஆபீசு இருக்கு இது மாதிரி. இந்த கிழவி விக்கிறதை வாங்க மாட்டாம, என்னமோ சுவிக்கி யாம் அதுல ஆடரு பண்ணி வாங்கி சாப்பிடுறாங்க. இல்லைனா நல்லா அழகா கண்ணாடி கதவு வச்ச இடத்துல தான் போய் சாப்பிடுவாங்க." என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.


" உனக்கு என்ன வயசு ஆச்சு? ஏன் பிள்ளைகள் சோறு போடலையா? " என கேட்டதும் " போப்பா! நீ ஒண்ணு. நீ நின்னு பேசுற மாதிரி கூட அவங்களுக்கு என்கிட்டயும் என் ஆளுகிட்டையும் பேச நேரமில்லை. நான் பெத்ததுகளே எங்கள புரிஞ்சுக்கல. வந்தவங்களை பற்றி நாங்க பேச முடியுமா? " என தன் மருமகள்களை விட்டு கொடுக்காமல் பேசிய விதம் சுதிரை புருவம் உயர்த்த செய்தது. 


" அறுபத்தஞ்சு வயசு வரைக்கும் என் ஆளு தான் எனக்கு உழச்சு போட்டது. இப்ப அதுக்கு கால் நோவு வந்ததால அது பாரத்தை நான் சுமக்கிறேன்" என தன் கதையை சுருக்கமாகச் சொல்லி, சுதிர் கொடுத்த காசை பர்ஸில் வைத்தாள்.


" உனக்கு இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என சுதிர் கேட்க , "இன்னா, எனக்கு இரண்டு நேரமும் இத்த வித்தா கடக்காரரு சம்பளமா எனக்கு முன்னூறு ரூபா தருவாரு. நான் இத்த வூட்ல போட்டு விக்கிறது கிடையாது ." என்று சுதிரின் அடுத்த கேள்விக்கும் அழகாய் பதில் தந்தாள். 


இந்த சம்பளம் அதிகமாச்சே? என்று நினைத்தபடியே , அவளிடம் ஏதும் சொல்லிக் கொள்ளாமல் " எந்த கடையில உனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க? எனக்கு காமி" என்று கதிர் கேட்டதும் 

" என்னப்பா! நீ எனக்கு போட்டியா நாளைக்கு களத்தில இறங்க போறியா ? " என்று டிப் டாப்பான உடையில் இருந்த சுதிரை பார்த்து நக்கலாக கேட்டாள் ராணி. 


சிரித்தபடியே "இந்த வெயில்ல இத செய்வதற்கு பதில் வேறு ஏதாவது ஒரு வீட்ல வேலை பார்க்கலாம் இல்ல ?" என அவன் ராணியை கேட்க, "ஆமா! அதுல வர துட்டு எங்களுக்கு பத்தாது. அதுவும் தினோம் வேலைக்கு போகணும். அடிக்கடி அதுக்கு உடம்புக்கு வந்திடும். அப்போ என்னால போக முடியாது. வேலை கொடுக்குறவங்க நம்மலாண்ட மூஞ்சிய காமிப்பாங்க. அதெல்லாம் ரிஸ்க் பா!" என்று சொன்னதும் இங்கிலீஷ்ல பேசும் ராணியை கண்டு வியந்தான் சுதிர். 


மேலும் அவள் முதலாளியை பார்க்க நினைத்து, அவளுடனே வருவதாக சொல்ல, அவளும் சம்மதம் சொல்ல, அவள் வடை , சுண்டல் விற்று வரும் வரை காத்திருந்தான்.  


"அவள் முதலாளியை சந்திப்பதில் சுதிருக்கு என்ன அவ்வளவு ஆவல்?"


ராணியும் அவள் முதலாளியை காண்பிக்க, கண்ணாடி கதவின் ஊடே சுதிர் அவரை பார்க்க, அங்கே வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்ததால் அவர் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வரும் வரை சுதிர் வெளியே காத்திருக்க, ராணி மட்டும் உள்ளே சென்று காலி தட்டுக்களை கொடுத்து அன்றைய கூலியை பெற்றுக் கொண்டு, சுதிர் என்ற ஒருவர் அவரை காண வந்திருப்பதாக முதலாளியுடம் சொல்ல, அவரும் சுதிரை உள்ளே வர அழைத்தார். 


 அவரிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்தவன், சிறிது நேரம் கழித்து அந்த பாட்டி விற்கும் வடை , சுண்டலுக்கும் அவள் சம்பளத்துக்குமே விற்கும் காசு சரியாய் போய்விடுமே, அதில் என்ன லாபம் இருக்கிறது உங்களுக்கு? " என்று கடை முதலாளியிடம் நேரடியாக கேட்டான். அதற்கு அவர் , ராணியின் விற்பனை மூலம் எந்த லாபத்தையும் தான் எதிர்பார்ப்பதில்லை என்றும் இந்த வயதிலும் பிள்ளைகள் தூர சென்று விட்டாலும் தன் கையை நம்பி வாழும் அவருக்கு உதவ நினைத்ததும் அதுவும் அவர் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வருவார் என்று ராணியை மரியாதையுடன் விளித்ததை கேட்டு சுதிர் ஆச்சரியப்பட்டான். 


 மேலும் கடை முதலாளி, "இந்த வயதில் தான் என் மனைவி , மக்கள் பேச்சைக் கேட்டு என் பெற்றோரை இழந்தேன். என் சொந்த பந்தங்களை இழந்தாலும் என் மனைவியின் கட்டளைப்படி, அவள் இன்று உயிருடன் இல்லையென்றாலும் இன்றளவும் அவள் பெற்றோரை நான் தான் என்னோடு வைத்து அன்போடு பராமரித்து வருகிறேன். என் மனத் திருப்திக்காகத் தான் இந்த அம்மாவிற்கு அவர் வந்து வேலை கேட்டதும் இந்த வேலையை கொடுத்தேன் . அவர் ஏற்கனவே இந்த மாதிரி விற்பனை செய்து வந்ததாக கூற , தினசரி தன்னால் வர முடியாது என்று சொன்னதாலும் அவருக்கு வடை, சுண்டல் விற்பனைக்கு கொடுத்தேன். சொல்லப் போனால் அவர் விற்றாலும் விற்காவிட்டாலும் என் வியாபாரத்தில் தொய்வு இல்லை . ஆனால் இந்த விஷயத்தை இது நாள் வரை அவரிடம் நான் சொன்னதில்லை . நீங்களும் சொல்லி விடாதீர்கள். தன்மானத்திற்காக உழைப்பவர்கள் என்றும் கரிசனத்தை விரும்ப மாட்டார்கள் " என்று சொல்லவும் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி அவருக்கு கும்பிடு போட்டு வெளியேறினான் சுதிர். 


 அவன் மனதில் தன்னால் முடிந்தவரை லாபம் இல்லாவிட்டாலும் இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்த படியே தன் இன்சூரன்ஸ் அலுவலகம் நோக்கி திரும்பினான் சுதிர்.


"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" 


படித்தல் நன்று, படித்ததை கடைப்பிடிப்பது மிக நன்று.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...