மீண்டும் காதல்
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த கிரி, ஒரு வாரம் ஆகியும் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போகாததால் அவன் அம்மா அவனை நச்சரிக்க, ஒரு வழியாக தன் மனைவி அலமேலுவோடு கோயிலுக்கு வந்தான். அது பெரிய கோவில் என்பதால் ஒவ்வொரு சன்னிதியாய் கும்பிட்டு கொண்டிருந்த போது கோயிலின் மறுபுற வாசல் வழியாக சுலேகா எதிர் வர, முதலில் சுலேகா கிரியை பார்த்து சிரிக்க, பதிலுக்கு “யார் இவள்?” என்பது போல் புன்னகை மட்டும் பூத்தான் கிரி. அவன் கண்களின் கேள்விக்கு சுலேகாவே. “ஹலோ கிரி! என்ன? எப்படி இருக்கீங்க? என்னை ஞாபகம் இல்லையா?” என கேட்க எந்த பக்கம் தலை ஆட்டுவது என்று தெரியாமல் விழித்து நின்றான் கிரி. அவன் மனைவி அலமேலுவும் இவள் யார் தன் கணவன் பெயரை சொல்லி உரிமையாய் கூப்பிடுகிறாளே? என சுலேகாவை பார்த்து சிரிக்க மறுத்தாள்.
“ நான் தான் சுலேகா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம மீட் பண்ணி இருக்கிறோம்.” என்று சுலேகா சொல்லவும் “ஆமாம் ஆமாம். ஞாபகம் வந்துவிட்டது. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டு சமாளித்தான் கிரி. “ நான் நல்லா இருக்கேன். இது யாரு உங்க மிஸஸ் ஆ?” என்று கேட்ட சுலேகாவிற்கு “ஆமாம். இது என் வைஃப் அலமேலு.” என்றான். ஆனால் அலமேலு, சுலேகாவை முறைத்து பார்த்தாள். பேச்சை சுருக்கமாய் முடித்துக் கொண்டு “ஓகே. பாய். “ என்று சொல்லி தத்தம் வழிகளில் சென்றனர் இருவரும்.
“ யாருங்க அது? உங்களை பெயர் சொல்லி கூப்பிடுவது?” என்று அலமேலு கேட்டும் அதை காதில் வாங்காமல் அடுத்த சன்னதிக்கு சென்றவன் சுலேகாவா இவள்? ஆளே மாறிவிட்டாளே? எவ்வளவு அழகு? வடித்து வைத்த சிற்பம் போல் மாறிவிட்டாளே? நுனி நாக்கு ஆங்கிலம் தாண்டவம் ஆடுகிறது. அவளை பார்த்ததில் எந்த ஊரில் அவள் இருக்கிறாள் என்பதை கேட்க மறந்து விட்டோமே என்று அவளைப் பார்த்த மயக்கத்தில் கிரி இருக்க, “இந்தாங்க! பிரசாதம் வாங்கிக்கங்க.” என்று ஐயர் பிரசாதத்தை கொடுக்க, தன் நிலை மறந்தவன் உயிர் பெற்றான். அவன் முன் கடுப்பான முகத்தோடு அலமேலு நின்றிருப்பதை உணர்ந்தான். “ என்ன அந்த பொண்ண பார்த்ததிலிருந்து இப்படி ஸ்தம்பித்து போய் நிக்கிறீங்க? யார் அவள்? ‘ என்று அலமேலு மறுபடியும் கேட்க, “அப்புறம் சொல்றேன்” என்று சொல்லி கிரி மௌனம் காத்தான். குற்ற உணர்ச்சி மேலோங்கி நின்றது அவன் மனதில். வீட்டிற்கு திரும்பும் வரை அலமேலுவிடம் பேசாமலேயே வந்தான்.
சுலேகாவும் கிரியும் ஒரே தெருவில் குடியிருந்தாலும் அவனுடைய அத்தையின் மூலமாகத்தான் சுலேகாவை கிரிக்கே தெரியும். “அந்த பொண்ணு எவ்வளவு சுறுசுறுப்பு தெரியுமா? அவளுக்கு தெரியாத விஷயங்களே இல்லை என நினைக்கிறேன். .எந்த சந்தேகமானாலும் அக்கம் பக்கத்தினர் அவள் கிட்ட தான் போய் கேக்குறாங்க. தையல் பழகி இருக்கா. ஆரி, கம்ப்யூட்டரும் தெரியும். கதை, கவிதை எழுதுவா என சுலேகாவின் அருமை பெருமைகளை சொல்லி கிரியின் மனதில் ஆசையை உண்டாக்கினாள். கிரிக்கு சுலேகா பொருத்தமானவள் தான் என்று தன் அண்ணியிடம் சொல்லி அவளை பெண் பார்க்க சொன்னாள். பல கனவுகளோடு சென்ற கிரிக்கு அவளுடைய தோற்றம் ஏமாற்றம் அளிக்க, அவளிடமே நேருக்கு நேர் அவளுடைய தோற்றத்தைப் பற்றி விமர்சிக்க, சுலேகாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு பதில் ஏதும் பேசாமல் அழுதபடியே தன்னுடைய அறைக்கு போனதுதான் கிரி அவளை கடைசியாக பார்த்தது. அதற்குப் பிறகு கிரி அலமேலுவை கை பிடிக்க, அவனுக்கு அமெரிக்காவில் வேலையும் அமைய, தன் மனைவியோடு அங்கே சென்று விட்டான். ஒன்றரை வருடம் கழித்து தான் தற்போது தனது தாயைப் பார்க்க வந்திருக்கிறான். இதெல்லாம் குறும்படமாக அவன் மனதில் ஓடியது.
வீட்டிற்குள் வந்ததும் நேரே தன் அறைக்கு செல்ல, அலமேலு பிரசாதத்தை தன் மாமியாரிடம் கொடுக்க, “ எங்கே கிரியை காணோம்? ஏதாவது வேலை இருக்குன்னு உன்னை தனியா விட்டுட்டு போயிட்டானா?” என கேட்க, “ இல்லையத்தை வந்தவுடன் ரூமுக்கு போய்விட்டார்” என அலமேலு சொல்ல, “ என்ன ஆச்சு? போகும்போது நல்லாத்தானே போனீங்க? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?” என அவர்களை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அம்மா கேட்க, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. கோயில்ல ஒரு பொண்ண பார்த்த பிறகு தான் இப்படி?” என்று அலமேலு சொல்ல, தன் புருவத்தை சற்று உயர்த்தினாள் கிரியின் அம்மா. ஏதோ விஷயம் இருக்கும் போல என நினைத்து சென்று விட்டாள் அலமேலு. சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த கிரியின் அம்மா, கிரியிடம் போய் விசாரித்தாள். “என்னடா? யாரைப் பார்த்த? என்று கேட்க “சுலேகாமா” என்றான். “ சரி! அதுக்கு என்ன இப்ப? அதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. நீ தான் அவளை பிடிக்கலைன்னு சொல்லிட்டு நம்ம அலமேலுவை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அப்புறம் என்ன?” என அதிகாரத்தோடு கேட்க, “அன்று நான் பார்த்த சுலேகா இல்லைமா அவ. தேகத்தில் மெலிந்து, மிக உயரமாய், களை இல்லாத முகமும் சற்று எடுப்பான பற்கள் என இருந்தவள், இப்போ எப்படிமா ரெண்டு வருஷத்துல இவ்வளவு அழகா மாறிட்டா?” என தன் சந்தேகத்தை கேட்டான் கிரி.
சுலேகாவின் வசீகரத்தில் மயங்கிய கிரியை, “அன்னைக்கே சொன்னேன். இந்தப் பெண் அழகாக இருக்கிறாள். உனக்கு ஏற்றவள் தான் என்று. நான் சொல்லியபோதும் அவளை பற்றி அவளிடமே நேருக்கு நேர் சொல்லி அவளை அவமானப்படுத்திட்ட.” என்று நறுக்கு என்று கேட்டாள். தலைகுனிந்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து “அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று கேட்க, “ நீ அப்படி சொன்னதும் மனம் உடைந்து போய் இருந்தவளை ஒரு நாள் நான் கடையில் பார்த்தேன். அப்போது கூட புன்னகை மாறாமல் என்னிடம் பேசியவளுக்கு உன் சார்பாக நான் மன்னிப்பு கேட்டேன். வேறு நல்ல வரன் அவளுக்கு அமையும் என வாழ்த்தும் சொன்னேன். ஆனால் அதை பெருமிதமாக ஏற்றுக் கொண்ட அவள், கம்ப்யூட்டரில் பெரிய படிப்பு படித்து தற்போது பெங்களூரில் பெரிய வேலையில் இருக்கிறாள்.” என்றாள். “அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று மறுபடியும் அவளைப் பற்றி கிரி கேட்க, எரிச்சல் அடைந்தவள் “எத்தனையோ வரன் வந்தும் அதை மறுத்து தான் தனி ஆளாக இருக்கப் போவதாக சொல்லி இன்னும் கன்னியாகவே இருக்கிறாள்.” என்ற அம்மா சொன்னதும் “நான் தப்பு பண்ணிட்டேன் மா” என்று கதறி அழுதான் கிரி.
“ சின்ன வயசுலயிருந்து நீ எப்பவுமே இப்படித்தான். முதலில் வேண்டாம் என்று சொல்லுவ. அப்புறம் அதுவே வேணும்னு அடம் பிடிப்பே. சாதாரண விஷயமா இருந்தா கூட நான் சரின்னு சொல்லி இருப்பேன். ஆனால் இது உன்னுடைய வாழ்க்கை. உனக்கென்று ஒருத்தி வந்தாச்சு. இனிமே பழைய பேச்சோ, நினைவோ இருக்கக்கூடாது. அது குடும்பத்துக்கு நல்லது கிடையாது.” என்று அறிவுரை சொன்னாள் மிக கண்டிப்புடன்.
அம்மா சொன்னது கிரியின் காதில் விழுந்தாலும் சுலேகாவின் மீது மீண்டும் காதல் அரும்ப, கிரியின் அம்மா அவன் அறையில் இருந்து வெளி வரவும் அலமேலு உள்ளே செல்ல, கண்களை துடைத்துக் கொண்டிருந்த கிரியை அதிக காதலுடன் அவனைப் பார்த்தாள் அலமேலு. மாமியார் கிரியிடம் சொன்னது அலமேலுவுக்கு கேட்டது. சுலேகாவை விட தன்னை கிரி கொண்டாட, தான் என்ன செய்ய வேண்டும் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினாள் அலமேலு.
ஒன்றை மறக்க வேண்டுமெனில், இன்னொன்று அதைவிட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையுமா என்பது கேள்விக்குறி தான்.